ஞாயிறு, 15 ஜூலை, 2012

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கிருப்பதாக கூறுவதை நம்ப முடியவில்லை – சல்மான் பஷீர்!

Pakistan's new envoy to India Salman Bashir
புதுடெல்லி:மும்பை தாக்குதலில் தங்களது நாட்டு அரசு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச் சாட்டை நம்ப முடியவில்லை என்று இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதர் சல்மான் பஷீர் கூறியுள்ளார்.
சி.என்.என்.-ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சல்மான் பஷீர் கூறியது: ‘இந்தியாவுடனான உறவுகளை ஒரு புதிய வழியில் பராமரிப்பது குறித்து பாகிஸ்தான் பரிசீலித்து வருகிறது. இரு நாடுகளும் இதில் இணைந்து செயல்பட வேண்டியுள்ளதால் இந்தியா தன் பங்களிப்பைத் தர வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
எங்கள் நாட்டு ராணுவத் தலைமையகமே தாக்கப்படுகிறது. எங்கள் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அப்படியிருக்கும்போது, மும்பை மீதான தாக்குதலில் எங்கள் நாட்டு அரசு அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுவதை நம்ப முடியவில்லை.
இந்தச் சூழ்நிலையை எங்கள் தேசிய நலன் சார்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இந்தியாவுடன் நல்லுறவு கொள்வது தேசிய நலன் சார்ந்தது என்பதை பாகிஸ்தான் தலைமை, அரசு அமைப்புகள், மக்கள் ஆகியோர் உணர்ந்துள்ளனர். இந்திய-பாகிஸ்தான் உறவுச் சூழ்நிலையில் கடலளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் தயார்.  மும்பை மீதான தாக்குதலைப் பொறுத்த வரை கூட்டாக விசாரணை நடத்த எங்கள் நாடு முன்வந்ததை வலியுறுத்த விரும்புகிறேன். ஆனால் இது குறித்து இந்தியா இதுவரை எதுவும் கூறவில்லை’ என்றார்.
மும்பை தாக்குல்களில் தன் நாட்டு அரசு அமைப்புகளின் தொடர்பு குறித்து விசாரிக்க பாகிஸ்தான் தயாரா? என்று செய்தியாளர் கேட்டதற்கு, தீவிரவாதத்தால் எங்கள் நாடே பாதிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதம் என்பது வைரஸ் கிருமி போன்றது. தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாகக் கூறுவது தவறு. இரு நாட்டு வெளியுறவுத்துறைச் செயலாளர்கள் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது. நல்ல கலந்துரையாடலாக அது அமைந்தது. அபு ஜிண்டாலைப் பற்றிய விவகாரங்களை இந்தியா, பாகிஸ்தானுடன் பகிரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் பதிலளித்தார்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் அரசு அமைப்புகள் ஈடுபட்டது குறித்து தீவிரவாதி டேவிட் ஹெட்லி கூறியதை அபு ஜிண்டாலின் வாக்குமூலம் உறுதி செய்கிறதா? என்று கேட்கப்பட்டதற்கு, ஊடகங்களில் வரும் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இயலாது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும்.

பாகிஸ்தானில் நடந்து வரும் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு கண்துடைப்பு இல்லை. இந்த விஷயத்தில் இஸ்லாமாபாத் தீவிரமாக உள்ளது. இதில் நீதி வெல்வதற்காக பாகிஸ்தான் தொடர்ந்து பாடுபடும் என்று சல்மான் பஷீர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக