திங்கள், 3 டிசம்பர், 2012

எகிப்து அதிபரின் ஆதரவாளர்கள் முற்றுகையால்சுப்ரீம் கோர்ட் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு


கெய்ரோ: அதிபர் முகமது முர்சியின் ஆதரவாளர்கள், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டதால், அனைத்து விசாரணைகளையும், நீதிபதிகள் கால வரையறையின்றி ஒத்தி வைத்தனர்.எகிப்து நாட்டை, ஹோஸ்னி முபாரக், கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சியை எதிர்த்து, மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, முபாரக், ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார். ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர், முகமது முர்சி, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.முர்சி, அதிபரானது முதல், நீதித் துறைக்கும், இவரது ஆட்சிக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இடைக்கால ராணுவ ஆட்சியின் போது நடந்த பார்லிமென்ட் தேர்தலில், முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், பார்லிமென்டை கலைத்தது.ஆனால், அதிபர் முர்சி, "இந்த பார்லிமென்ட் மீண்டும் செயல்படும்' என, உத்தரவிட்டார். இதனால், அதிபர் மீது, நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், தனக்கு எல்லையற்ற அதிகாரம் அளிக்க, வழி செய்யும், அரசியல் சாசனத்தை முர்சி, கடந்த வாரம் வெளியிட்டார். இதற்கு, எகிப்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனி நபரிடம் அதிகாரம் குவிந்திருப்பதற்கு, நீதிபதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்."தன்னை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை' என்ற, சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தை, பார்லிமென்டின் ஒப்புதலுக்கு வைப்பதாக, முர்சி தெரிவித்துள்ளார். "ஏற்கனவே, பார்லிமென்ட் கலைக்கப்பட்டு விட்டதாக உத்தரவு இருப்பதால், முர்சியின் இந்த நடவடிக்கை செல்லாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.எகிப்து பார்லிமென்ட் கலைக்கப்பட்டு விட்டது, என்ற உத்தரவு குறித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபர் முகமது முர்சியின் ஆதரவாளர்கள், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டனர்.சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கோடு, அதிபரின் ஆதரவாளர்கள் செயல்படுவதாகக் கூறிய நீதிபதிகள், அனைத்து நடவடிக்கைகளையும் காலவரையறையின்றி ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக