வியாழன், 29 நவம்பர், 2012

முதல்வரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் நன்றி!


இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுத் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதச்சார்பற்ற கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின் நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் தீபாவளித் திருநாளில், நடிகர் விஜய் நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘துப்பாக்கி’ என்னும் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இக்காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் கோரின. இதனை அறிந்த முதலமைச்சர்,தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அளித்த உத்திரவினையடுத்து, அரசு உள்துறை செயலாளர், திரைப்படத்தின் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகரன் ஆகியோரை 15.11.2012 அன்று அழைத்து, திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களின் மனம் புண்படும்படி உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை தவிர்க்கும்படியும், இது சம்பந்தமாக இஸ்லாமிய சமூக அமைப்புகளை சார்ந்தவர்களுடன் பேசும்படியும் அறிவுறுத்தினார். முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையினால் துப்பாக்கி படக்குழுவினர், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் விவாதித்து, திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினார்கள். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று (28.11.2012) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, முதலமைச்சர் எடுத்த விரைவு நடவடிக்கையினால், இஸ்லாமிய சமுதாயத்தை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு, தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

தர்ஹா சந்தனக் கூடுக்கு 40 கிலோ சந்தனைக் கட்டை இலவசமாம்! முதல்வரின் உத்தரவை கண்டித்து TNTJ கண்டன அறிக்கை!


நாகூர் தர்காவில் சந்தனக்கூடு நடத்தும் நாளில் சமாதியில் சந்தன கட்டைகள் அரைத்து சந்தனம் பூசுவதற்கு நாகூர் தர்காவின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ். காமில் காதிரி முதல்வரை சந்தித்து சந்தன கட்டைகளை மானியமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்று சந்த கூடு நடக்கும் நாளில் மூன்று லட்சம் மதிப்புள்ள 40 கிலோ சந்தன கட்டையை இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இல்லை. தர்காக்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்பதே நபிகளார் காட்டித் தந்த வழிமுறையாகும். இதற்கு மாற்றமாக இஸ்லாத்தின் பெயரால் சந்தனக்கூடு விழாவுக்கு சந்தனகட்டைகளை வழங்கிய தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன அறிக்கை!

புதன், 28 நவம்பர், 2012

இந்திய உளவுத்துறையின் தலைவராக முதல் முஸ்லிம்


புதுடெல்லி:இண்டலிஜன்ஸ் பீரோவின்(ஐ.பி) தலைமை இயக்குநராக செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம் பதவி யேற்கும்போது திருத்தப்படுவது இந்தியாவின் 125 ஆண்டுகால வரலாறாகும். பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் இருந்தே தொடரும் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த உளவுத்துறையான ஐ.பியின் முதன் முதலாக ஒரு முஸ்லிம் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். நான்கு சீனியர் அதிகாரிகளையும் கடந்து ஆஸிஃப் இப்ராஹீம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்பதவியை ஏற்கவுள்ளார்.
1953-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி கான்பூரில் பிறந்த ஆஸிஃப் இப்ராஹீம், 1977 பேட்சில் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். மத்திய பிரதேச மாநிலத்தில் நியமிக்கப்பட்ட ஆஸிஃப், குவாலியர் எஸ்.பியாக சம்பல் பகுதியில் தனது சேவையை தொடர்ந்தார். ஆஸிஃப், நீதியும், நேர்மையும் கொண்ட அதிகாரி என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர். 1980களில் மத்திய அரசின் டெபுட்டேசனில் டெல்லிக்கு வந்த ஆஸிஃப், எப்பொழுது ஐ.பியில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை. முஸ்லிம்களையும், சீக்கியர்களையும் ஐ.பி புறக்கணிப்பதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. 1993-ஆம் ஆண்டு வரை ஐ.பியிலும், ரா விலும் ஒரு முஸ்லிம் கூட அதிகாரியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிச் செய்திருந்தனர். 1992-ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 1993-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆஸிஃப், ஐ.பியில் சேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜாவீத் கிலானி என்பவர் மட்டுமே அன்று முஸ்லிமாக ஆஸிஃபுடன் பணியாற்றியுள்ளார். கஷ்மீரில் மோதல் தீவிரமடைந்திருந்த காலக்கட்டத்தில் ஆஸிஃப், ஐ.பியின் கஷ்மீர் ஆபரேசன் டெஸ்கில் பணியாற்றியுள்ளார். 2007-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை லண்டனில் இந்திய ஹைக்கமிஷனில் பணியாற்றினார். ஆனால், லண்டனில் அவரது பதவி லண்டன் ஐ.பி ஸ்டேசன் சீஃப் என்பதாகும் என்று த ஹிந்து பத்திரிகை கூறுகிறது. உள்துறை உளவுத்துறையான ஐ.பிக்கு லண்டனில் எதற்கு மையம்? என்பது மர்மமாகவே உள்ளது. ஐ.பி அதிகாரியாக இல்லாவிட்டால் பின்னர் அவர் எப்படி மீண்டும் ஐ.பியில் இணைந்தார்? என்பதும் சந்தேகத்திற்கிடமானது. ஐ.பியில் இந்தியன் முஜாஹிதீனைக் குறித்து அதிகம் தெரிந்த அதிகாரி ஆஸிஃப் இப்ராஹீம் என்று த ஹிந்து கூறுகிறது. ஐ.பியின் கைப்பாவையே இந்தியன் முஜாஹிதீன் என்ற கருத்தும் நிலவுகிறது. 2007-ஆம் ஆண்டிற்கும், 2011-ஆம் ஆண்டிற்கும் இடையேத் தான் இந்தியன் முஜாஹிதீன் குறித்த செய்திகள் அதிகம் வெளியாகின. அக்காலக்கட்டத்தில்தான் ஆஸிஃப் இப்ராஹீம், லண்டனில் பணியாற்றினார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆஸிஃப் லண்டன் ஹைக்கமிஷனில் பணியாற்றினாரா? அல்லது ஐ.பியின் இந்தியன் முஜாஹிதீன் டெஸ்கில் சேவை புரிந்தாரா? என்பது சந்தேகத்திற்கிடமானதே!

நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து, படம் தயாரித்த ஏழு பேருக்கு மரண தண்டனை அறிவிப்பு


வாஷிங்டன்: நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து, படம் தயாரித்த ஏழு பேருக்கு, எகிப்து கோர்ட், மரண தண்டனை அறிவித்துள்ளது. அமெரிக்காவின், நியூயார்க் நகர இரட்டைக் கோபுர தகர்ப்பு நினைவு தினம், செப்., 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில், "முஸ்லிம்களின் அப்பாவிதனம்' என்ற பெயரில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை, கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால், உலகம் முழுவதும் உள்ள, முஸ்லிம்கள் இதற்கு கண்டனம் செய்தனர். எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், இது தொடர்பாக, பெரிய வன்முறை ஏற்பட்டது. லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார். இந்த படத்தை தயாரித்த, எகிப்து நாட்டைச் சேர்ந்த, நகோலா பாஸ்லி உள்ளிட்ட ஏழு கிறிஸ்துவர்கள், தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்த சர்ச்சைக்குரிய படம் தயாரித்தவர்கள் மீதான வழக்கில், கெய்ரோ கிரிமினல் கோர்ட், நேற்று, தீர்ப்பு கூறியது. மத துவேஷம் மற்றும் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக, ஏழு பேருக்கு, மரண தண்டனை அளிப்பதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி துவங்குகிறார் பாக்., அணு விஞ்ஞானி


இஸ்லாமாபாத்: பாக்.,அணு விஞ்ஞானியான ஏ.க்யூ.கான் புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெ‌ற உள்ள பொது தேர்தலில் போட்டியிட முடி வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.76 வயதாகும் கான் பாகிஸ்தான் அணு குண்டு தயாரிப்பதில் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கினார். பின்னர் 2004-ம் ஆண்டு அணுகுண்டு ரகசியத்தை லிபியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு கூறியதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2009-ல் வெளியே வந்த அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானை போன்று தாரிக் இ தகாபூஸ் என்ற பெயரி்ல் புதிய கட்சியை துவக்கியுள்ளார். இவருடன் சேர்ந்து மொத்தம் 19 புதிய கட்சிகள் அடுத்தாண்டு நடை‌பெற உள்ள பொது தேர்தலில் போட்டியிட வேண்டி பதிவு செய்ய காத்திருக்கின்றன. மேலும் இம்ரானின் கட்சியை போன்று மிகப்பெரும் கூட்டத்தை கூட்டுவதும், பேரணி நடத்துவதும் கிடையாது. இருப்பினும் அமைதியான முறையில் கல்வி பயிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பாகிஸ்தானில் இருந்து வெளி வரும் ஆங்கில நாளிதழ்களி்ல் மட்டும் கட்டுரை எழுதி வருகிறார் கான். இந்நிலையி்ல் கானின் கட்சி செய்தி தொடர்பாளர் கூறு்கையில் வரும் மே மாதத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

திங்கள், 12 நவம்பர், 2012

இந்திய கோழி இறக்குமதி:ஓமன் நாட்டில் தடை


துபாய்:கர்நாடக மாநிலத்தில், பறவை காய்ச்சல் காணப்படுவதால்,கோழி, வாத்து போன்றவற்றை இறக்குமதி செய்ய, ஓமன் நாடு தடை விதித்துள்ளது.ஒடிசா, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில், மார்ச் மாதம் பரவிய பறவை காய்ச்சல் நோயால், இந்தியாவிலிருந்து கோழி, வாத்து மற்றும் இவற்றின் இறைச்சியை இறக்குமதி செய்வதை, ஓமன் நாடு தடை விதித்தது.கடந்த செப்டம்பர் மாதம், இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில், பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக, உலக பிராணிகள் நல அமைப்பு உறுதி செய்துள்ளது.இதையடுத்து, இந்தியாவிலிருந்து, கோழி, வாத்து மற்றும் இவற்றின் இறைச்சிகளை இறக்குமதி செய்வதை, தடை செய்வதாக ஓமன் அரசு அறிவித்துள்ளது.இந்த தடை, இந்த வாரம் முதல் அமலுக்கு வருவதாக, ஓமன் நாட்டு விவசாயத் துறை அமைச்சர் ஜபார் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமாருக்கு சர்தாரி தீபாவளி விருந்து


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, அந்நாட்டு அதிபர் ஆசிப்அலி சர்தாரி சிறப்பு தீபாவளி விருந்தளிக்கிறார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிந்து மாகாணத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இஸ்லாமாபாத் செல்கிறார். அவருக்காக அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சிறப்பு தீபாவளி விருந்தளிக்கிறார். >

ஞாயிறு, 11 நவம்பர், 2012

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!17 பேர் பலி!


அங்காரா:துருக்கியின் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 17 பேர் பலியானார்கள். குர்த் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டரும், ராணுவ வீரர்களும் விபத்தில் சிக்கியுள்ளனர். ஸிர்த் மாகாணத்தில் உள்ள பெர்வாரி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. கடுமையான மூடுபனி விபத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததால் தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை துவங்கியுள்ளது.
பலியானவர்களில் 13 பேர் ராணுவ வீரர்கள் ஆவர்.

சார்மினார் அருகே கோயில் கட்ட முயற்சி! ஹைதராபாத்தில் பரபரப்பு :


ஹைதராபாத்:வரலாற்றுச் சிறப்பு மிக்க சார்மினாரின் அருகே கோயில் கட்டுவதை நிறுத்திவைக்க கோரி போராட்டம் நடத்திய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின்(எம்.ஐ.எம்) 5 எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் கடந்த சில தினங்களாக மோதல் சூழல் நீடித்து வருகிறது. எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸியும் கைது செய்யப்பட்டவர்கள் அடங்குவார்.
சார்மினாரின் சுற்றுவட்டாரப் பகுதியில் கோயில் கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்கக் கோரி எம்.ஐ.எம் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கட்சி அளித்த புகாரை தொடர்ந்து சார்மினார் அருகே பழையை நிலை நீடிக்கவேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் கூடாது என்றும் ஆந்திரமாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகும் அதனை மீறும் செயல்கள் நடைபெறுவதாக எம்.ஐ.எம் குற்றம் சாட்டுகிறது. சார்மினார் பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானில் தொழில் துவங்க இந்தியர்களுக்கு கர்ஸாய் அழைப்பு!


புதுடெல்லி:இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய், தனது முதல் நாளில் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானிற்கு தொழில் துவங்க வருவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் கூறியது:இந்தியத் தொழிலதிபர்கள் ஆப்கானில் தொழில் வாய்ப்புகளைத் தேடத் தயங்கக் கூடாது. இந்திய முதலீட்டாளர்களை ஆப்கானிஸ்தான் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் என்று ஆனால் இந்திய தொழிலதிபர் அதற்கான முதல் முயற்சிகளில் இறங்க வேண்டும் என்றார். இன்னும் 2 ஆண்டுகளில் ஆப்கானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர் அந்நாட்டில் தனது செல்வாக்கை அதிகப்படுத்த இந்தியா விரும்புகிறது. ஆனால், பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக ஆப்கானில் தொழில் துவங்க இந்திய தனியார் துறை தயங்கி வருகிறது.

அஸ்ஸாமில் மீண்டும் வன்முறை! – 2 பேர் பலி!


கொக்ராஜர்:அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோசைகோன் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக பத்லன்மாரா கிராமத்தில் நிகழ்ந்த மோதலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒரு இளைஞர் உயிரிழந்தார். போடோ பழங்குடி இன தீவிரவாதிகளுக்கும் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் 90 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஓரளவு கட்டுப்பட்டு நிலைமை சீரடைந்து வரும் நிலையில் இப்போது புதிதாக வன்முறை வெடித்துள்ளது.

சனி, 10 நவம்பர், 2012

ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய ஈரான் தடை


டெக்ரான்: ஆடம்பர பொருட்களை, இறக்குமதி செய்ய ஈரான் தடை விதித்துள்ளது.ஈரான், அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகிக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் பெறுவதற்கும் மற்ற நாடுகளுக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால், ஈரானின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த, வெளிநாட்டு கரன்சிக்கு தற்போது, ஈரானில் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. எனவே, ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம், வெளிநாட்டு கரன்சிகளை மிச்சப்படுத்த, ஈரான் முடிவு செய்துள்ளது.துணிகள், சாக்லேட் போன்ற தின்பண்டங்கள், அழகு சாதன பொருட்கள், என, 2,000 பொருட்கள், இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடை மூலம், ஈரானுக்கு, ஓராண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, வெளிநாட்டு கரன்சி மிச்சமாகும்.இதுகுறித்து, ஈரான் வர்த்தகத் துறை அமைச்சர் ஹமீத் சப்தெல் குறிப்பிடுகையில், "ஆடம்பர பொருள் இறக்குமதி தடை பட்டியலில், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களும் இடம் பெற்றுள்ளன. தற்போதைய நிலையில், இந்த இரண்டு பொருட்களை மக்களுக்கு கிடைக்க செய்ய எங்களால் முடியவில்லை. எனவே, விரைவில் இந்த இரண்டு பொருட்களை, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்' என்றார்.

சுக்பீர் சிங்குக்கு பாதுகாப்பு தராத பாக்., போலீசார் சஸ்பெண்ட்


லாகூர்: பாகிஸ்தானில், சுற்று பயணம் மேற்கொண்ட, பஞ்சாப் மாநில துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதலுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காத, ஏழு போலீசார், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவதற்காக, பஞ்சாப் மாநில துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், ஐந்து நாள் பயணம் மேற்கொண்டார். இவருடன், 45 பேர் கொண்ட, வர்த்தக குழுவினரும், லாகூர் பயணம் மேற்கொண்டனர்.பாகிஸ்தானில் உள்ள, சீக்கியர்கள் சார்பில், பாதலுக்கு விருந்தளிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புக்கு போலீசாரே இல்லை.இந்த விஷயத்தை அறிந்த, பஞ்சாப் மாகாண காவல் துறை தலைவர் ஹபிபுர் ரஹ்மான், விருந்து நடந்த, போலீஸ் சரகத்தை சேர்ந்த, ஏழு போலீசாரை, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.பாகிஸ்தானில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இந்த சமயத்தல், இந்தியாவை சேர்ந்த முதல்வருக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்தால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பாக்., போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட RSS செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலி பஸ் எரிப்பு, கல்வீச்சு


திருப்பூர் மாவட்ட RSS செயலாளரை தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி இந்து அமைப்பினர் பேருந்தை தீ வைத்து எரித்தனர். அவர்கள் கல்வீச்சு மறியலில் ஈடுபட்டதை ஒட்டி திருப்பூரில் பதற்றம் உருவாகியுள்ளது. மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் திருப்பூர் மாவட்ட RSS செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மர்மக் கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து இரும்புகம்பியால் தாக்கியது. இதில் ஆனந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். பஸ் எரிப்பு, கல்வீச்சு இதனிடையே ஆனந்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் மீண்டும் இரவு 9 மணியளவில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் சில பேருந்துகளின் மீதும் மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கினர். இதன்பின்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு தீ வைத்தனர். அதில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. கடையடைப்பு, பதற்றம் ஆஸ்.எஸ்.எஸ் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பதற்றம் உருவாகியுள்ளது. இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் இன்று கடையடைப்பு நடத்த இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்து போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வகையில் தடுக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் மகளிர் மசோதாவுக்கு ஆதரவு! – முலாயம்!


லக்னோ:முஸ்லிம்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்போம் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்தார்.
மேலும் கூறியது: ‘பெண்கள் அதிகமாக ஒடுக்கப்படுகின்றார்கள் என்றாலும், ஆணும், பெண்ணும் தோளோடு தோள் சேர்ந்து செயல்படவேண்டும் என்பதுதான் எனது கட்சியின் கருத்து ஆகும்’ என்றார் முலாயம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா உயர்ஜாதியினருக்கு மட்டுமே ஆதாயம் தரும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயன் தராது. ஆகையால்தான் அம்மசோதாவை தான் எதிர்ப்பதாக நேற்று முன் தினம் முலாயம் விளக்கமளித்திருந்தார். பெண்களுக்கு சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மசோதா 2010-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சமாஜ்வாதிக் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

14 வயது பாக்., சிறுமி மலாலாவுக்கு ஐ.நா., கவுரவம்:


ஐ.நா.,: தன்னைப் போன்ற சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடியதற்காக தலிபான்களால் சுடப்பட்ட பாக்., சிறுமி மலாலாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதியை (இன்று) மலாலா நாளாக கொண்டாடுகிறது ஐ.நா., பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய் (14). பாக்., பெண்கள் கல்வி உரிமைக்காக போராடிய இந்த சிறுமியை கடந்த மாதம் தலிபான்கள் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழங்கிய ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் லண்டன் கொண்டு செல்லப்பட்டு, தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில், மலாலாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதி மலாலா நாளாக கொண்டாடப்படும் என ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்த நாள் 14 வயது மலாலா மற்றும் அவரைப்போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மலாலா குறித்து ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறுகையில், “மலாலா உலகில் உள்ள பெண் கல்வி உரிமைக்கான உலக அடையாளச்சின்னம். கல்வி ஒரு அடிப்படை உரிமை. மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக கல்வி உள்ளது” என்றும் கூறியுள்ளார்.மேலும், மலாலா மற்றும் உலக நாடுகளிலுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்ய உலக சமூகம் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க உலக முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

வியாழன், 8 நவம்பர், 2012

விஸ்வரூபம் திரைப்படம்: முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை: பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்-ம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது. இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையிலான ஊடக திரிபுகளை அனுமதிக்க முடியாது என த.மு.மு .க. கோரிக்கை விடுத்துள்ளது

கராச்சியில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் இன்று நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 2 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 48பேர் பலி


சான் மார்கஸ்: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 48பேர் பலியானார்கள். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் அந்நாட்டு நேரப்படி காலை 10.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தால் 22 இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 48பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 100 பேரை காணவில்லை. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை அந்நாட்டு அரசு முடக்கி விட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாத வரை மும்பை தாக்குதல் போன்று தொடரும்: இம்ரான் கான்


குர்கான் : பாகிஸ்தான் அணிக்கு உலககோப்பை பெற்றுதந்த அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவனான இம்ரான்கான் இப்போது அரசியல்வாதியாக மாறியுள்ளார். இவர் உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் பேசினார். அவர் பேசுகையில், இந்தியா பாகிஸ்தான் இடையே ஆண்டுக்கணக்காக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படாத வரை மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும் என்றார். அதேசமயம் தங்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடைபெறாத அளவுக்கு பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று கூறினார். மேலும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பிற உறவுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதற்கு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் உதவும் என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

இந்திய மீனவர்கள்வங்கதேசத்தில் கைது


தாகா:வங்கதேச கடல் பகுதியில், மீன் பிடித்த, இந்திய மீனவர்கள் 72 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில், ஷரன்கோலா, என்ற இடத்தில், அத்துமீறி மீன் பிடித்ததாக, மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாவை சேர்ந்த மீனவர்கள் 72 பேரை, அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்ற மூன்று படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்கள், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன் உத்தரவின் பேரில் தண்டிக்கப்படுவார்கள், என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா பாக்., கிரிக்கெட்: பால் தாக்கரே கடும் எதிர்ப்பு


மும்பை: மத்திய அமைச்சர் ஷிண்டே தனது கருத்தை வாபஸ் பெறும் வரையில், மும்பையில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் மற்றும் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்த சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, பழையவற்றை மறந்து விடுவோம் என கூறியிருந்தார். இதற்கு பால் தாக்கரே தனது கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “ஷிண்டே அவர்களே, உங்களுக்கு வெட்கம் என்பது சிறிதளவேனும் இருந்தால், உங்களது வெட்கம்கெட்ட கருத்துக்களை திரும்பப்பெறுங்கள். பழையவற்றை மறந்து விடுங்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அதை எவ்வாறு மறக்க முடியும். நான் தற்போது உடல்நலமில்லாமல் உள்ளேன். இந்த சூழலிலும் எனது ரத்தம் கொதிக்கிறது. எனது உடன்பிறப்புகளுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையூறு செய்யுங்கள்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஒரு தேசிய அவமானம் என வர்ணித்துள்ள தாக்கரே, பி.சி.சி.ஐ., யின் இந்த முடிவு, நாட்டை வஞ்சிக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அயல் நாடுகளில் உளவு நெட்வெர்க் ஏற்படுத்துவதற்கான அவசியம் இல்லை : ஈரான்


குவைத், மற்றும் சில அரபு நாடுகளை ஈரானிய உளவுத்துறை உளவு பார்க்கிறது என்ற செய்தி, நேற்று குவைத்தின் அல்-ராய் பத்திரிகையில் முதலில் வெளியானது. அதையடுத்து, கத்தாரின் அல்-வட்டான், அதே செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு, சுடச்சுட மறுப்பு தெரிவித்துள்ளது ஈரானிய வெளியுறவு அமைச்சகம். குறிப்பிட்ட செய்தி வெளியான கத்தாரில் இருந்து வெளியாகும் அல்-வட்டான் பத்திரிகைக்கே, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலீஹி, பேட்டியளித்து, தமது மறுப்பை தெரிவித்துள்ளார். அத்துடன், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் சிரியா ராணுவத்துக்கு உதவியாக ஈரானிய சினைப்பர் (தொலைவில் இருந்து குறிபார்த்து சுட்டு வீழ்த்தும்) அணி ஒன்று, போராளிப் படையினரை கொன்று குவித்து வருவதாக உள்ள வதந்தியையும் மறுத்தார். “இந்த வதந்தியை உங்களாலேயே நம்ப முடிகிறதா? சிரியா நாட்டு ராணுவத்தில் சுமார் அரை மில்லியன் வீரர்கள் உள்ளார்கள். அவர்கள், சிறிய குழு ஈரானிய சினைப்பர் குழுவை அழைத்து வைத்துக்கொண்டுதான் யுத்தம் புரிகிறார்கள் என்று சொல்வது அபத்தமாக இல்லையா?” என்று கேட்டிருக்கிறார், ஈரானிய வெளியுறவு அமைச்சர்.

"ஹிந்து நாடு" என்று பகிரங்கமாக அறிவித்தால், எதிர்கொள்ள நாங்கள் தயார்! -மஜ்லிஸ்


சார்மினார் வளாகத்தை ஆக்கிரமித்து கோவில் கட்ட, விஷமிகளுக்கு உடந்தையாக - உற்ற துணையாக செயல்பட்ட 33 போலீஸ் உயர் அதிகாரிகளின் பட்டியலை "மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்" கட்சியின் கன்வீனர், ரஹீம் குரைஷி வெளியிட்டார்.
நேற்று, கட்சியின் தலைமை அலுவலகமான "தாருஸ்ஸலாம்" வளாகத்தில் அவர் அளித்த பேட்டி: பழைய ஹைதராபாதை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது, இங்கு அறிவிக்கப்படாத "ஹிந்து ராஷ்டிரம்" நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்த அவர், இந்திய தேசத்தை "ஹிந்து நாடு" என்று பகிரங்கமாக அறிவித்தால், அதை உரிய வகையில் எதிர்கொள்ள முஸ்லிம்கள் தயார், என தெரிவித்தார். 400 ஆண்டு பழமை சின்னமான "சார்மினார்" ஆக்கிரமிப்புக்கு பக்கபலமாக போலீஸ் இருந்த நிலையிலும், முஸ்லிம் இளைஞர்கள் பாதுகாத்ததை, அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பக்ரீதின் போது "குர்பானி" பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து போலீசார் செயல்பட்டதை நினைவு கூர்ந்த அவர், கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு "மறைமுக உத்தரவுகள்" பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்,குரைஷி. இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, உளவுத்துறைக்கு தெரியும் என்று கூறிய அவர், போலீசின் ஒருதலை பட்சமான செயல்களுக்கான "ஆடியோ-வீடியோ" ஆதாரங்களுடன் மாநில முதலமைச்சரை விரைவில் சந்திப்போம்,என்றார். இதற்கிடையில், சார்மினாரை பாதுகாக்கும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ள ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்புக்கோவில்" கட்டுமானத்துக்கு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர், என்பது ஆறுதலான விஷயம்.

சிரியாவில் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் யுத்தம் தீவிரம்


சிரியா:சிரியாவில் அப்பாவி மக்களை கொன்று அழித்து கொண்டிருக்கும் அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து 20 மாதங்களாக நிகழ்ந்து வரும் யுத்தம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சிரியாவின் வடக்கே அதன் தலைநகரமான டமஸ்கசுக்கும், இன்னொரு முக்கிய நகரமான அலெப்போவுக்கும் இடையே அமைந்துள்ள பிரதான விமான தளமான டாப்டனாஸை கைப்பற்றுவதற்கு கிளர்ச்சிப்படையினர் முயன்று வருகின்றனர். இராணுவத்துக்கு சொந்தமான இந்த விமான தளத்தைக் கைப்பற்றுவதற்கு சனிக்கிழமை மாலை முதல் கடும் சண்டை நிகழ்ந்து வருவதாக பிரிட்டனில் அமைந்துள்ள சிரிய கண்காணிப்பு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரிய அரசுக்குச் சொந்தமான வானொலி நிலையம் ஒன்று செய்தி வெளியிடுகையில் அரச படையினர் இந்த தாக்குதலை முறியடித்திருப்பதாகவும் கணிசமான அளவு ஆயுததாரிகளைக் கொன்றிருப்பதாகவும் அவர்கள் விமானத் தளத்துக்கு வருவதற்கு உபயோகித்த வாகனங்களையும் தகர்த்திருப்பதாகவும் கூறியுள்ளது. இதுவரை சுமார் 20,000-ற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்த சிரிய யுத்தம் ஐ.நா ஆல் பொடப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்கும் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிரிய, இஸ்ரேல் எல்லைக்கு அண்மையில் இராணுவம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளான கோலன் மற்றும் ஹைட்ஸ் ஆகியவற்றுக்கு சிரிய அரசு மூன்று டாங்கிகளை அனுப்பி உள்ளது. இச்செய்கையினால் அதிருப்தி அடைந்துள்ள இஸ்ரேல் இது தொடர்பாக ஐ.நாவிடம் புகார் அளித்துள்ளமை அப்பகுதிகளில் தாக்குதல் அச்சத்தை அதிகரித்துள்ளது.

நாளை (நவ. 07) துவங்கும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2012


இந்தப் புத்தகக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 நூல் வெளியீட்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 40 அரபு நாடுகளிலிருந்தும், 22 வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 924 பதிப்பகத்தார்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர். இதில் 24 நாடுகள் முதன் முறையாகப் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் பாகிஸ்தான் மையப்படுத்தப்படுகின்றது. பாகிஸ்தானிலிருந்து மொத்தம் 23 வெளியீட்டு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் 20 பாகிஸ்தான் பதிப்பகத்தார் முதன் முறையாகக் கலந்துகொள்கின்றனர். வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும். பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர். எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார். இந்த 11 நாள் கண்காட்சி உலகிலேயே ஆறாவது மிகப் பெரிய இலக்கியத் திருவிழா என்றும், இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமே இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுதான் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

ஈராக்கில் குண்டு வெடிப்பு: 27 பேர் பலி


பாக்தாத்: பாக்தாத்தின் வடக்கு பகுதியில் ராணுவ மையத்தை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் பலியானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 19 பேர் ராணுவ வீரர்கள்.

திங்கள், 5 நவம்பர், 2012

பக்ரைனில் குண்டு வெடிப்பு : தமிழர் பலி


துபாய்: பக்ரைனில், நடந்த குண்டு வெடிப்பில், தமிழர் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். பக்ரைனில் மன்னராட்சி நடக்கிறது. அங்கு மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்த, உள்துறை அமைச்சகம், தடை விதித்துள்ளது. இதை கண்டித்து, குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. தலைநகர் மனாமாவில், ஐந்து இடங்களில், குண்டு வெடித்தது. இதில் முருகைய்யா என்ற தமிழர் கொல்லப்பட்டார். மற்றொரு இந்தியருக்கு குண்டு வெடிப்பில், உள்ளங்கை துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரும், குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளார். பக்ரைன் நாட்டுக்கான, இந்திய தூதர் மோகன்குமார், முருகைய்யா பலியானதை உறுதி செய்துள்ளார். பக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் மரியம் ஜமீலா மரணம்!


லாகூர்:பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான மரியம் ஜமீலா அவர்கள் கடந்த அக்டோபர் 31-ம் தேதி லாகூரில் மரணம் அடைந்தார். நீண்ட நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு வயது 78. அமெரிக்காவில் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் 1934-ம் ஆண்டு மார்கரட் மார்கஸ் பிறந்தார். நியூயார்க்கில் யூதப் பெண்மணியாக வளர்ந்த மார்கரட் மார்கஸ் தனது பத்தாவது வயதிலேயே இஸ்லாமால் ஈர்க்கப்பட்டார். 1961ம் ஆண்டு தனது 27வது வயதில் இஸ்லாமைத் தழுவினார். தன் பெயரை மரியம் ஜமீலாவாக மாற்றினார். பின்னர் 1962ம் ஆண்டு லாகூர் வந்தார். ஜமாஅத்தே இஸ்லாமியின் நிறுவனர் மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் மரியம் ஜமீலாவை தன் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்தார். அதன் பின் மரியம் ஜமீலா அமெரிக்காவுக்குத் திரும்பவே இல்லை. லாகூரிலேயே தங்கி விட்டார். 1960களிலிருந்து 1980களின் நடுப்பகுதி வரை மரியம் ஜமீலா நிறைய நூல்களை எழுதினார். அவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய நூல்கள் இஸ்லாமிய உலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மேலை நாடுகளுக்கும், இஸ்லாமிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தோலுரித்துக் காட்டும் அவரது எழுத்துகள் பல மேலை நாட்டவரை இஸ்லாம் குறித்து புரிந்துகொள்ள உதவியது. இஸ்லாம் எதிர் மேற்குலகம் (Islam Versus The West), இஸ்லாமும், நவீனத்துவமும் (Islam and Modernism), கொள்கையிலும், நடைமுறையிலும் இஸ்லாம் (Islam in Theory and Practice), இஸ்லாமும், கிழக்கத்தியவாதமும் (Islam and Orientalism), யார் இந்த மௌதூதி? (Who is Moududi?), நான் ஏன் இஸ்லாம் தழுவினேன்? (Why I embraced Islam?) உட்பட 25க்கும் மேற்பட்ட நூல்களையும், கட்டுரைகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார். நவீன கால முஜாஹித்களின் வரலாறுகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார். ரஷ்ய ஸார் மன்னனை எதிர்த்துப் போராடிய இமாம் ஷாமில், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியை எதிர்த்துப் போராடி தூக்கு மரம் ஏறிய லிபியாவின் பாலைவனச் சிங்கம் உமர் முஃக்தார், வட இந்தியாவில் பிறந்து இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்திய செய்யத் அஹமத் ஷஹீத் ஆகியோரின் வரலாறுகள் அதில் குறிப்பிடத்தக்கது.

துபாயில் தாஜ்மகாலை போல இன்னொரு ''தாஜ் அரேபியா''


துபாய்: காதல் நினைவு சின்னம் தாஜ்மகாலை போல, 4 மடங்கு பெரிதாக
தாஜ்மகாலை உருவாக்க கட்டுமான நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. காதல் மனைவி மும்தாஜுக்காக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய அந்த தாஜ்மகால் போல், 4 மடங்கு பெரிதாக இன்னொரு தாஜ்மகாலை துபாயில் கட்ட கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ரூ.5,400 கோடியில் பிரமாண்ட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பத்து லட்சம் சதுர அடியில் பிரமாண்டமாக ''தாஜ் அரேபியா'' கட்டப்பட உள்ளது. தாஜ்மகால் போன்ற கட்டிடம் மட்டுமன்றி 300 அறைகள் கொண்ட ஓட்டல், வர்த்தக நிறுவனங்களும் இந்த வளாகத்தில் இடம்பெற உள்ளன. இதுகுறித்து லிங்க் குளோபல் என்ற கட்டுமான நிறுவனம் கூறுகையில், ''தாஜ்மகாலை போல் 4 மடங்கு பெரிதாக துபாயில் இன்னொரு கட்டிடம் 2014ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். தவிர பால்கன் சிட்டியில் தாஜ்மகால் போன்ற இன்னொரு கட்டிடத்தை 36.5 பில்லியன் செலவில் கட்டவும் திட்டமிட்டுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளது.

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வாசகம் இடம் பெற்றதால் ஆவேசம் பாகிஸ்தானில், பள்ளிக்கூடம் சூறை; தீ வைப்பு


லாகூர், பாகிஸ்தானில் பள்ளிக்கூட கேள்வி தாளில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வாசகம் இடம்பெற்றதால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டு, பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. பொதுமக்கள் ஆவேசம் பாகிஸ்தானிலுள்ள லாகூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற மசூதி அருகே பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. அந்த கேள்வித்தாளில் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வாசகம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பள்ளிக்கூட நிர்வாகியை கண்டித்து ஜமாத்–உத்–இஸ்லாமிக் மாணவர் இயக்கத்தினரும், மாணவிகளின் பெற்றோரும் ஆவேசத்துடன் பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். சூறை–தீ வைப்பு உடனே போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். பிறகு இவர்களில் ஒரு பகுதியினர் திடீரென்று பள்ளிக்குள் நுழைந்து நிர்வாகியை தேடினர். அவர் சிக்கவில்லை. இதனால் அங்குள்ள 3 கட்டிடங்களில் இருந்த மாணவிகளை வெளியேற்றினார்கள். பின்னர் அந்த கட்டிடத்தில் நுழைந்து பொருட்களை அடித்து சூறையாடினர். அங்கிருந்த மேஜை–நாற்காலிகள் மற்றும் பொருட்களை வெளியே போட்டு தீ வைத்தனர். பள்ளிக்கூட நிர்வாகி காரும் தீ வைத்து எரிக்கப்பட்டது. 2 பேர் கைது தகவல் அறிந்ததும் அரசியல் கட்சி தலைவர்களும், போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதிமொழி கூறி போராட்டக்காரர்களை சமாதானம் செய்தனர். அதன்பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக லாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட அதிபர் அசிம் பாரூக், ஆசிரியர் அரீபா ஆகிய 2 பேரை கைது செய்தனர். அத்துடன் பள்ளிக்கூடத்தில் சூறையாடல், தீ வைப்பில் ஈடுபட்ட சிலரையும் போலீசார் தேடுகிறார்கள்.

பாகிஸ்தானில் தற்கொலை தீவிரவாத தாக்குதலில் 5 பேர் பலி


பாகிஸ்தானின் கைபர் பாக்டன்க்வா மாகாணத்தில் பியூநர் பகுதியில் நேற்று நடந்த தற்கொலை தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். மோட்டார் பைக்கில் வெடிகுண்டுகளை கட்டி கொண்டு வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் அரசு அலுவலகம் மீது மோத செய்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சாலையோரம் சென்ற இரு நபர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரிட்டனில் நுழைய முயன்றவர்கள் கைது


லண்டன்:பல்கேரியா நாட்டிலிருந்து, பிரிட்டனுக்கு, சவப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு, ஒரு வாகனம் வந்தது. வழக்கம் போல், எல்லையில் உள்ள சோதனை சாவடியில், பிரிட்டன் பாதுகாப்பு படையினர் இந்த வாகனத்தை பரிசோதித்தனர். அப்போது, சவப்பெட்டிகளுக்கிடையே, மூன்று பேர் ஒளிந்திருந்தனர். ஆப்பிரிக்காவில் உள்ள எரித்திரியா நாட்டை சேர்ந்த இந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். இவர்கள் பிரான்ஸ் நாட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் சிறப்பு மார்க்க சொற்பொழிவு


துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.ஹிஜ்ரத் குறித்த சிறப்புச் சொற்பொழிவினை மௌலவி அப்துல் ஹமீது ஆலிம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து காயல் இஸ்மாயில் பிலாலி இறைகீதங்களைப் பாடினார். முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். கபூஃர் காக்கா, காயல் ஈஸா, நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்ய ப்பட்டிருந்தது.

சனி, 3 நவம்பர், 2012

இந்திய டாக்டர்குத்தி கொலை


துபாய்:கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், டாக்டர் ராஜன் டேனியல். ஐக்கிய அரபு எமிரேட்டின் அபுதாபியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். சமீபத்தில், இவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு ஒருவர் வந்தார். ராஜன் டேனியல் இருந்த அறைக்குள் வேகமாக நுழைய முயற்சித்தார்.நர்ஸ் மற்றும் ஊழியர்கள், அவரை தடுக்க முயற்சித்தனர். அவர்களை தள்ளி விட்டு, ராஜன் டேனியலை நோக்கி கோபத்துடன் வந்த, அந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக, அவரை குத்தியதில், டேனியல் இறந்தார்.அந்த நபரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், தவறான சிகிச்சை அளித்து, அவரது உறவினர் இறப்புக்கு காரணமாக இருந்ததாகக் கருதி, ராஜன் டேனியலை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

அநியாமாக உடைத்து நொறுக்கப்பட்ட முஸ்லிம் கடைகள்: காவி பயங்கரவாதிகள் அட்டூழியம்


ஹைதராபாத்:ஹைதராபாத்தை அடுத்த தப்பசபூத்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்ஸி மண்டி பகுதியில், நேற்று மாலை முஸ்லிம்களின் கடைகள் “தீ” வைத்து கொளுத்தப்பட்டன. கடந்த 10 தினங்களாகவே குர்பானிக்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்தும், சிறு சிறு சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்தனர் காவி பயங்கரவாதிகள், பக்ரீத் பெருநாள் முடிந்த பிறகும், கடந்த 28-ம் தேதி அன்று சப்ஸிமண்டி பகுதி யில் உள்ள “தர்கா”வை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்,
இதற்கிடையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி நேற்று ஒரு கும்பல், முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தது. கலவரக்காரர்கள் “கன்னடம்” மற்றும் “மராட்டிய” மொழிகளில் குரல் கொடுத்த வண்ணம் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் மக்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர், நிலைமையின் கடுமையை உணர்ந்த, மேற்கு மண்டல டி.ஸி.பி., ஸ்டீபன் ரவீந்தர், ஏ.ஸி.பி.டி., ஸ்ரீனிவாஸ், ஆகியோர் தலைமையில், ஏ.ஸி.பி.டி., நாகராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிரண்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர், காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. என்றாலும், கலவரம் பரவாமல் தடுக்க நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன்னடம் மற்றும் மராட்டிய மொழி பேசக்கூடிய கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களை யார் அழைத்து வந்தனர்? போன்ற கேள்விகளுக்கு, பதில் தெரியாமல் முஸ்லிம்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

டாங்கர் லாரி வெடித்து சவுதியில் 22 பேர் பலி


ரியாத்:சவுதி அரேபியாவில், எரிவாயு ஏற்றி சென்ற லாரி, கட்டடத்தின் மீது மோதி, வெடித்ததில், 22 பேர் பலியாயினர்; 111 பேர் படுகாயமடைந்தனர்.சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள, குரேஸ் சாலையில், எரிவாயுவை ஏற்றிச்சென்ற லாரி, சாலை திருப்பத்தில் உள்ள கட்டடத்தின் மீது வேகமாக மோதியது. இதனால், எரிவாயு டாங்கர் வெடித்ததில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த 22 பேர் உடல் கருகி பலியாயினர்; 111 பேர் படுகாயமடைந்துள்ளனர்.டேங்கர் லாரி மோதி வெடித்தில், அங்கிருந்த கட்டடங்களும், ஏராளமான கார்களும் சேதமடைந்தன. பலியானவர்களின் உடல்கள் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத வகையில் கருகியுள்ளன.

நூறு எம்.பி.,க்கள் ஹஜ் பயணம்ஆப்கன் பார்லிமென்ட் முடங்கியது


காபூல்:ஆப்கானிஸ்தானில், நூற்றுக்கும் அதிகமான எம்.பி.,க்கள், "ஹஜ்' யாத்திரை மேற்கொண்டதால், அந்நாட்டு பார்லிமென்ட், விவாதம் நடத்த ஆளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.ஆப்கானிஸ்தானில், 2001ல், அமெரிக்கா தலைமையிலான, "நேட்டோ' படைகளின் அத்துமீறிய தாக்குதலினால், "தலிபான்' களின் ஆட்சி அகற்றப்பட்டது. அதன் பின், அமெரிக்காவினால் ஜனநாயக ( ? ) முறையில், தேர்தல் நடத்தப்பட்டு, ஹமீத் கர்சாய், இரண்டு முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆப்கன் பார்லிமென்ட்டின், கீழ் சபையில், 249 பேரும், மேல் சபையில், 102 பேரும் உள்ளனர்."வரும், 2014ம் ஆண்டு, ஏப்ரல் 5ம்தேதி, தேர்தல் நடைபெறும்' என, ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தலுக்கு முன்,வெளிநாட்டு படைகளை வாபஸ் பெற செய்வது குறித்து, பார்லிமென்ட்டில் விவாதம் நடத்தப்பட இருந்தது. ஆனால், போதுமான எம்.பி.க்கள் இல்லாததால், இந்த விவாதம் நடக்கவில்லை.காபூல் நகர எம்.பி.,ஷிங்காய் கரோகில் கூறியதாவது: மெக்காவுக்கு, வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும்; அதை நான் குறை கூறவில்லை. ஆனால், ஆப்கன் எம்.பி.,க்கள் 100 பேர், ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். இவர்களில் பலர், ஐந்தாவது முறையாக ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். மக்கள் வரி பணத்தில் இவர்கள், சவுதிக்கு சென்றுள்ளனர்.ஹஜ் யாத்திரை முடிந்து, இவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால், பார்லிமென்ட்டில் முக்கிய விவாதங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.என்று மிகவும் கவலைப் படுகிறார் காபூல் நகர எம்.பி.,ஷிங்காய் .

பீகிங் பல்கலை.,யில் பாடம் நடத்த வருமாறு கலாமுக்கு சீனா அழைப்பு


பீஜிங்: புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த வருமாறு, இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக “இந்திய ஏவுகணை தந்தை” என அழைக்கப்படும் அப்துல் கலாம் பீஜிங் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு அவரை சந்தித்த பீகிங் பல்கலைக்கழக சேர்மன் ஜூ சான் லு, தங்களது பல்கலைக்கழத்திற்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு அழைப்பு விடுத்தார். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை வந்து தங்களுக்கு பாடம் எடுக்கும்படியும், கலாம் விருப்பப்படும் எந்த பாடத்தை வேண்டுமானாலும் (உதாரணமாக அறிவியல் தொழில்நுட்பம் அல்லது மனிதப்பண்புகள்) அவர் எடுக்கலாம் என்றும், அதற்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சீனாவில் தங்கலாம் என்றும் சான் லு தெரிவித்தார். மேலும், கலாம் பயன்படுத்துவதற்காக பல்கலை., வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பரிசோதனைக் கூடம் அமைத்துத்தரப்படும் என்றும் அவர் கூறினார். சீனாவின் அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த கலாம், “நான் ஒரு பேராசிரியர். தற்போது அமெரிக்காவில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பேராசிரியராக எனது அறிவு தேவைப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு போதிக்கிறேன். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினரை நான் மிகவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். எனினும் கலாமின் பயணத்திட்டத்தின் படி, அவருக்கு நேரம் கிடைக்கும்பட்சத்தில் அவர் பீகிங் பல்கலை.,யில் பாடம் எடுப்பார் என அவரது உதவியாளர் தெரிவித்தார். சீனாவில் உள்ள விமான தொழில்நுட்ப மையங்களுக்கு கலாமை அழைத்துச் செல்ல சீன அரசு ஒரு சிறப்பு பயணதிட்டத்தை வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரத்தில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் – துரித நடவடிக்கை எடுக்க SDPI மாநில தலைவர் கோரிக்கை


சென்னை:இராமநாதபுரத்தில் நடைபெற்ற சாதிக் கலவரத்தை மதக் கலவரமாக இந்து-முஸ்லிம் பிரச்சனையாக மாற்றும் சதித்திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று சோசியல் டெமார்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் அரசு மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சித்தலைவர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள ஃபேக்ஸ்ஸில்; “நேற்று(30.10.2012) நடைபெற்ற பசும்பொன் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு நடந்த மோதல் சம்பவங்களும் கலவரங்களும் வருந்தத்தக்கது. கண்டனத்திற்குரியது. இராமநாதபுரம் மாவட்டத்திலும் இதர மாவட்டங்களிலும் கலவரம் பரவாமல் தடுக்க உரிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். அதே சமயம் நடைபெற்ற சாதிக் கலவரத்தை மதக் கலவரமாக இந்து-முஸ்லிம் பிரச்சனையாக மாற்றும் சதித்திட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது . இராமநாதபுரம் பஜாரில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை ஒரு கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது .இது வன்மையாக கண்டிக்கத்தக்கது .இதன் பின்னணியில் உள்ள அமைப்புகள் எவை, தூண்டியவர்கள் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு மேற்கொண்டு எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுக்கும் அவர்களின் வியாபார நிறுவனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்.” என்று அந்த ஃபேக்ஸில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.