சனி, 1 டிசம்பர், 2012

இந்திய நடிகைகள் நடித்த ஆபாச விளம்பரங்களுக்கு பாகிஸ்தான் தடை


இஸ்லாமாபாத்;""இந்திய நடிகைகள் நடித்த, "டிவி' விளம்பர படங்களை தடை செய்ய வேண்டும்,'' என, பாகிஸ்தான் எம்.பி.,க்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. பாகிஸ்தானில், ஏராளமான இந்திய, "டிவி' சேனல்களின் நிகழ்ச்சிகள், ஒளிபரப்பாகின்றன. பாலிவுட் படங்களுக்கு, பாகிஸ்தானில் அதிக ரசிகர்கள் உள்ளனர். "டிவி' நிகழ்ச்சிகளுக்கிடையே வரும், விளம்பர படங்களின் மாடல்கள், அரை குறை ஆடைகளுடன் போஸ் கொடுப்பதை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கண்டனம் தெரிவித்திருந்தார். "உடலில் உள்ள முடிகளை அகற்றும் க்ரீம் விளம்பரத்துக்கு, பாலிவுட் நடிகை கத்ரினா கைப், ஆபாச உடை அணிந்திருப்தை, குடும்பத்தினருடன் பார்க்க முடியாது' என, பாக்., சுப்ரீம் கோர்ட் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்."இந்திய, "டிவி' சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என, அங்குள்ள பழமைவாதிகள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இது தொடர்பாக விசாரித்த பார்லிமென்ட் குழுவினர் கூறியதாவது:பாகிஸ்தானுக்கு தனி கலாசாரம் உள்ளது. எனவே, இந்திய, "டிவி' நிகழ்ச்சிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்பு செய்யும் போது பாகிஸ்தான் கலாசாரத்துக்கு மதிப்பளிப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக, "டிவி' யில் செய்தி வாசிப்பவர்கள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண்கள் தலையை துணியால் மூடியிருக்க வேண்டும். கழுத்து கீழே துப்பாட்டாவால் போட்டிருக்க வேண்டும். இவ்வாறு பார்லிமென்ட் குழுவினர் கூறியுள்ளனர். இந்த பரிந்துரையை ஏற்பதாக, பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர், கமார் சமான் கைரா கூறியுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், "இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், தீர்ப்பு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய அரசிடமும் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம்' என, கைரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக