வியாழன், 26 ஜூலை, 2012

கஷ்மீர்:பாதுகாப்பு படையினரின் அராஜகம்! – துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி!

Protests rock Handwara after killing of youth by Army
ஸ்ரீநகர்:கஷ்மீரில் போராளிகளை கைது செய்யப் போகிறோம் என கூறிக்கொண்டு பாதுகாப்பு நடையினர் நடத்திய அடாவடி துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இக்கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கஷ்மீரில் பதட்டம் நீடிக்கிறது.
கஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் ஆஸ்டிங்கோ நார் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போராளிகளை தேடும் பணியில் ராஷ்ட்ரீய ரைபிள் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாம். இதில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஹிலால் அகமது(28) கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். ஆனால் அவர் போராளிகளுடன் தொடர்புடையவரா? என்பதை பாதுகாப்பு படையினர் உறுதிச்செய்யவில்லை.
கொல்லப்பட்ட ஹிலால் அப்பகுதியில் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் புதன்கிழமை அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டால்தான் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை அடக்கம் செய்வோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
இளைஞரின் உடலை மாவட்டத் தலைநகர் பந்திபோரா நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
அதே நேரத்தில் பாதுகாப்புப் படையினர் அந்த இளைஞரை பிடித்துச் சென்று வேண்டுமென்றே கொலை செய்துள்ளனர் என்று பல்வேறு அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தால் கஷ்மீரின் பிற பகுதிகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த கொடூரகொலை கஷ்மீர் பள்ளத்தாக்கில் அரச பயங்கரவாதத்திற்கு முன்னுதாரணமாகும்’ என கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக