வியாழன், 26 ஜூலை, 2012

மெளனம் கலைத்தார் சூகி: சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு சட்டம் கொண்டுவர கோரிக்கை!

Suu Kyi urges MPs to back minority rights
யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மரில் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட சூழலில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஆங் சான் சூகி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் முதன்முதலாக நடத்திய உரையில் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டுவர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அரசு ஆதரவுடன் நடைபெறும் இனப்படுகொலையைக் குறித்து சூகி தனது உரையில் குறிப்பிடவில்லை எனினும், சிறுபான்மையினரின் விவகாரத்தில் முதன்முதலாக பகிரங்கமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடிய சூகி, சொந்த நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதியை குறித்து மெளனம் சாதிப்பதை ப்ரஸ் டி.வி உள்ளிட்ட முஸ்லிம் உலகின் முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மியான்மர் உண்மையான ஜனநாயக நாடாக மாற வேண்டுமெனில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை உறுதிச்செய்யும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என சூகி தெரிவித்தார்.
அனைத்து மக்களையும் சமமாகவும், பரஸ்பரம் கண்ணியத்துடன் நடத்தவேண்டும் என்றும் அதற்காக சட்டத்தை இயற்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என சூகி கோரிக்கை விடுத்தார்.
மேற்கு மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொடூர இனப்படுகொலைகள் குறித்து ஆம்னஸ்டி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக