சனி, 5 ஜனவரி, 2013

விஸ்வரூபம் திரைப்படத்தை எங்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு!


சென்னை:முஸ்லிம் தலைவர்களிடம் படத்தை திரையிட்டு காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே .முஹம்மது ஹனீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; கேளிக்கை, பொழுதுபோக்கு, சுய சம்பாத்தியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கொள்கை நெறியாக ஏற்றுச் செயல்படும் இஸ்லாத்தையும், அதை வாழ்வியல் நெறியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தவறாகச் சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகள் அடிமட்டத்திலிருக்கும் முஸ்லிம் சகோதரனுக்கும் கூட பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது . இந்த அச்சத்தையும் ஐயத்தையும் போக்க ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்கு கமல்ஹாசன் கடமைப்பட்டிருக்கிறார். நங்கள் எடுத்து வரும் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்காத பட்சத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தங்கள் எதிர்ப்பு மற்றும் உணர்வுகளை ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மூலம் தெரிவிக்க வேண்டியது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடும். அத்தகைய சூழல் எழாத வண்ணம் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டியது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகின்றது என்பதை இக்கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக