வியாழன், 5 ஜூலை, 2012

அரஃபாத்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் – ஃபலஸ்தீன் அரசு!



Palestinians ready to exhume Arafat body for tests
ஜெருசலம்:முன்னாள் ஃபலஸ்தீன் அதிபர் யாஸர் அரஃபாத் விஷம் கொடுத்து கொலைச் செய்யப்பட்டார் என்ற அல்ஜஸீராவின் புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்து அவருடைய உடலை மண்ணறையில் இருந்து வெளியே எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்ய தயார் என்று ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர் நபீல் அபூதர் தெரிவித்துள்ளார்.
2004-ஆம் ஆண்டு மரணமடைந்த யாஸர் அரஃபாத்தின் இறப்பிற்கு காரணம் அதிக அளவிலான பொலோனியம் உடலுக்கு உள்ளே சென்றதுதான் என ஒன்பது மாதம் நீண்ட புலனாய்வுக்கு பிறகு அல்ஜஸீரா 2 தினங்களுக்கு முன்பாக அறிக்கையை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அரஃபாத்தின் மரணம் குறித்து விசாரணை நடத்த அவரது மனைவி சுஹா தவீல் மற்றும் அரஃபாத்தின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இஸ்ரேலின் பரம எதிரியான அரஃபாத்தின் மரணத்தின்போது எழுந்த சந்தேகங்களை உறுதிச் செய்வதாக அல்ஜஸீராவின் புலனாய்வு அறிக்கை அமைந்துள்ளது. மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த அரஃபாத் உபயோகித்த ஆடைகள், டூத் ப்ரஷ் உள்ளிட்ட பொருட்கள் சுவிட்சர்லாந்த்தில் உள்ள இன்ஸ்ட்யூட் ஆஃப் ரேடியோ பிசிக்ஸில் பரிசோதிக்கப்பட்டது. அப்பொழுது மரணத்திற்கு காரணம் அதிக அளவிலான பொலோனியம் உடலுக்கு உள்ளே சென்றதுதான் என கண்டறியப்பட்டது. ஆடையில் இரத்தக் கறை, வியர்வை, உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றிலும் பொலோனியம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக