ஞாயிறு, 15 ஜூலை, 2012

இஷ்ரத் வழக்கு:சதீஷ் வர்மாவின் சேவையை சி.பி.ஐக்கு அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Ishrat Jahan encounter case- HC steps in to ensure Satish Verma joins CBI investigation
அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலி என்கவுண்டர் வழக்கில் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐக்கு உதவ மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவின் சேவையை கிடைக்க உதவ வேண்டும் என குஜராத் மாநில அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் விசாரணை நடத்த சதீஷ் சர்மாவை 6 மாதம் தங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்ற சி.பி.ஐயின் கோரிக்கையை குஜராத் மாநில அரசு எதிர்த்தது. ஆனால், நீதிமன்றம் அரசின் எதிர்ப்பை நிராகரித்துவிட்டது.
இஷ்ரத் ஜஹான் வழக்கில் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் ஒரு அங்கமாக இருந்தவர் சதீஷ் வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அஹ்மதாபாத்தில் வைத்து இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேரை மோடியின் போலீஸ் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலைச் செய்தது. இஷ்ரத் ஜஹானும், இதர 3 பேரும் லஷ்கர்-இ-தய்யிபா என்ற இயக்கத்தின் உறுப்பினர்கள் என்றும், அவர்கள் நரேந்திர மோடியை கொலைச் செய்ய வந்தார்கள் என்றும் பொய்யாக குற்றம் சாட்டி குஜராத் போலீஸ் அவர்களை கொலைச் செய்தது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடந்த ஆரம்ப கட்ட விசாரணையில் இஷ்ரத் உள்பட 4 பேர் கொலைச் செய்யப்பட்டது போலி என்கவுண்டரில்தான் என்பதை சதீஷ் வர்மா உள்ளிட்ட சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது. போலீஸ் கூறிய இடத்திலும், நேரத்திலும் போலி என்கவுண்டர் நடக்கவில்லை என்பதையும் வர்மா கண்டுபிடித்தார்.
சதீஷ்வர்மாவின் விசாரணைக்கு பயந்த மூத்த போலீஸ் அதிகாரிகள் சிலர் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதேவேளையில் 17 வருடங்கள் பழமையான வழக்குடன் தொடர்புபடுத்தி வர்மாவின் மீது மோடி அரசு விசாரணையை துவக்கியது. 1995-ஆம் ஆண்டு போர்பந்தரில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் வேளையில் வர்மா, ஆர்.டி.எக்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை தப்பிக்க அனுமதித்தார் என்பது குற்றச்சாட்டாகும்.
இஷ்ரத் ஜஹான் வழக்கில் உறுதியான நிலைப்பாட்டை கையாண்டதால் மாநில அரசு தனக்கு கொடுமை இழைக்கிறது என வர்மா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக