வெள்ளி, 24 மே, 2013

பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள்விடுதலை


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையிலிருந்து, நல்லெண்ண அடிப்படையில் 45 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பஸ் மூலம் லாகூரிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீனவர்கள் விடுதலை குறித்து இந்திய தூதரகத்திற்கு முறையான தகவல் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை.

மலேசியாவில் நான்கு பேர் கொலை ; 4 தமிழர்களுக்கு மரண தண்டனை


கோலாலம்பூர் : மலேசியாவில், பெண் உட்பட, நான்கு பேரை, கொடூரமான முறையில் கொன்ற, தமிழர்கள் நான்கு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், பத்மனாபன், 44, தில்லை அழகன், 22, மதன், 23, காத்தவராயன், 33. கடந்த, 2010ம் ஆண்டில், அலங்கார பொருட்கள் தயாரிப்பு தொழில் கோடீஸ்வரி, சுசிலாவதி என்பவர், மர்மமான முறையில் மாயமானார்; அவரின் <உதவியாளர்கள், மூவரும் மாயமாகினர். இவர்களின் உடலின் பாகங்கள் மற்றும் உடைந்த எலும்புகள், பத்மனாபனின் பண்ணை வீட்டின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. பத்மனாபனிடம் நடத்திய விசாரணையில், அவர் தான், நான்கு பேரையும் கொலை செய்தது தெரிய வந்தது. சுசிலாவதியிடம் இருந்து பணம் பெற்றிருந்த பத்மனாபன், பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்து, அந்தப் பெண்ணை, தன் பண்ணை வீட்டுக்கு அழைத்து, படுகொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது. சுசிலாவதியை தேடி வந்த அவரின் உதவியாளர்கள், மூன்று பேரையும், ஒவ்வொருவராக, பத்மனாபன் கொலை செய்தது அம்பலமானது. இந்தச் செய்தி, அப்போது, தமிழகம் மற்றும் தமிழர் வாழும் நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மலேசிய ஐகோர்ட் நீதிபதி, அக்தார் தஹிர், பத்மனாபன் மற்றும் அவரின் கூட்டாளிகள், மூன்று பேருக்கும், மரண தண்டனை விதித்து, நேற்று உத்தரவிட்டார்.

பாக்.,குக்கு உதவ தயார் ; சீன பிரதமர் அறிவிப்பு


இஸ்லாமாபாத்: ""பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், சீனா தாராளமாக வழங்கும். பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது, தனக்குத் தானே உதவுவது போன்ற எண்ணத்தை, எங்களுக்கு ஏற்படுத்துகிறது,'' என, சீன பிரதமர், லீ கெகியாங் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, சீன பிரதமர், லீ கெகியாங், "இந்தியாவும், சீனாவும், பங்குதாரர் நாடுகள்; பாரம்பரிய உறவு கொண்ட நாடுகள்; இந்தியாவுக்கு எதிரான, எந்தச் செயலிலும், எப்போதும் சீனா ஈடுபடாது; இரு நாடுகளும் ஒன்றிணைந்தால், உலக நாடுகள் அதிரும்' என, பேசினார். இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம், பாகிஸ்தான் சென்ற கெகியாங், நேற்று அந்நாட்டிலிருந்து, சீனா புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர், பாக்., பார்லிமென்டில் பேசியதாவது: பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே, வர்த்தகம், எரிசக்தி, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பாகிஸ்தானுக்குத் தேவையான, அனைத்து உதவிகளையும், தாராளமாக வழங்க, சீனா தயாராக உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது, தனக்குத் தானே உதவுவது போன்ற எண்ணத்தை, எங்களுக்கு ஏற்படுத்துகிறது. இவ்வாறு, சீன பிரதமர் கூறினார்.

இஷ்ரத் ஜஹான் நிரபராதி : சரத்பவார்!


மும்பை:குஜராத் போலீஸ் போலி என்கவுண்டர் மூலம் கொலைச் செய்த மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் நிரபராதியான கல்லூரி மாணவி என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார். தானேயில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத்பவார் கூறியது:தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி நிரபராதியான இளம்பெண்ணை முதல்வர் நரேந்திரமோடியும், குஜராத் போலீசும் கொலைச் செய்துள்ளனர். தீவிரவாதிகளை துப்பாக்கிக்கு இரையாக்கிய தனது போலீஸ் படையைக் குறித்து பெருமிதம் கொள்வதாக நரேந்திர மோடி கூறியிருந்தார். இஷ்ரத் ஜஹானை கொலைச் செய்த சம்பவம் இன்று குஜராத்அரசையும், போலீசையும் வேட்டையாடுகிறது.இவ்வாறு சரத் பவார் கூறினார்.