வெள்ளி, 13 ஜூலை, 2012

நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: 4 பேர் கைது!

Four arrested for molesting teen in Guwahati
குவஹாத்தி:இருபது பேர் சேர்ந்து அஸ்ஸாம் மாநில தலைநகர் குவஹாத்தியின் முக்கிய சாலையில் மக்கள் மத்தியில் வைத்து 17 வயது இளம்பெண்ணின் ஆடையை அவிழ்த்து பாலியல் ரீதியாக கொடுமை செய்த சம்பவத்தில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். குவஹாத்தியில் கடந்த திங்கள் கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் போலீஸ் மீது எழுந்த விமர்சனத்தை கிண்டலடித்த போலீஸ் டி.ஜி.பியின் கூற்று பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்யும் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து போலீஸ் நடவடிக்கை எடுத்தது.
இதுத்தொடர்பாக டி.ஜி.பி ஜெயந்த் நாராயண் சவுத்ரி கூறியதாவது: ‘இந்தச் சம்பவம் தொடர்பான விடியோ ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து அனைவரின் அடையாளமும் எளிதாகக் கண்டறிய முடிந்தது. விரைவில் மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
கடந்த திங்கள்கிழமை இரவு அந்த இளம்பெண்ணும், 4 இளைஞர்களும் குவாஹாத்தியின் ஷில்லாங் சாலையில் உள்ள பாருக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவலாளிகளால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி வழியாகச் சென்ற சிலர், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். அவரின் ஆடையை களைந்து நிர்வாணப்படுத்த முயற்சித்துள்ளனர். இதைத் தடுத்த பொதுமக்கள் சிலர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அப்பகுதிக்கு உடனடியாகச் சென்று அந்த பெண்ணை மீட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அஸ்ஸாம் எலக்ட்ரானிக் மேம்பாட்டு கார்ப்பரேஷன் நிறுவன ஒப்பந்த ஊழியர் அமர்ஜோதி காலிதா (இவர் டிவி மெகா தொடரில் நடித்துள்ளார்), தனஞ்சய், புல்புல்தாஸ் உள்பட 4 பேரை கைது செய்துள்ளோம்.’ என்றார்.
இந்தச் சம்பவத்தில் போலீஸார் விரைவாக செயல்படவில்லை என புகார் கூறப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, “போலீஸார் ஒன்றும் ஏ.டி.எம். மிஷின் அல்ல. கார்டை நுழைத்தவுடன் பணம் வருவதைப் போல, குற்றச்சம்பவங்கள் நடந்ததும் இடத்தில் ஆஜராவதற்கு’ என்று கூறினார்.
டிஜிபியின் இந்தப் பேச்சு பலத்த சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து அதற்கு விளக்கம் அளித்து டிஜிபி கூறியது: “சில நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடுகிறது. சம்பவம் நிகழ்ந்தபோது, அவ்வழியாகச் சென்றவர்களும், வீடியோ எடுத்தவர்களும் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை’ என்றார்.
மற்றொரு காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் பெண்களை மானபங்கப்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றபோது, அதற்கு முக்கியத்துவம் தராமல் இருந்த ஊடகங்கள், இதற்கு மட்டும் முக்கியத்துவம் தருவது ஏன்?’ என்றார்.
அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் கூறுகையில், ‘இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது. பார்கள், கிளப்கள் மற்றும் ஹோட்டல்களில் கண்காணிப்பை அதிகரிக்கும்படி காவல் துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கம் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சண்டீகரில் செய்தியாளர்களிடம் கூறியது: ‘இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது குறித்து அஸ்ஸாம் முதல்வருடன் பேசவுள்ளேன். இளம்பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது’ என்றார்.
அஸ்ஸாம் டிஜிபி மற்றும் மற்றொரு காவல் துறை அதிகாரி கூறிய கருத்துகள் குறித்து கேட்டபோது, ‘மிகவும் ரசனையற்ற விமர்சனம் அது. பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தில்லியில் மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்தான் நடக்கின்றன’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக