சனி, 19 ஜனவரி, 2013

பாக்.,பிரதமர் மீதான ஊழல் வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தற்கொலை


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் பெர்வேஸ் அஷ்ரப், மீதான ஊழல் வழக்கை விசாரித்த, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி, தற்கொலை செய்து கொண்டார்.பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர், பெர்வேஸ் அஷ்ரப், மின் துறை அமைச்சராக இருந்த போது, மின் நிலையங்களை வாடகை விட்டதில், ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த ஒப்பந்தங்களை, மார்ச் மாதம் ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இந்த பேரத்தில் சம்பந்தப்பட்ட, அஷ்ரப் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி, ஊழல் தடுப்பு துறைக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், இதுவரை, இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, ஊழல் தடுப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை.மின் நிலைய வாடகை விவகாரத்தில், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், நடவடிக்கை எடுக்காத ஊழல் தடுப்புத் துறையை கண்டித்த சுப்ரீம் கோர்ட், பிரதமர் அஷ்ரப்பை, கைது செய்யும் படி, உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்புத் துறை தலைவர், பாஷிஷ் புகாரிக்கும் கண்டன நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையே, அஷ்ரப் மீதான ஊழல் வழக்கை, பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையை சேர்ந்த, இரண்டு அதிகாரிகள் விசாரித்தனர். இவர்களில் ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குனர், கம்ரான் பைசல். இவர், இஸ்லாமாபாத்தில் உள்ள தன் வீட்டில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக