புதன், 18 ஜூலை, 2012

இலங்கை:கிழக்கு மாகாண தேர்தலில் தனித்துப் போட்டி – முஸ்லிம் காங்கிரஸ் முடிவில் மாற்றம்!

Rauf Hakeem - SLMC Leader
கொழும்பு:இலங்கையில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
துவக்கத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடப் போவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை மாற்றியுள்ளது.
கடந்த வாரம் தனித்துப் போட்டியிடுவதா?, அரசுடன் இணைந்து போட்டியிடுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்வதா? என்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் கட்சியின் மேலிடம் இரண்டு தடவை கூடி அரசுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. எனினும் இதில் இறுதி முடிவு எடுப்பது தொடர்பாக கட்சி மேலிடத்தில் இழுபறி நிலை நீடித்தது. அரசுடன் தேர்தல் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடப்படும் என கூறி வந்த முஸ்லிம் காங்கிரஸ் தற்பொழுது திடீரென தனது முடிவில் மாற்றம் கொண்டுவந்து தனித்து போட்டியிடப் போவதாக நேற்று(புதன்கிழமை) அறிவித்துள்ளது.
அதேவேளையில், தேர்தலுக்கு பின்னர், கிழக்கு மாகாண சபையில் சில நிபந்தனைகளுடன் தமது கட்சி அரசுடன் இணைந்து செயல்படும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக