புதன், 5 டிசம்பர், 2012

இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு வலுக்கிறது


லண்டன்/பாரிஸ்:சிறப்பு அந்தஸ்தை கொண்ட பார்வையாளர் பதவி ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீனுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கை அமைதி முயற்சிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரான்சு, பிரிட்டன் ஆகிய நாடுகள் இஸ்ரேல் தூதர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ரஷ்யாவும், ஜெர்மனியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா வில் சிறப்பு பார்வையாளர் அந்தஸ்திற்கான அங்கீகாரம் ஃபலஸ்தீனுக்கு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அதிகப்படுத்த உத்தரவிட்டது. இந்நடவடிக்கை அமைதி முயற்சிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியிருப்புகளை கட்டும் இஸ்ரேலின் நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது. இது மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் ஃபலஸ்தீனர்களுக்கு இடையேயான உறவை துண்டிக்கவே உதவும். இரு நாடுகள் என்ற தீர்வை இது சீர்குலைப்பதாகும் என்று பான் கீ மூன் கூறியதாக அவரது செய்தி தொடர்பாளர் மார்டின் நிசர்கி தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடுமையான எதிர்ப்புகளையும் புறக்கணித்து சிறப்பு பார்வையாளர் அந்தஸ்தை பெற்ற நாடு என்ற அங்கீகாரத்தை ஃபலஸ்தீன் பெற்றது. ஐ.நா பொது அவையில் வாக்கெடுப்பு நடந்த தினத்திலேயே ஃபலஸ்தீனில் 3000 யூதக் குடியிருப்புகளை கட்டுவதற்கு நெதன்யாகு உத்தரவிட்டார். ஃபலஸ்தீன் ஆணையத்திற்காக வசூலித்த வரிகள் உள்ளிட்ட நிதிகளையும் முடக்குவதாக நேற்று முன் தினம் இஸ்ரேல் அறிவித்தது. ஃபலஸ்தீன் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு பிரிட்டனும், பிரான்சும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. பாரிஸில் இஸ்ரேல் தூதரை பிரான்சு அரசும், லண்டனில் இஸ்ரேல் தூதரை பிரிட்டனும் அழைத்து யூதக் குடியிருப்புகளை அதிகரிக்கும் இஸ்ரேலின் அராஜக நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேல் தூதரை அழைத்து சுவீடன் அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு ரஷ்யாவும், ஜெர்மனியும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தீர்மானத்தை இஸ்ரேல் வாபஸ் பெறாவிட்டால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிப்பதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது. ஐ.நா பொது அவையில் வாக்கெடுப்பு நடந்தபோது பிரிட்டன் கலந்துகொள்ளவில்லை. இஸ்ரேலில் தங்களின் தூதரை பிரிட்டன் திரும்ப அழைக்கும் என்று இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸ் கூறுகிறது. இஸ்ரேலில் தங்களது தூதரையும் திரும்ப அழைக்க பிரான்சும் ஆலோசித்து வருகிறது. அதேவேளையில் இச்செய்திகள் குறித்து இரு நாடுகளின் தூதரகங்களும் பதில் அளிக்கவில்லை. இஸ்ரேலின் முடிவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தடையை ஏற்படுத்தும் என்று பிரான்சு அரசு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஐ.நா அங்கீகாரத்திற்கான ஃபலஸ்தீனின் முயற்சிக்கு முதலில் ஆதரவை தெரிவித்த ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக