வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

போலீஸ் சித்திரவதை:முஸ்லிம் டாக்டருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

sc-awards-rs-5-lakh-compensation-to-muslim-doctor-torture
புதுடெல்லி:சட்டீஷ்கர் மாநிலத்தில் போலீசாரின் சித்திரவதைக்கு உள்ளான ஆயுர்வேத டாக்டருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டீஷ்கரை சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் மஹ்மூத் நய்யார் ஆஸம் என்பவர், நிலக்கரிச் சுரங்க மாஃபியா கும்பலை எதிர்த்துப் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், அவர் மீது கடந்த 1992-ம் ஆண்டு போலீஸில் பொய் புகார் அளித்தது. அந்தக் கும்பலின் தூண்டுதலின் பேரில் அவரை போலீஸார் கைது செய்து, சித்ரவதை செய்தனர். அவரை அவமதிக்கும் வகையிலும் நடந்துகொண்டனர்.
போலீஸாரால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு டாக்டர் மஹ்மூத் நய்யார், சட்டீஸ்கர் மாநில அரசிடம் கோரினார். அவரது கோரிக்கையை ஏற்க அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் முன் நேற்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது, 21 ஆண்டுகளுக்கு முன் போலீஸாரின் துன்புறுத்தலுக்கு உள்ளான டாக்டர் மஹ்மூதுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இத்தொகையைச் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து சரிசமமாகப் பெற்று, வழங்குமாறும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் ‘போலீஸ் காவலில் இருக்கும் குற்றம்சாட்டப்பட்ட நபரை அவமதிப்பதும், துன்புறுத்துவதும் மனித கெளரவம் என்ற சித்தாந்தத்துக்கே விரோதமானது. காவலில் இருக்கும் குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படாமல் பார்த்துக் கொள்வது போலீஸ் அதிகாரிகளின் புனிதமான கடமையாகும்’ என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக