புதன், 11 ஜூலை, 2012

சவூதி:பலதார மணத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் நடத்தும் கல்லூரி மாணவி! 11 Jul 2012

student encourages polygamy

ஜித்தா:நீதியை கடைப்பிடிப்பவர்களும், பொருளாதாரம் மற்றும் உடல்ரீதியாக பலமிக்கவர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை புரியவேண்டும் என கோரி சவூதி அரேபியாவில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஜித்தாவில் மருத்துவக் கல்வி பயின்றுவரும் 19 வயதான நூஃப் அல் அமூதி என்ற மாணவி இதர மாணவிகளிலிருந்து வித்தியாசமாக பலதார மணத்தை வலியுறுத்தும் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாக அல்-வதான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுக்குறித்து மாணவி நூஃப் கூறியது: ‘எல்லா சமூகங்களிலும் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை புரிந்துகொண்டுதான் நான் பலதார மணத்தை வலியுறுத்தியும், ஊக்கப்படுத்தியும் வருகிறேன்.

சவூதியில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எல்லாஆண்களும் ஒரு மனைவி என்ற நிலையை தொடர்ந்தால் இதர பெண்களின் நிலைமை என்னவாகும்? பலதார மணத்தை தவறாக கருதுபவர்கள் ‘மிஸ்யார்’ திருமணம் என்ற தற்காலிக திருமணத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், அதுதான் உண்மையில் அவமதிக்கத்தக்கது. நான் யதார்த்த சூழலில் இருந்து சிந்தித்தேன். அப்பொழுதுதான் புரிந்தது பலதாரமணம் தான் மிகவும் பொருத்தமானதும், அடிப்படையானதும் என்பது.

பெண்களின் கற்பை முடிந்த வரை பாதுகாக்கும் சிந்தனையே இதன் பின்னணியில் உள்ளது. இதர இளம்பெண்கள் பலதார மணத்தை எதிர்க்கும்பொழது நான் அதற்காக பிரச்சாரம் நடத்த தயாராகி வருகிறேன். அரபு சமூகங்களில் அதிக வயதான கன்னிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது பிரச்சனையாக மாறி வருகிறது. சவூதியில் மட்டும் இத்தகைய பெண்கள் 15 லட்சம் பேர் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன’ இவ்வாறு நூஃப் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக