ஞாயிறு, 29 ஜூலை, 2012

பேய் பிசாசுகளைத் துரத்தியடித்த தவ்ஹீத் ‎ஜமாஅத்


“பேய் நடமாட்டத்தால் மக்கள் பீதி!”, “பிசாசு நடமாட்டத்தால் மக்கள் கலக்கம்” என்று ‎அடிக்கடி பரபரப்பு செய்தி வெளியிட்டு, தங்களது விற்பனையை சூடுபிடிக்க வைத்து ‎பத்திரிக்கைகள் காசு பார்க்கின்றன. அந்த வகையில் கடந்த 12.07.2012 அன்று தினமலர் ‎பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ‎உள்ள ஆத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் பெண் பேய் ஒன்று சுற்றிக் ‎கொண்டிருப்பதாகவும், அது மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டதாகவும் ஒரு ‎பரபரப்பு செய்தியை வெளியிட்டிருந்தது தினமலர். இதே செய்தியை சன் டிவியும் ‎ஒளிபரப்பியது
‎ ‎ 
தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் மாநிலத்தலைமையகத்தின் வழிகாட்டுதலின் பேரில் ‎திருவள்ளூர் மாவட்டம்,  ஆவடி கிளையின் மூலமாக மக்கள் மத்தியில் ‎விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து அனறைய தினமே பேய் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்பட்ட ‎அந்த மின் கம்பத்திற்கு தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் நிர்வாகிகள் சென்றனர். அந்த மின் கம்பத்தில் ‎ஜமாஅத்தின் கொடிகளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்ட ‎ஆரம்பித்தவுடன் அந்தப்பகுதியில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.‎
‎ 
ஊரில் உள்ளவர்களெல்லாம் பேய், பேய் என்று பயந்து பீதியடைந்து தலைதெறிக்க ‎ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் தைரியமாக, எந்த மின் கம்பத்தில் பேய் ‎உள்ளதாக சொல்லப்படுகின்றதோ அந்த மின் கம்பத்திலேயே போய் கொடிகளைக் ‎கட்டுகின்றனரே! என்று அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.‎
பேய் பயத்தை விரட்ட சிறப்புப் பிரச்சாரம் :‎
‎ 
உடனே அங்கு பிரச்சாரக் கூட்டம் துவங்கியது. திருவள்ளூர் மாவட்டத் துணைச் ‎செயலாளர் சகோ.ஹுசைன் அலி அவர்கள், “பேய் பிசாசு உண்டா?” என்ற தலைப்பில் ‎உரை நிகழ்த்தினார்.‎
‎ 
அவர் தனது உரையில் மூன்று விஷயங்களுக்காக பேய் நடமாட்டம் இருப்பதாக ‎மக்களுக்கு மத்தியில் பீதியை ஏற்படுத்துவார்கள்.‎
‎ 
• சிலர் சமூக விரோத செயல்களைச் செய்யும் பொழுது அதை மக்கள் பார்க்கக் ‎கூடாது என்பதற்காக இப்படி ஒரு பீதியை ஏற்படுத்தி தங்களின் சட்ட விரோத ‎செயல்களை எந்த பிரச்சனையும் இல்லாமல் செய்து கொள்வார்கள்.‎

• இடங்களை விற்பனை செய்வதில் புரோக்கர்களாக செயல்படும் சில ‎இடைத்தரகர்கள் அந்தப் பகுதியில் உள்ள இடத்தின் மதிப்பை குறைக்க வேண்டும் ‎எனத் தீர்மானித்து விட்டால், அந்தப் பகுதியில் இப்படி ஒரு பீதியை ஏற்படுத்துவார்கள். ‎அதனால் இடத்தின் விலை கடுமையாக சரிந்துவிடும். இப்படி வியாபாரத்துக்காக ‎செய்பவர்களும் உண்டு.‎

• பேய் பிசாசுகளை விரட்டுகிறோம்; தாயத்துகளைக் கட்டுகிறோம்; மந்திரங்களைச் ‎சொல்கிறோம் என்று சொல்லி தொழில் நடத்தக் கூடியவர்கள் இப்படி ஒரு புரளியைக் ‎கிளப்பி விட்டு தங்களுடைய தொழிலைப் பெருக்கிக் கொள்வார்கள்.‎

இப்படி மூன்று சாராரில் யாரோ ஒருசாரார்தான் இதைச் செய்து இருக்கிறார்கள் ‎என்று மக்களுக்கு விளக்கப்பட்டது.‎
‎அதே போன்று அந்தப் பேய் வரத் துவங்கியதிலிருந்து மின் கம்ப விளக்குகளும் ‎எரியவில்லை என மக்கள் கூறியதிலிருந்து இது திட்டமிட்ட சதி வேலை என்பது ‎அம்பலமானது.‎
‎ 
இந்த சதிகாரக் கும்பலை விரைவில் சட்டத்திற்கு முன்னால் நிறுத்துவோம் எனக் ‎கூறி, மேலும் உடனடியாக மின்சார வாரியத்தை அணுகி பழுது போன விளக்குகளைச் ‎சரி செய்து தருவதாக மின்சார வாரியமும் உறுதி அளித்த செய்தியையும் ‎மக்களிடத்தில் கொண்டு சென்ற பிறகு மக்களுக்குப் பிரச்சனை என்ன என்பது விளங்க ‎ஆரம்பித்தது. அடுத்து உண்மையில் அந்தப் பேய்க்கு சக்தி இருக்கும் என்று ‎சொன்னால் எங்களை ஏதாவது செய்யச் சொல்லுங்களேன் பார்ப்போம் என்று ‎அறைகூவல் விடப்பட்டது.‎
‎ 
மேலும் பகலில் வந்தால் பேய் வராது என்று சொல்வார்கள். அதனால்தான் இரவில் ‎வந்து இருக்கிறோம் எனக் கூறிய பொழுது மக்களுக்கு ஓரளவு பயம் தெளிய ‎ஆரம்பித்தது. இறுதியாக இஸ்லாம் உலகத்திற்கு சொல்லக்கூடிய செய்தி எனக் கூறி, ‎‎“உயிர் என்பது அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. அல்லாஹ்வின் ‎கட்டுப்பாட்டை மீறி அவன் போட்டுள்ள திரையைத் தாண்டி இறந்துவிட்ட எந்த ‎ஆன்மாவாலும் இந்த உலகத்திற்குத் திரும்பவும் வரமுடியாது” எனச் சொல்லி பேய்கள் ‎என்பது நூறு சதவிகிதம் பொய் என்று அவர் பேசி முடித்தார்.‎
மொபைல் போனில் பேய்ப் படம்(?):‎
‎ 
இவ்வாறு பிரச்சாரம் செய்து முடித்தவுடன், ஒரு சகோதரர் பேய்கள் இருப்பதற்கு ‎ஆதாரம் உள்ளதாகக் கூறி மின் கம்பத்தில் பேய் நின்ற பொழுது எடுக்கப்பட்ட படம் ‎தனது மொபைல் போனில் உள்ளதாகக் கூறி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ‎கொண்டு வந்து காட்டினார். அந்தப் புகைப்படத்தை நீங்கள் எப்பொழுது எடுத்தீர்கள் ‎எனக் கேட்ட பொழுது, “எனக்கு என்னுடைய நண்பன் அனுப்பினார்” எனக் கூறினார். ‎அந்தப் புகைப்படம் ஒன்றுதான் ஆதாரம் என மக்களும் நம்மிடம் தெரிவித்தனர். ‎மேலும் அந்தப் புகைப்படம்தான் தங்களை பெரும் பயத்தில் ஆழ்த்தியதாகவும் ‎அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அந்தப் புகைப்படத்தை அந்த இடத்திலேயே ஆய்வு ‎செய்த பொழுது அந்தப் புகைப்படம் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் ‎செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த மின் ‎கம்பத்திற்குப் பின்னால் உள்ள வீடு மற்றும் அந்தப் பகுதியில் உள்ள மரம் எதுவும் ‎புகைப்படத்தில் காணவில்லை. இதுவே இந்தப் புகைப்படம் போலியானது என்பதற்குப் ‎போதுமான சான்றாகும் என மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த ‎மக்கள் கூட்டத்தைப் பார்த்து பிரச்சனை எனக் கருதி அங்கு வந்த காவல்துறை ‎அதிகாரி ஒருவர் நம்முடன் சேர்ந்து கொண்டு அவரும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார். ‎பிறகு அந்தப் பகுதியைச் சார்ந்த சகோதரி ஒருவர் எங்கள் தெருவிற்கும் வந்து ‎பிரச்சாரம் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த இடத்திற்கும் ‎சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.‎
‎  
எனவே இத்தகைய மூடநம்பிக்கைகளை ஒழிக்க களம் காணுவதுடன், இதன் ‎மூலம் தூய இஸ்லாத்தையும் மக்கள் மத்தியில் நாம் எத்திவைக்க வேண்டும் ‎என்பதையும் இதன் வாயிலாக  கோரிக்கையாக வைத்துக் ‎கொள்கின்றோம்.‎

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக