சனி, 8 செப்டம்பர், 2012

இந்தியா-பாகிஸ்தான்:விசாவுக்கு இனி கட்டுப்பாடுகள் தளர்வு!


9 Sep 2012 இஸ்லாமாபாத்:விசாச் சட்டங்களில் தாராளமயப் போக்கை கடைப்பிடிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும்-பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் 38 ஆண்டுகள் நீடித்த கட்டுப்பாடுகளுடன் கூடிய விசா ஒப்பந்தம் ரத்தானது. இந்த புதிய ஒப்பந்தம் இரு நாடுகளின் மக்களிடையே நல்லுறவை அதிகரிக்கவும், வர்த்தகத்தை பலப்படுத்தவும் உதவும். இந்த ஒப்பந்தத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 38 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விசா விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக இருந்தன. இந்த விதிமுறைகளில் தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இப்போது புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிம், “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார். விசா விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் ஊடகங்கள் பாராட்டு தெரிவித்தன. இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக எஸ்.எம். கிருஷ்ணாவின் வருகை அமைந்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் நேற்று(சனிக்கிழமை) செய்தி வெளியிட்டிருந்தன. விசா சலுகைகள் குறித்த விபரம் பின்வருமாறு: புதிய ஒப்பந்தத்தின் கீழ், விண்ணப்பம் அளித்து 45 நாள்களுக்குள் விசா வழங்கப்படும். 10 முதல் 50 பேர் வரை குழுவாக 30 நாள்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக ஒரு முறை விசா பெற்றால் 3 நகரங்களைப் பார்ப்பதற்கு மட்டுமே அனுமதியிருந்தது; இப்போது அது 5 நகரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்டோரும், 12 வயதுக்கு உள்பட்டோரும், பிரபலமான தொழிலதிபர்களும் விசாவுக்கு விண்ணப்பிக்க, காவல்துறை நற்சான்று பெறத் தேவையில்லை. நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கச் செல்வோருக்கு 6 மாத விசா வழங்கப்படும். ஆனால், ஒருமுறை வரும்போது, மூன்று மாதங்களுக்கு மேல் தங்கக் கூடாது. வியாபார விஷயமாக செல்வோருக்கு ஓராண்டுக்கு செல்லுபடியாகக் கூடிய விசா வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்டோர், சம்பந்தப்பட்ட நாட்டுக்குச் சென்ற பின் விசா பெற முடியும். அதேபோல, புனிதப் பயணம் செல்வோருக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக