திங்கள், 24 செப்டம்பர், 2012

இலங்கை கிழக்கு மாகாண சபை: 4 முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்பு!


கொழும்பு:இலங்கை கிழக்கு மாகாண சபையில் 4 முஸ்லிம்கள் அமைச்சர்களாக நேற்று (திங்கள் கிழமை) பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 37 உறுப்பினர்கள் கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸின் உதவியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 22 உறுப்பினர்களை கொண்டுள்ள ஆளும் தரப்பில் 14 பேர் முஸ்லிம்கள் , 6 பேர் சிங்களவர்கள் ,2 பேர் தமிழர்கள் ஆவர்..
இந்நிலையில் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே முன்னிலையில் நேற்று(திங்கள் கிழமை) புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமானம் செய்துகொண்டனர். மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள நஜீப் ஏ மஜீத் நிதி, திட்டமிடல், சட்டம், ஒழுங்கு, மாகாண நிர்வாகம், சுற்றாடல், மீள் குடியேற்றம் மற்றும் உள்ளுராட்சி கிராம வளர்ச்சி ஆகிய துறைகளை கவனிப்பார். இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மன்சூருக்கு சுகாதாரம், உள்நாட்டு மருத்துவம், விளையாட்டு, உணவு விநியோகம், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜைனுல் ஆபிதீன் அஹ்மத் நஸீருக்கு விவசாயம், கால்நடை அபிவிருத்தி, சுற்றாடல், கிராமிய கைத்தொழில் மற்றும் மீன்பிடித்துறை ஆகிய துறைகளும், தேசிய காங்கிரஸைச் சேர்ந்த எம்.எஸ். உதுமான் லெப்பைக்கு வீதி அபிவிருத்தி, நீர்பாசனம் வீடு அமைப்பு, நிர்மாணத்துறை, கிராமிய மின் மற்றும் நீர் வழங்கல் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இலங்கை மத்திய அமைச்சர்களான றவூப் ஹக்கீம், அதாவுல்லா உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக