ஞாயிறு, 8 ஜூலை, 2012

‘குறை சாதனையாளர்’ – மேற்கத்தியர்களுக்கு கசந்துபோன மன்மோகன்சிங்!

PM Manmohan Singh labelled as 'underachiever' in Time magazine
புதுடெல்லி:தாராள மயமாக்கலுக்கும், கட்டுப்பாடற்ற சந்தைக்காகவும் வாதிப்பவர்களின் நேசத்திற்குரியவரான இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சித்துள்ளது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகை.
தாராள மயமாக்கலுக்கு விதை தூவி வளர்த்திய மன்மோகன்சிங் மேற்கத்திய சக்திகளுக்கு இந்தியாவில் மிகவும் விருப்பமான ஆட்சியாளர் ஆவார். ஆனால், அவருடைய அட்டைப் படத்துடன் வெளிவரவிருக்கும்  ‘டைம்’ பத்திரிகையின் ஆசியப் பதிப்பு, மன்மோகன்சிங்கை குறை சாதனையாளர் என விமர்சித்துள்ளது.
‘டைம்’ பத்திரிகையில் “குறை சாதனையாளர்:இந்தியாவுக்கு தேவை முன்னேற்றம் தருபவர்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள சிறப்புக் கட்டுரையில் கூறியிருப்பது:
மன்மோகன் சிங் அரசில் நிலவும் பணவீக்கம், ஊழலால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தெளிவான பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லை; நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.
அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், மன்மோகன் சிங் செல்வாக்கை இழந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது நம்பிக்கைத் ததும்பும் சாந்தமான முகத்தை மன்மோகன் சிங் இழந்துவிட்டார்.
அவர் தனது அமைச்சரவை சகாக்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் திணறுகிறார். தாற்காலிகமாக நிதியமைச்சர் பொறுப்பையும் அவர் கவனித்து வந்தாலும், தான் கொண்டு வர முயற்சிக்கும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்.
வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும் உதவக்கூடிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் முட்டுக்கட்டை போடப்படுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக தனது தொலைநோக்குத் திட்டங்களின் மூலம் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த மன்மோகன் சிங், 1990-களில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டை வேகமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவரது பொறுமை, நேர்மையான நடத்தையால் பலரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். பிரதமராக தனது முதல் பதவி காலத்தில் நாட்டின் வளர்ச்சியை 9.6 சதவீதமாக உயர்த்திக் காட்டினார்.
ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழலால் அவரது அரசுக்கு இப்போது கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே புகார் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்துவதற்காக மானியங்கள், சமூக நலத் திட்டங்களில் அரசு அதிக பணத்தைச் செலவிடுகிறது. அதே நேரம், வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு உகந்த சட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொழிலதிபர்கள் தெரிவிக்கும் யோசனைகளான மானியங்களை குறைத்தல், டீசல் விலை நிர்ணயத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே மேற்கொள்ள அனுமதித்தல், மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் போன்ற வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதியளிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் மன்மோகன் சிங் உள்ளார்.
அவரது அரசின் செயல்பாடுகள் மீதான மக்களின் மதிப்பீட்டை வரும் 2014-ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தனது அதிகாரத்தை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மன்மோகன் சிங் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல் அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன என்று ‘டைம்’ பத்திரிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு புகழாரம் சூட்டிய டைம் தற்பொழுது மேற்கத்திய சக்திகளின் நேசத்திற்குரிய மன்மோகன்சிங்கை குறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக