சனி, 21 ஜூலை, 2012

முஸ்லிம் இளைஞரை பொய்வழக்கில் சிக்கவைத்த போலீஸ்: மக்கள் கொந்தளிப்பு!

 20 Jul 2012
Zubair Khan
புதுடெல்லி:பாகிஸ்தான் உளவாளி என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர் ஒருவரை பொய்வழக்கில் கைது செய்ததை எதிர்த்து மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தைச் சார்ந்த டெல்லி ஷாஹின்பாகில் சொத்துக்கள் விற்பனையில் ஈடுபட்டுவரும் சுபைர் கான் என்ற இளைஞரை போலீஸ் பாகிஸ்தான் உளவாளி என்ற பெயரால் டெல்லியில் கைது செய்தது.
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட ஜாமிஆ நகர் மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வேட்டையின் பெயரால் அரசும், போலீசாரும் பலிகடா ஆக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சிதான் சுபைர்கானின் கைது என குற்றம் சாட்டி களமிறங்கினர்.
நேற்று முன்தினம் ஜாமிஆ நகர் மக்கள் அனைவரும் திரண்டு நோய்டா-பதர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சுபைர்கானை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர் அஜய் சவுதரி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். பின்னர் மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.
“இது ஒரு சம்பவம் மட்டுமல்ல. முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் சிக்கவைத்து தீவிரவாத தொடர்பை நிறுவுவதற்கான போலீஸின் நிரந்தரமான ஏற்பாடாகும்” என அசோசியேசன் ஃபார் ப்ரொடக்‌ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸின் நிர்வாகி ஸய்யித் அஹ்லாக் அஹ்மத் தெரிவித்தார்.
உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்காமலேயே க்ரைம் ப்ராஞ்சும், ஸ்பெஷல் பிரிவும் இளைஞர்களை கைது செய்துள்ளனர். இது சட்டவிரோதம். சட்டத்தின் காவலாளிகள் தாம் சட்டத்தை மீறுகின்றனர் என அஹ்லாக் அஹ்மத் குற்றம் சாட்டுகிறார்.
காளிந்தி குஞ்ச் பார்கில் வைத்து கடந்த 12-ஆம் தேதி க்ரைம் ப்ராஞ்ச் சுபைர் கானை கைது செய்தது. இந்திய ராணுவம் தொடர்பான வரைப்படம் மற்றும் விபரங்களுடன் பாகிஸ்தானுக்கு அளிக்க தயாராகும் பொழுது சுபைர் கானை கைது செய்ததாக போலீஸ் கூறுகிறது. ஆனால், தனது சகோதரனை குறித்து அறியும் எவரும் அவரை தீவிரவாதி என கூறமாட்டார்கள் என சுபைர்கானின் சகோதரர் தய்யிப் கான் கூறுகிறார்.
தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுபைர்கானை கூடுதல் முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் மனீஷ் யதுவான்ஷி 2 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைக்க உத்தரவிட்டார்.
அஃபிஸியல் சீக்ரெட் ஆக்டின் படி சுபைர்கானை போலீஸ் கைது செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக