வியாழன், 28 மார்ச், 2013

சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்!


தம்மாம்:சவூதி அரேபியாவில் உள்நாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான சுதேசி மயமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சட்டவிரோத தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் பணியை அந்நாட்டின் தொழில் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. பரிசோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொந்த ஸ்பான்ஷரின் கீழ் வேலைச் செய்யாமல் வேறு பணிகளை புரிபவர்கள் மற்றும் தங்கும் அனுமதி(இகாமா)யின் கால அவகாசம் தீர்ந்தவர்களும் கைது செய்யப்படுகின்றனர். ஸ்பான்ஸர்களின் கீழ் வேலைச் செய்யாத ஃப்ரீ விசாவில் பணியாற்றுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக வேலை பார்ப்பவர்கள், தங்கியிருப்பவர்கள் ஆகியோரை கைது செய்து நாடு கடத்த கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில்-உள்துறை அமைச்சகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ்வும் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தலைநகரான ரியாதில் பத்ஹா, தம்மாமின் இதய பகுதியான ஸீக்கோ பில்டிங் பகுதி, ஜித்தா, அல்ஹஸ்ஸா ஆகிய பகுதிகளில் போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சனிக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் ரெய்டு தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிபந்தனைகளை கடைப்பிடிக்காத சிறு கடைகள் பூட்டிக்கிடக்கின்றன. ஃப்ரீ விசாக்காரர்களான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி கட்டிட வேலைகளை நடத்தி வந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் நேற்று முதல் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. நாட்டின் தொழில்துறையை சட்டப்பூர்வமாக மாற்றவும், சுதேசிகளுக்கு முடிந்தவரை வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் நோக்கமாக கொண்டு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதியின் தொழில் அமைச்சர் எஞ்சீனியர் ஆதில் ஃபகீஹ் தெரிவித்துள்ளார். கல்வி தகுதியும், பணிச்செய்ய தயாராக உள்ள உள்நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2011 நவம்பர் மாதம் முதல் சுதேசிமயமாக்கும் திட்டமான நிதாகத் சவூதியில் அமல்படுத்தப்பட்டது.

கார்கில் போருக்காக பெருமைப்படுகிறேன் பாக்., "மாஜி' அதிபர் முஷாரப் பேட்டி


கராச்சி:""கார்கில் போர் குறித்து பெருமிதப்படுகிறேன்,'' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர், பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 1999ல், பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீபின் அரசை, ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றினார்.பின், 2002ல், பாகிஸ்தான் அதிபரான இவரது ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, 2008ல், அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப், நாட்டை விட்டு வெளியேறி, துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார். வரும், மே, 11ல், பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' கட்சி சார்பாக, தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.இதற்காக தற்போது, அவர் நாடு திரும்பியுள்ளார்.கராச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கார்கில் போரில், இந்தியாவின் கழுத்தை பாக்., பிடித்தோம், பாக்., வசம் உள்ள கார்கில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக போர் நடந்தது. இந்தப் போருக்கு இந்தியா தான் காரணம். இந்த போரை நடத்தியதற்காக பெருமைப்படுகிறேன்.இவ்வாறு, முஷாரப் கூறினார்.

சிங்களவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள்: இலங்கை தூதரின் பிரசாரத்தால் பரபரப்பு


புதுடில்லி: சிங்களவர்களின் பூர்வீகம் வட இந்தியா என இலங்கை தூதர் பிரசாரம் செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் போது, இலங்கைக்கு சாதகமான ஆதரவை பெற இந்தியா மீடியாக்கள் மூலம், இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அனுப்பிய இமெயில் தற்போது வெளியாகியுள்ளறது. அந்த இ-மெயிலில், 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதரின் இ மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் நிறுவனத்துக்கு கடந்த 19ம் தேதி இந்த இமெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் மூலம் இந்த இமெயில் டில்லியில் உள்ள மீடியா நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலாலா வாழ்க்கை வரலாறு ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம்


லண்டன்:தலிபான்களால் சுடப்பட்டு, உயிர்பிழைத்த சிறுமி மலாலாவின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. இதற்காக, 16 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி உரிமைக்காக போராடிய பாகிஸ்தான் சிறுமி மலாலா, 15, கடந்த, 2009ல், அந்நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி வாழ்க்கை மற்றும் தலிபான்களின் அடக்குமுறை பற்றி, உருது மொழியில், பி.பி.சி.,யின் இணையதளத்தில், கட்டுரை எழுதினாள்.புனைப்பெயரில் அவள் எழுதிய கட்டுரை பிரபலமடைந்ததை அடுத்து, மலாலாவின் அடையாளத்தை தெரிந்து கொண்ட தலிபான்கள், கடந்த அக்டோபர் மாதம், துப்பாக்கியால் சுட்டனர்.படுகாயமடைந்த மலாலா, பிரிட்டன் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றாள். பிரிட்டனில் உள்ள பள்ளியில் தற்போது, பள்ளி படிப்பை தொடர்கிறாள் மலாலாவின் போரட்ட வாழ்க்கையை, புத்தகமாக வெளியிட, பிரிட்டனை சேர்ந்த, "வீடன்பெல்ட் அண்ட் நிக்கல்சன்' என்ற, நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக, 16 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது."நான் மலாலா' என, பெயரிடப்பட்டு உள்ள இப்புத்தகம், பிரிட்டனின் மற்றொரு பதிப்பகமான லிட்டில் பிரவுன் மூலம், உலகமெங்கும் வெளியிடப்படும்.

செவ்வாய், 19 மார்ச், 2013

எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி இந்த வாரம் இந்தியா வருகிறார்!


கெய்ரோ:எகிப்தில் உருவான புரட்சிக்கு பிறகு அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முஹம்மது முர்ஸி இவ்வாரம் இந்தியா வருகை தருகிறார். நாளை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அவர். பல தசாப்தங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி ஆவார். கடைசியாக ஜமால் அப்துல் நாஸர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முர்ஸி இந்தியாவுக்கு வருகை தருகிறார். வர்த்தகம் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் இந்தியாவுடன் அவர் கையெழுத்திடுவார். எகிப்தின் 7-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது.

முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறிய காங்கிரஸின் காவி அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலக கோரி மக்களவையில் எம்.பிக்கள் அமளி!


புதுடெல்லி:முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று பேசிய காவி தோல் போர்த்திய காங்கிரஸின் மத்திய உருக்குத் துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலகக் கோரி, சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் திங்கள்கிழமை காலையில் கேள்வி நேரம் முடிந்ததும் பொது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை விவாதிக்கும் பூஜ்ய நேர அலுவல் நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது.அப்போது பேசிய சமாஜவாதி உறுப்பினர் சைலேந்திர குமார், “முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுடன் முலாயம் சிங்குக்குத் தொடர்பு உள்ளது என்றும் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பேசியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கோரினார். அப்போது அவையில் இருந்த பேனி பிரசாத் வர்மா, “நான் அத்தகைய கருத்தை ஒருபோதும் தெரிவிக்கவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் அவதூறாகப் பேசியதற்கான ஆதாரம் உள்ளதா?” என்றார். இதையடுத்து அவையின் மையப் பகுதிக்கு வந்து சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது முலாயம் சிங் யாதவ், “லக்னௌவில் முஸ்லிம் சமயத் தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் ‘நாட்டு நலப் பணியில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ குறித்து பேசினேன். மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் தங்கள் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எடுத்துரைத்தனர். சமூக, பொருளாதார நிலையில் முஸ்லிம் சமூகம் பின்தங்கி உள்ளதை நீதிபதி சச்சார் குழு கூடசுட்டிக்காட்டியுள்ளது. நமது எல்லைகளைக் காப்பதிலும், தேசிய வளர்ச்சியிலும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அளித்த பங்களிப்பை நாம் எப்படி மறக்க முடியும்? ஆகவே, முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என பேனி பிரசாத் எப்படி கூற முடியும்? இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கோரினார். அப்போது பேனி பிரசாத், “பயங்கரவாதத்துக்கு மதமோ, நிறமோ கிடையாது. பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா வன்முறை ஆகிய சம்பவங்களுக்குப் பிந்தைய வன்முறைகள் கூட பயங்கரவாத சம்பவங்கள்தான்” என்றார். மேற்கண்டவாறு பேனி பிரசாத் பேசிய போது, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதையடுத்து, பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் இதே பிரச்னையை எழுப்பி சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் மக்களவை அலுவல் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிற்பகலில் மீண்டும் அவை கூடியதும் பேனி பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமாஜ்வாதி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது பேசிய முலாயம் சிங் யாதவ், “என்னைத் பயங்கரவாதி என மத்திய அமைச்சர் கூறுவாரானால் என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; அல்லது தனது பேச்சுக்காக பேனி பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். இதையடுத்து சமாஜ்வாதி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்!


புதுடெல்லி:நரேந்திர மோடியின் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன. கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அன்ஹத்(ஆக்ட் நவ் ஃபார் ஹார்மனி அண்ட் டெமோக்ரஸி) என்ற அமைப்பு சம்பவம் நடந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன. சோட்டா உதய்பூரில் அகாபாரா, வஸேலி, வானார் காம், தேடர் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் நடத்தி வரும் நான்கிற்கும் மேற்பட்ட மினரல் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வியாபார நிறுவனங்கள், பண்ணைகள், ப்ளாஸ்டிக் குடோன்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு காட்சி ஊடகங்கள் இங்குள்ள காட்சிகளை படம் பிடித்தபோதும் தொலைக்காட்சி சானல்கள் எதுவுமே இதுத்தொடர்பான செய்திகளையோ, காட்சிகளையோ ஒளிபரப்பவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறியதாக அன்ஹதின் ஸ்தாபக உறுப்பினர் ஷப்னம் ஹாஷ்மி செய்தியாளர்கள் சந்திப்பில்தெரிவித்தார். கடந்த மாதம் பஸ் ரூட் தொடர்பாக உருவான சிறியச் சண்டை முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு ரீதியான தாக்குதலுக்கு காரணமானது. பரோஜ் கிராமத்தைச் சார்ந்த சர்பஞ்சும், பஸ் உரிமையாளருமான ஜயந்தி ரத்வா, அலிராஜ்பூர்-சோட்டா உதய்பூர் ரூட்டில் உள்ள பஸ் சர்வீஸ்கள் அனைத்தையும் சொந்தமாக்குவதற்கு உருவாக்கிய பிரச்சனைகள் தாம் கலவரத்திற்கு வழிவகுத்தது. இர்ஃபான் அப்துல் கனி, மெஹ்பூப் அப்துல் கனி ஆகியோரின் பேருந்துகளும் இந்த ரூட்டில் சர்வீஸ் நடத்துகின்றன. ரத்வாவின் பேருந்து இவர்களின் பேருந்துடன் மோதி, தொடர்ந்து ஏற்பட்ட வாக்கு தர்க்கம் முஸ்லிம்கள் மீது சிறிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட காரணமானது. ஆனால், முஸ்லிம்களின் குடோன்களை தீக்கிரையாக்கி விட்டு, பழங்குடியினர் மீது தாக்குதலும், அத்துமீறலும் நடப்பதாகவும் 13-ஆம் தேதி சோட்டா உதய்பூரில் முழு அடைப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. நோட்டீஸில் அதனை வெளியிட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பழங்குடியின தலைவர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. சர்பஞ்ச்(பஞ்சாயத்து தலைவர்) ஜயந்தி ரத்வா, ஈஸ்வர் டேத்க ரத்வா ஆகியோர் தாம் இந்த நோட்டீஸ்களை அச்சிட்டவர்கள் என்று அன்ஹத் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நோட்டீஸ் விநியோகிக்கப்பட்ட மறு நாள் சோட்டா உதய்பூரின் கனாவத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவரின் ட்ரக்கும் ஒரு முஸ்லிமின் ட்ரக்கும் மோதிக் கொண்டன. இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் அளித்த போதும் பழங்குடியினர் போலீஸ் ஸ்டேசனை சுற்றி வளைத்து மிரட்டல் விடுத்தனர். ஆனால், போலீஸ் வழக்குப் பதிவுச் செய்யவில்லை. பின்னர் மீண்டும் முஸ்லிம்கள் மீது பெரிய அளவில் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. முஸ்லிம்களும் திரண்டதைத் தொடர்ந்து போலீஸ் முஸ்லிம்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியது. கலவரம் நடக்கும் பொழுது முஸ்லிம்களை வீடியோ எடுத்து போலீசுக்கு அளிக்கும் திவ்ய பாஸ்கர் என்ற பத்திரிகையாளரின் சில இளைஞர்கள் தடுத்து கேமராவை பறிக்க முயற்சித்தனர். இதற்கு எதிராக பாஸ்கர் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பல முஸ்லிம்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்தது. 24 முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவுச் செய்த போலீஸ் 8 பழங்குடியினர் மீது மட்டுமே வழக்குப் போட்டது. அடுத்த நாள் பல்வேறு சிறுபான்மை வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்தன. டி.ஐ.ஜி, எஸ்.பி.ராங்கில் உள்ள அதிகாரிகள் அங்கு வந்து முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு ப்ளாஸ்டிக் குடோனை தீக்கிரையாக்கிய சோட்டா உதய்பூரில் ரவுடிக் கும்பலின் பெயர் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவனோசுதந்திரமாக நடமாடுகிறான். 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்ய வி.ஹெச்.பி நேரடியாக களமிறங்கியது. இம்மாதம் 8 மற்றும் 11-ஆம் தேதிகளில் மீண்டும் முஸ்லிம்களின் குடோன்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வழக்கில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சில உயர் மட்டத் தலைவர்களின் உத்தரவின் பேரிலேயே குடோன்களுக்கு தீவைத்ததாக இந்த நபர் முதலில் வாக்குமூலம் அளித்தான். ஆனால், பின்னர் பீடித்துண்டு கீழே விழுந்து அதில் இருந்து உருவான நெருப்பு மூலம் குடோன்களுக்கு தீப்பிடித்ததாக போலீஸ் வாக்குமூலத்தை மாற்றியது. ஆனால், இவையெல்லாம் மோடியின் போலீசுக்கோ, மோடியிடம் ஆதாயம் பெறும் ஊடகங்களுக்கோ ஒரு செய்தியே அல்ல. நரேந்திர மோடியின் உத்தரவுக்கு கீழ்படியும் அடிமை சேவகம் புரிவதாக குஜராத் ஊடகங்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட அமைப்பு ரீதியான தாக்குதல்களும், கொள்ளையும், தீவைப்புச் சம்பவங்களும் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்படுவதன் மூலம் இந்த குற்றச்சாட்டு நிரூபணமாகிறது.