வெள்ளி, 14 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 8


ஒன்றுபட்ட இந்திய சுதந்திரம் ஒரு மீள்பார்வை : இந்தியா என்ற அகண்ட நிலபரப்பை 800 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள். அவர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மையை பயன்படுத்தி வணிகம் செய்வதற்காக வந்து பின்னர் நாட்டையே தங்கள் கைவசம் கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால் தான் ஆண்ட பரம்பரை அடிமையாய் வாழ விரும்பாமல் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்து போராடினார்கள். இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என வர்ணிக்கப் படும் சிப்பாய் கலகம் முஸ்லிம் சிப்பாய்களால் தான் துவக்கப் பட்டது. அது மட்டுமல்லாமல் திப்புசுல்தான் போன்ற முஸ்லிம் அரசர்களும் தங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்காமல் அடங்கி பிழைத்து கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமல் போராடி தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள். கேரளாவில் மாப்பிள்ளைமார் என்று அழைக்கப்படும் முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் சுதந்திரத்திற்காக கடுமையான முறையில் போராடினார்கள். ஆனால் வரலாற்றின் பக்கங்களில் அவர்களுக்கான இடம் மதத்திற்காக போராடினார்கள் என்று சொற்பமாகவே இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவது தங்கள் மார்க்க கடமை போல் முஸ்லிம்கள் நினைத்தார்கள்.
முஸ்லிம்களின் போராட்டம் தான் மற்ற சமுதாய மக்களை சுதந்திர போராட்டத்தின் பால் தள்ளியது. இந்த போராட்டம் அங்கொன்றும், இங்கொன்றுமாக துவங்கியது நாளடைவில் நாடு முழுவதும் பற்றி எரியும் தேசிய போராட்டமாக மாறியது. இந்த தேசிய போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் முகமாகத் தான் 1885 ல் ஆலன் ஆக்டோவியன் ஹயும் என்ற வெள்ளையரால் காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது. பின்னர் அதை காந்தியடிகளும், அதன் பின்னர் ஜவஹர் லால் நேருவும் தலைமை தாங்கி நடத்தினார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இணைந்து அதில் அங்கம் வகித்தார்கள். அதனால் தான் ஜின்னாவும் காங்கிரசில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் உத்வேகமாக அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டார். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்துக்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் உள்ள மத வேறுபாடுகளை, கலாசார வேறுபாடுகளை நன்கு கணித்து சுதந்திரப் போராட்டத்தின் வீரியத்தை குறைக்க திட்டம் தீட்டினார்கள். அவர்களுடைய மூளையில் உதயமானது தான் பிரித்தாளும் சூழ்ச்சி. முஸ்லிம்களுக்கும் , இந்துக்களுக்கும் இடையே உள்ள மத வேறுபாடுகளை பயன்படுத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டார்கள். அதற்கு இங்குள்ள சங் பரிவார சிந்தனை கொண்டவர்களும், முஸ்லிம்களில் சிலர்களும் பலியாயினர். விளைவு முஸ்லிம்கள், இந்துக்களிடையே ஆங்காங்கே கலவரம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள்ளே கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டது. முஸ்லிம்கள் தங்களுக்கு காங்கிரசில் உரிய இடம் இல்லை என்று நினைக்க ஆரம்பித்தார்கள். இந்த பிரிவினை கருத்துகள் பரப்பப் படும் போதெல்லாம் ஜின்னா இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு பாலமாக விளங்கினார். இதனாலேயே அவரை ஒற்றுமையின் தூதுவன் என்று சரோஜினி நாய்டு குறிப்பிட்டார்கள். அப்படி பட்ட ஜின்னாவே இறுதியில் பிரிவினை மாயவலையில் வீழ்ந்தார்கள். காங்கிரஸ் தங்களை புறக்கணிப்பதாக எண்ணி பெரும்பாலான முஸ்லிம்கள் அதிலிருந்து விலகி புதிதாக முஸ்லிம் லீக் என்ற புதிய அமைப்பு உருவானது. தேசப்பிரிவினை பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த தொடரில் காண்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக