வெள்ளி, 2 நவம்பர், 2012

பீகிங் பல்கலை.,யில் பாடம் நடத்த வருமாறு கலாமுக்கு சீனா அழைப்பு


பீஜிங்: புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த வருமாறு, இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக “இந்திய ஏவுகணை தந்தை” என அழைக்கப்படும் அப்துல் கலாம் பீஜிங் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு அவரை சந்தித்த பீகிங் பல்கலைக்கழக சேர்மன் ஜூ சான் லு, தங்களது பல்கலைக்கழத்திற்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு அழைப்பு விடுத்தார். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை வந்து தங்களுக்கு பாடம் எடுக்கும்படியும், கலாம் விருப்பப்படும் எந்த பாடத்தை வேண்டுமானாலும் (உதாரணமாக அறிவியல் தொழில்நுட்பம் அல்லது மனிதப்பண்புகள்) அவர் எடுக்கலாம் என்றும், அதற்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சீனாவில் தங்கலாம் என்றும் சான் லு தெரிவித்தார். மேலும், கலாம் பயன்படுத்துவதற்காக பல்கலை., வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பரிசோதனைக் கூடம் அமைத்துத்தரப்படும் என்றும் அவர் கூறினார். சீனாவின் அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த கலாம், “நான் ஒரு பேராசிரியர். தற்போது அமெரிக்காவில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பேராசிரியராக எனது அறிவு தேவைப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு போதிக்கிறேன். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினரை நான் மிகவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். எனினும் கலாமின் பயணத்திட்டத்தின் படி, அவருக்கு நேரம் கிடைக்கும்பட்சத்தில் அவர் பீகிங் பல்கலை.,யில் பாடம் எடுப்பார் என அவரது உதவியாளர் தெரிவித்தார். சீனாவில் உள்ள விமான தொழில்நுட்ப மையங்களுக்கு கலாமை அழைத்துச் செல்ல சீன அரசு ஒரு சிறப்பு பயணதிட்டத்தை வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக