வியாழன், 28 மார்ச், 2013

சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்!


தம்மாம்:சவூதி அரேபியாவில் உள்நாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான சுதேசி மயமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சட்டவிரோத தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் பணியை அந்நாட்டின் தொழில் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. பரிசோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொந்த ஸ்பான்ஷரின் கீழ் வேலைச் செய்யாமல் வேறு பணிகளை புரிபவர்கள் மற்றும் தங்கும் அனுமதி(இகாமா)யின் கால அவகாசம் தீர்ந்தவர்களும் கைது செய்யப்படுகின்றனர். ஸ்பான்ஸர்களின் கீழ் வேலைச் செய்யாத ஃப்ரீ விசாவில் பணியாற்றுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக வேலை பார்ப்பவர்கள், தங்கியிருப்பவர்கள் ஆகியோரை கைது செய்து நாடு கடத்த கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில்-உள்துறை அமைச்சகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ்வும் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தலைநகரான ரியாதில் பத்ஹா, தம்மாமின் இதய பகுதியான ஸீக்கோ பில்டிங் பகுதி, ஜித்தா, அல்ஹஸ்ஸா ஆகிய பகுதிகளில் போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சனிக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் ரெய்டு தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிபந்தனைகளை கடைப்பிடிக்காத சிறு கடைகள் பூட்டிக்கிடக்கின்றன. ஃப்ரீ விசாக்காரர்களான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி கட்டிட வேலைகளை நடத்தி வந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் நேற்று முதல் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. நாட்டின் தொழில்துறையை சட்டப்பூர்வமாக மாற்றவும், சுதேசிகளுக்கு முடிந்தவரை வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் நோக்கமாக கொண்டு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதியின் தொழில் அமைச்சர் எஞ்சீனியர் ஆதில் ஃபகீஹ் தெரிவித்துள்ளார். கல்வி தகுதியும், பணிச்செய்ய தயாராக உள்ள உள்நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2011 நவம்பர் மாதம் முதல் சுதேசிமயமாக்கும் திட்டமான நிதாகத் சவூதியில் அமல்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக