திங்கள், 10 செப்டம்பர், 2012

மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றுங்கள் – மார்க்கண்டேய கட்ஜு அறிவுரை!


11 Sep 2012 சென்னை:எந்தவொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் குறிப்பிட்ட சில அமைப்புக்கள் அச்சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக ஊடகங்கள் செய்தியை வெளியிடுகின்றன. இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகள் போன்று சித்திரிக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறையின் சார்பில் “தனியார் தொலைக்காட்சிகளின் சுயக் கட்டுப்பாடு” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் தனது உரையில் கூறியது: “இந்தியாவில் வறட்சி, வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுபோன்ற முக்கியப் பிரச்னைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்காமல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. கிரிக்கெட், சினிமா, பேஷன் ஷோ போன்ற பொழுதுபோக்கு செய்திகள்தான் 90 சதவீதம் ஒளிபரப்பப்படுகின்றன. விவசாயிகள் தற்கொலை, ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை போன்ற செய்திகள் வெறும் 10 சதவீதம்தான் இடம்பிடிக்கின்றன. டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக ஜோதிடம், அரைகுறை ஆடையுடன் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பேய்க் கதைகள், தொடர் கதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகள் தாங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதாகக் கூறிக்கொள்கின்றன. சுயக்கட்டுப்பாடு என்பது கட்டுப்பாடே அல்ல; எந்தவொரு சுதந்திரமும் வரையறைக்கு உள்பட்டதுதான். எனவே, காட்சி ஊடகங்களையும் பத்திரிகைக் கவுன்சிலின் கீழ் கொண்டுவர வேண்டும். அதன்பிறகு, இதன் பெயரை வேண்டுமானால் ஊடக கவுன்சில் என்று மாற்றிக்கொள்ளலாம். அதில் காட்சி ஊடகங்களுக்கும் பிரதிநிதித்துவத்தை வழங்கலாம். ஆனால், ஊடகங்கள் தவறு செய்தால் அவற்றைத் தண்டிக்கும் அதிகாரமும் இந்த கவுன்சிலுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்காக, பத்திரிகைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினேன். ஆனால், ஊடக நிறுவனங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருப்பதால் இதுவரை ஒன்றும் நடைபெறவில்லை. எந்தவொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்திய முஜாஹிதீன் அமைப்போ, ஜெய்ஷ் -இ-முஹம்மது போன்ற அமைப்புகளோ இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இ-மெயில் வந்துள்ளதாகவும், எஸ்.எம்.எஸ். வந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இது, இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகள் போன்று சித்திரிப்பது ஆகும். இந்த நிலையை மாற்ற வேண்டும், நாட்டில் மதச்சார்பற்ற நிலையைப் பாதுகாக்கவும், மத நல்லிணக்கத்தைப் பேணவும் ஊடகங்கள் செயலாற்ற வேண்டும். சமூகக் கொடுமைகளான ஜாதிப் பிரச்னைகள், மூட நம்பிக்கைகள், ஏழ்மை போன்றவற்றுக்கு எதிராக ஊடகங்கள் போராட வேண்டும். மக்களிடம் அறிவியல் பூர்வமாக சிந்திக்கத் தூண்ட வேண்டும்; மக்களின் மூட நம்பிக்கைகளைக் காட்டி அவர்களை ஏமாற்றக் கூடாது. பீகாரில் பத்திரிகை சுதந்திரம் கிடையாது. அங்கு நிரூபர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதில்லை; ஆனால், மாநில அரசுக்கு எதிராக எழுதும் நிரூபர்கள் டிஸ்மிஸ் செய்யப்படவும், இடமாற்றம் செய்யப்படவும் பத்திரிகை நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படுகின்றன. இதுதொடர்பாக, ஒரு உண்மையறியும் குழுவை நியமித்துள்ளேன். இந்த மாத இறுதிக்குள் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும். கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதியை கைது செய்துள்ளது மிகப்பெரிய தவறு. ஜனநாயகத்தில் கார்ட்டூன் மூலம் கருத்துகளை விமர்சிக்கவோ, முன்வைக்கவோ செய்யலாம். இதற்காக கார்ட்டூனிஸ்டை கைது செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் அவரைக் கைது செய்த போலீஸார் மீதே வழக்குத் தொடரலாம்.” இவ்வாறு கட்ஜு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக