சனி, 14 ஜூலை, 2012

துணை குடியரசு தலைவர்:ஐ.மு கூட்டணி வேட்பாளர் ஹாமித் அன்ஸாரி! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

India's Vice President Mohammad Hamid Ansari shows his ink-marked finger after casting his vote at a polling station in New Delhi
புதுடெல்லி:ஹாமித் அன்ஸாரி 2-வது முறையாக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக காங். தலைமையிலான ஐ.மு கூட்டணியால் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று(ஜூலை14) அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
துணை குடியரசு தலைவராக இருக்கும் ஹாமித் அன்ஸாரியின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. இதனையடுத்து ஆகஸ்ட் 7ம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன்  அறிவித்தது.
குடியாசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை நிறுத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹாமித் அன்ஸாரியை மீண்டும் நிறுத்துவது என முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் குடியரசு துணைத் தலைவர் தேர்தகில் ஹாமித் அன்ஸாரியையே மீண்டும் நிறுத்துவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
துணை குடியரசு தலைவர் தேர்தலில் ஹாமித் அன்ஸாரிக்கு பெருவாரியான எம்.பிக்களின் ஆதரவு இருப்பதால் அவர் இத்தேர்தலில் எளிதாக வெற்றிப் பெறுவார் என கருதப்படுகிறது. ஹாமித் அன்ஸாரி 2-வது முறையாக துணை குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் முன்னாள் துணை குடியரசு தலைவர் மறைந்த எஸ்.ராதாகிருஷ்ணனின் சாதனையை சமன் செய்வார். எஸ்.ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை துணை குடியரசு தலைவராக பதவி வகித்தார்.
கடந்த முறை நடந்த தேர்தலில் ஹாமித் அன்ஸாரி பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட நஜ்மா ஹெப்துல்லாஹ்வை தோற்கடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக