திங்கள், 28 ஜனவரி, 2013

எகிப்திய புரட்சிக்கு 2 ஆண்டுகள்: தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம், மோதல்!


கெய்ரோ:எகிப்திய சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து அகற்றிய மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றன. புரட்சியின் மையமாக விளங்கிய தஹ்ரீர் சதுக்கத்தில் 2-ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். நேற்று எதிர்கட்சிகள் அதிபர் முர்ஸி மற்றும் ஆளுங்கட்சியான இஃவானுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. கெய்ரோவில் அதிபரின் அதிகாரப்பூர்வ வீட்டிற்கு முன்பாகவும் போராட்டங்கள் நடந்தன. 2011 ஆம் ஆண்டு ஜனவரி துவக்கத்தில் கிளர்ந்தெழுந்த புரட்சி போராட்டத்தில் எழுப்பிய “உணவு, சுதந்திரம், சமூக நீதி” ஆகிய முழக்கங்களே நேற்றும் எழுப்பப்பட்டன. வெள்ளிக்கிழமை தான் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது என்றாலும் வியாழக்கிழமையே தஹ்ரீர் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள் திரண்டனர். எதிர்கட்சி ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகையை பிரயோகித்தது. போலீசார் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், தார்மீக-சமூக முன்னேற்ற பிரச்சாரத்தை கடைப்பிடித்து வரும் இஃவான், புரட்சி வருடாந்திர நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கவில்லை. “எகிப்தின் வளர்ச்சிக்கா ஒன்றுபடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து இஃவான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. புதிய எகிப்தின் பிறந்த தினத்தை அமைதியாக கடைப்பிடிப்போம் என்று அதிபர் முஹம்மது முர்ஸி அழைப்பு விடுத்திருந்தார். “நாம் அனைவரும் ஒரு கப்பலில் பயணிக்கிறோம். கப்பல் பாதுகாப்பானதா? என்பதை உறுதிச் செய்யவேண்டியது பயணிகளின் கடமையாகும். வாக்குச்சீட்டின் மூலமாக முடிவான மக்கள் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும்”- என்று நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டி நடத்திய உரையில் முஹம்மது முர்ஸி அழைப்பு விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக