வெள்ளி, 2 நவம்பர், 2012

நூறு எம்.பி.,க்கள் ஹஜ் பயணம்ஆப்கன் பார்லிமென்ட் முடங்கியது


காபூல்:ஆப்கானிஸ்தானில், நூற்றுக்கும் அதிகமான எம்.பி.,க்கள், "ஹஜ்' யாத்திரை மேற்கொண்டதால், அந்நாட்டு பார்லிமென்ட், விவாதம் நடத்த ஆளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.ஆப்கானிஸ்தானில், 2001ல், அமெரிக்கா தலைமையிலான, "நேட்டோ' படைகளின் அத்துமீறிய தாக்குதலினால், "தலிபான்' களின் ஆட்சி அகற்றப்பட்டது. அதன் பின், அமெரிக்காவினால் ஜனநாயக ( ? ) முறையில், தேர்தல் நடத்தப்பட்டு, ஹமீத் கர்சாய், இரண்டு முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆப்கன் பார்லிமென்ட்டின், கீழ் சபையில், 249 பேரும், மேல் சபையில், 102 பேரும் உள்ளனர்."வரும், 2014ம் ஆண்டு, ஏப்ரல் 5ம்தேதி, தேர்தல் நடைபெறும்' என, ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தலுக்கு முன்,வெளிநாட்டு படைகளை வாபஸ் பெற செய்வது குறித்து, பார்லிமென்ட்டில் விவாதம் நடத்தப்பட இருந்தது. ஆனால், போதுமான எம்.பி.க்கள் இல்லாததால், இந்த விவாதம் நடக்கவில்லை.காபூல் நகர எம்.பி.,ஷிங்காய் கரோகில் கூறியதாவது: மெக்காவுக்கு, வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும்; அதை நான் குறை கூறவில்லை. ஆனால், ஆப்கன் எம்.பி.,க்கள் 100 பேர், ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். இவர்களில் பலர், ஐந்தாவது முறையாக ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். மக்கள் வரி பணத்தில் இவர்கள், சவுதிக்கு சென்றுள்ளனர்.ஹஜ் யாத்திரை முடிந்து, இவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால், பார்லிமென்ட்டில் முக்கிய விவாதங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.என்று மிகவும் கவலைப் படுகிறார் காபூல் நகர எம்.பி.,ஷிங்காய் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக