சனி, 20 ஏப்ரல், 2013

ராஜஸ்தான்:விளையாட்டு விருது கிடைக்கவேண்டுமெனில் ஆர்.எஸ்.எஸ், ஜமாஅத்தே இஸ்லாமியில் தொடர்பு இருக்க கூடாது!


ஜெய்ப்பூர்:விளையாட்டுத்துறையில் விருது அளிப்பதற்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளது. விருதுக்குபரிந்துரைக்கப்படவேண்டுமெனில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ராஷ்ட்ரீய சுயம் சேவக்கிலோ, ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பிலோ உறுப்பினராக இல்லை என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது. ராஜஸ்தான் ஸ்டேட்ஸ் ஸ்போர்ட்ஸ் கவுன்சில்தான் விருதுகளை வழங்குகிறது. 2012-13-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விருதுக்கான தொகை 10 மடங்காக உயர்த்தப்பட்டது. முதல் கட்ட விருதுகளை கடந்த மாதம் ஸவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் வைத்து ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவர் சிவ்சரண் மாலி வழங்கினார். 1986-ஆம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் மாநில அரசின் சட்டங்களை மட்டுமே தாங்கள் கடைப்பிடிப்பதாக ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் மேற்கண்ட நிபந்தனைக் குறித்து விளக்கம் அளித்துள்ளது. சட்டரீதியாக இயங்கும் ஒரு அமைப்பில் உறுப்பினராவதற்கான குடிமகனின் உரிமை மீதான அத்துமீறல் என்று அரசு நிபந்தனைக்குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் ஜமாஅத்தே இஸ்லாமியின் ராஜஸ்தான் மாநில தலைவர் குர்ஷித் ஹுஸைன். ஜமாஅத்தே இஸ்லாமியில் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்காகவிளையாட்டு வீரருக்கு விருதை மறுக்கும் நிலைப்பாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.