செவ்வாய், 6 நவம்பர், 2012

இந்தியா பாக்., கிரிக்கெட்: பால் தாக்கரே கடும் எதிர்ப்பு


மும்பை: மத்திய அமைச்சர் ஷிண்டே தனது கருத்தை வாபஸ் பெறும் வரையில், மும்பையில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் மற்றும் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்த சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, பழையவற்றை மறந்து விடுவோம் என கூறியிருந்தார். இதற்கு பால் தாக்கரே தனது கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “ஷிண்டே அவர்களே, உங்களுக்கு வெட்கம் என்பது சிறிதளவேனும் இருந்தால், உங்களது வெட்கம்கெட்ட கருத்துக்களை திரும்பப்பெறுங்கள். பழையவற்றை மறந்து விடுங்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அதை எவ்வாறு மறக்க முடியும். நான் தற்போது உடல்நலமில்லாமல் உள்ளேன். இந்த சூழலிலும் எனது ரத்தம் கொதிக்கிறது. எனது உடன்பிறப்புகளுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையூறு செய்யுங்கள்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஒரு தேசிய அவமானம் என வர்ணித்துள்ள தாக்கரே, பி.சி.சி.ஐ., யின் இந்த முடிவு, நாட்டை வஞ்சிக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக