சனி, 8 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 5


தி ஹிந்து பதிப்பகத்தால் வெளியிடப்படும் இந்தியாவின் தேசியப்பத்திரிகையாக கருதப்படும் frontline பிரண்ட்லைன் பத்திரிகையில் 2001 டிசம்பர் 22 லிருந்து 2002 ஜனவரி 4 வரை வெளிவந்த கட்டுரையிலிருந்து சில தகவல்களை நாம் பார்ப்போம். இந்தியப் பிரிவினைக்கும் பாகிஸ்தான் உருவாக்கத்திற்கும் முக்கிய காரணமாக பழி சுமத்தப் பட்டவர் ஜின்னா. ஆனால் உண்மையிலேயே காங்கிரசும் பழியிலிருந்து தப்ப முடியாது, அதற்கும் பங்கு உண்டு. ஆனால் பெரும்பங்கு இரட்டை வேடம் போட்ட சங்க பரிவார கூட்டத்திற்கும் உண்டு. அதன் ஆஸ்தான தலைவர் வி.டி.சாவர்க்கர் தான் முதல் முதலாக இரண்டு தேசக் கொள்கையை முன் வைத்தார். 1923 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்துத்துவா என்ற கட்டுரையில் அவர் இந்த இரட்டை தேசக் கருத்தான முஸ்லிம் நாடு , ஹிந்து நாடு கருத்தை முன் வைத்து 16 ஆண்டுகளுக்கு பிறகுதான் ஜின்னா இந்தக் கருத்தை முன் வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் ஹிந்துமகா சபையின் தலைவர் லாலா லஜபதி ராயும் இதே கருத்தை 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று வெளிவந்த தி ட்ரிபுன் பத்திரிகையில் குறிப்பிடுகிறார்.
" என்னுடைய திட்டப்படி முஸ்லிம்கள் 4 மாநிலங்களை பெறுவார்கள் . 1 . பதான் மாகாணம் அல்லது வடமேற்கு எல்லை பகுதி 2 . மேற்கு பஞ்சாப் 3 . சிந்து பகுதி 4 . கிழக்கு வங்காளம். இந்தியாவின் வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்களானால் அந்தப் பகுதிகளையும் இதே அடிப்படையில் தனி அரசியல் அமைப்பு உள்ள மாநிலமாக மாற்றலாம். " இந்தக் கருத்து தெளிவாக காட்டுகிறது இந்தியா ஒன்றுபட்டதாக இருக்க வேண்டாம். ஒன்று முஸ்லிம் தேசம் மற்றொன்று முஸ்லிமல்லாதவர் தேசம் உருவாக வேண்டும் என்பதை தான் இந்துமகா சபை தலைவர் விரும்பினார் என்று.
இந்தக் கருத்து வெளியாகி 16 வருடங்களுக்கு பிறகு தான் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை லாஹூரில் 1940 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தாக்கல் செய்தது. அப்படிஎன்றால் பாகிஸ்தான் என்ற தேசத்தின் உருவாக்கத்திற்கான திட்டத்தை வகுத்ததே முஸ்லிம்களோ ஜின்னாவோ அல்ல , இங்கிருந்த இந்துத்வா தலைவர்கள் தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஹிந்துவலதுசாரி சிந்தனை கொண்ட எழுத்தாளர்களான ஆர்.சி. மஜும்தார் மற்றும் ஏ.கே மஜும்தார் ஆகியோர் எழுதிய விடுதலைப் போராட்டம் என்ற நூலில் ( பாரதியவித்யா பவன் ,1969 - பக்கம் 611 ) " மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கத்திற்கான எண்ணம் எங்கிருந்து வந்தது என்றால் அது இந்து மகா சபையை தான் சாரும் . அதுதான் முழுமுதல் காரணியாகும். " என்று குறிப்பிடுகிறார். தேசப்பிரிவினை பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த தொடரில் காண்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக