புதன், 12 செப்டம்பர், 2012

"யாரோ தப்பு செய்ய நாங்க தவிக்கிறோம்': கூடங்குளத்தின் வேதனைக் குரல்கள்


கூடங்குளம்: "சிலர் அரங்கேற்றி வரும் வன்முறையால், பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர்,' என கூடங்குளத்தை சேர்ந்தவர்கள் வேதனை தெரிவித்தனர். அணுமின் நிலைய எதிர்ப்பாளர் உதயக்குமாரின் ஆதரவாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக, கூடங்குளம் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பொது சொத்துகளையும், தனியார் சொத்துகளையும் சேதப்படுத்தி, பொதுமக்கள் மத்தியில், போலீசாருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத்திற்கு அழைத்தது போல், வன்முறைக்கும், "வீட்டில் இருந்து ஒருவர் வரவேண்டும்,' என கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதனால், சிறுவர் முதற்கொண்டு, கட்டாயப்படுத்தி, வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உதயக்குமார் ஆதரவாளர்களின் இந்த செயலால், பலரின் உடமைகள் சேதமடைந்ததுடன், வழக்கிலும் சிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விரக்தி அடைந்த பெண்கள் சிலரின் குமுறல் இதோ: பஞ்சவர்ணம்: என் கணவர் தங்கச்சாமிக்கு 75 வயதாகிறது. அவரால் நடக்கவே முடியாது. கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனங்க. திரும்பி வரும் போது, படுகாயத்துடன் வந்தார். மருத்துவமனையில் சேர்த்திருக்கேன். யாரோ செய்த தவறுக்கு, நாங்கள் சிரமப்படுறோம். பாலா: சிலர் செய்யும் வன்முறையால், ஊரே தீவிர கண்காணிப்பில் வந்துள்ளது. ஊரில்நடக்கும் விசேஷங்களில் கூட பங்கேற்க முடியவில்லை. பெண்கள் அனைவரும் தவிக்கிறோம். முத்துலட்சுமி: வன்முறையாளர்களால், அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். அமைதியான போராட்டத்தை தான், நாங்கள் விரும்புகிறோம். வன்முறைக்கும், எங்களுக்கும் சம்மந்தமில்லை, என்றனர்.கடங்குளத்தை சேர்ந்த பலரும், இதே கருத்தையே முன்வைக்கின்றனர். இருப்பினும், வன்முறையாளர்களின், "வலுக்கட்டாயத்தை' அவர்களால் தவிர்க்க முடியவில்லை.
சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி -கூடங்குளத்தில் எஸ்.பி., பேட்டி: ""வதந்திகளை பரப்பி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த, வன்முறையாளர்கள் முயற்சி செய்கிறார்கள்,'' என விஜயேந்திர பிதரி எஸ்.பி., தெரிவித்தார். கூடங்குளத்தில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நேற்று முன்தினம் கூடங்குளத்தில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்களை, கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.போலீசார், சர்ச் உள்ளே நுழைந்து தாக்கியதாகவும், குழந்தையை புதரில் வீசியதாகவும், வன்முறையாளர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். அதன் மூலம், சசட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளனர். மக்கள், அதை நம்ப வேண்டாம். வன்முறைக்கு காரணமானவர்களை பிடிக்க, உயர் அதிகாரிகளை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சரணடையும் பட்சத்தில், உதயகுமார் மீது நிறைய வழக்குகள் இருப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக