வெள்ளி, 6 ஜூலை, 2012

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு: மாயாவதிக்கு எதிரான வழக்கு ரத்து!

Finally, Mayawati is out of CBI bag
புதுடெல்லி:வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் உ.பி மாநில முதல்வருமான செல்வி. மாயாவதிக்கு எதிராக சி.பி.ஐ தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்துச்செய்துள்ளது.
தாஜ்மஹால் அருகே சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தித் தரும் பணியை மையமாக வைத்து பண முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மட்டுமே வழக்குப் பதிவு செய்ய சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மாயாவதி மீது நேரடியாக வழக்குத் தொடருமாறு கூறவில்லை. எனவே அவர்மீது எஃப்.ஐ.ஆர்(முதல் தகவல் அறிக்கை) தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2004-ஆம் ஆண்டு தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்துச்செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் 2008-ஆம் ஆண்டு மாயாவதி மனு தாக்கல் செய்திருந்தார். அரசியல் சதி காரணமாகவே இந்த வழக்கு பதிவுச்செய்யப்பட்டுள்ளது என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தனது வருமானவரிக் கணக்கு சரியாக உள்ளது என்று வருமான வரித்துறை தீர்ப்பாயம் கூறியுள்ளதையும், இதனை தில்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உறுதி செய்திருப்பதையும் மாயாவதி தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பாக இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மே 1-ல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் பி.சதாசிவம், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பது: இந்த வழக்கில் சிபிஐ-யின் அணுகுமுறை சரியாக இல்லை.
வருமானத்துக்கு அதிகமாக மாயாவதி சொத்து குவித்தார் என்பதே வழக்கு. 2002-ல் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு தொடர்பாக 2008-ம் ஆண்டில் சிபிஐ தாக்கல் செய்த வழக்கு நிலை அறிக்கையிலும் கூட எந்த வலுவான ஆதாரத்தையும் சுட்டிக்காட்டவில்லை. எனவே சிபிஐ-யின் விசாரணை அடிப்படை ஆதாரமே இல்லாத, எதையுமே நிரூபிக்க முடியாத நிலையில் உள்ளது.
இந்த வழக்கில் மாயாவதிக்கு எதிராக ஒரே ஒரு எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து எஃப்ஐஆர் தாக்கல் செய்யும் அளவுக்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
தாஜ்மஹால் அருகே சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தித் தரும் பணியை மையமாகவைத்து பண முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மட்டுமே வழக்குப் பதிவு செய்ய சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மாயாவதி மீது நேரடியாக வழக்குத் தொடருமாறு கூறவில்லை. எனவே ஆதாரங்கள் இல்லாமல் மாயாவதி மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, 2003-ம் ஆண்டில் ரூ. 1 கோடியாக இருந்த மாயாவதியின் சொத்து, 2007-ல் ரூ.50 கோடியாக அதிகரித்து விட்டது என்றும் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.
மாயாவதி வரவேற்பு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி வரவேற்றுள்ளார். தீர்ப்பு வெளியான பின் லக்னோவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாடு முழுவதும் உள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களுக்கு இந்த சூழ்நிலையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்கள்தான் எனக்கு ஆதரவாக இருந்துள்ளனர். எனக்கு எதிரான அரசியல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. நீதி வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாயாவதி கூறியுள்ளார்.
 0 00shareNew

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக