வியாழன், 6 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 2


ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு நாடுகளுக்கும் எல்லைகள் வரையறுக்கப் பட்டு , நாடுகளுக்கிடையே பரஸ்பரம் ஒப்பந்தங்கள் போடப்பட்டு அது நடைமுறை படுத்தப்பட்ட பிறகுதான் உலகிலே நாடு பிடிக்கும் சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. அதற்கு முன்பு உலகின் பெரும்பாலான நாடுகள் பல்வேறு குறுநில மன்னர்களாலோ அல்லது பேரரசர்களாலோ ஆட்சி செய்யப் பட்டுவந்தது. அதற்கு இந்திய தேசமும் விதிவிலக்கல்ல. அனால் மற்ற நாடுகளுக்கு இல்லாத ஒரு சிரமமான சூழல் இந்தியாவுக்கு உண்டு. அது என்னவென்றால் இந்தியாவில் நிலவிய மொழி வேறுபாடு, நிற வேறுபாடு, இன, சாதி வேறுபாடு, தட்ப வெப்பநிலை வேறுபாடு, அதனால் தோற்றங்கள் வேறுபாடு இப்படி இந்தியர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட அம்சத்தை சொல்ல முடியாத அளவுக்கு வித்தியாசங்கள் நிரம்பியிருந்ததால் இது அவர்களுடைய வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. அதனால் இந்தியா என்ற பரந்த நில பரப்பை நூற்றுக்கணக்கான துண்டுகளாக பிரித்து குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். தென்னிந்தியாவையே சேர , சோழ , பாண்டிய மன்னர்கள், திருவாங்கூர் மகராசா, புதுகோட்டை சமஸ்தானம், இப்படி எண்ணற்ற மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அது போக பல்லவர்கள், மௌரியர்கள், வர்த்தனர்கள் என்று வடக்கேயும் பல பேரரசர்கள் ஆண்டு வந்தார்கள். இங்கே குறிப்பிடப்படும் அரசர்கள் அனைவரின் பெயர்களும் பிரபலமானவர்கள் என்பதால் அவர்களின் பெயர்களை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம். மற்ற படி இந்தியாவை ஆண்ட பெயர் தெரியாத மன்னர்கள் ஏராளம். இந்த செய்தியை ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால் இன்று சிலர் குறிப்பிடுகிறார்களே அகண்ட பாரதம் என்று அப்படி ஒன்றே முகலாயர் ( முஸ்லிம் பெயர் தாங்கி அரசர்கள் ) வருவதற்கு முன்னால் கிடையாது என்பதை நியாபகப் படுத்தவே இங்கு மன்னர்களை பற்றி குறிப்பிடவேண்டிய கட்டாயம் வந்தது. இப்படி துண்டு துண்டாக சிதறி கிடந்த இந்தியாவைத்தான் முகலாய மன்னர்கள் ஒன்று திரட்டி அகண்ட இந்தியாவாக மாற்றினார்கள். அது இஸ்லாமிய கலீபாக்கள் உமர், உதுமான் , அலி காட்டி தந்த வழிமுறை. அவர்கள் தான் பெரிய நிலப்பரப்புகளை எப்படி ஆளுநர்களை நியமித்து அவர்களுக்கு கீழே பிரதிநிதிகளை நியமித்து எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று உலகத்துக்கே கற்று கொடுத்தார்கள். அதனால்தான் இன்றைக்கு கூட இந்தியாவில் நிர்வாகம் சம்பந்தமாக பேச்சு வழக்கில் இருக்க கூடிய பெரும்பாலான சொற்கள் அரபியில் உள்ளன. எனவே சிதறி கிடந்த இந்தியாவை ஒன்று திரட்டியவர்கள் தான் முஸ்லிம்களே ஒழிய பிரிக்க முயற்சித்தவர்கள் அல்ல. அதனால் தான் இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்தார்கள். இதனை இலஸ்டிரடேத் வீக்லி பத்திரிக்கை ஆசிரியர் குஸ்வந்த் சிங் தன்னுடைய கட்டுரையில் " முஸ்லிம்கள் தங்கள் சதவிகிதத்திற்கு அதிகமாக தங்கள் உயிரை சுதந்திர போராட்டத்தில் இழந்தார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த சமுதாயம் இன்று குற்றப்பரம்பரையாக சித்தரிக்கப் படுகிறது. இதற்கு பாகிஸ்தான் என்ற தனி தேசம் உருவானது தான் காரணம். இந்த பாகிஸ்தான் என்ற தேசம் உருவாக யார் காரணம் ? இந்தியாவை துண்டாட வேண்டிய ஆசை தான் இதற்க்கு காரணமா ? இந்தியப் பிரிவினையை இந்திய முஸ்லிம்கள் அன்று ஆதரித்தார்களா ? இன்றும் ஆதரிக்கிறார்களா ? என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக