திங்கள், 10 செப்டம்பர், 2012

எஸ்.எம்.கிருஷ்ணாவின் சுற்றுப்பயணம்: பாக். பத்திரிகைகள் புகழாரம்!


10 Sep 2012 இஸ்லாமாபாத்:விசா சட்டங்களில் கட்டுப்பாடுகளை நீக்கும் தாராளமய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான் அரசுகளின் நடவடிக்கையை பாகிஸ்தான் பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.
இரு நாடுகள் இடையேயானஉறவின் திருப்புமுனை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது உள்பட பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் ராஜதந்திர முயற்சிகளுக்கு பாக். பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன. பெரும்பாலான பாக். பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பாக்.உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ஆகியோரின் படத்துடன் முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தானின் முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் இருநாடுகள் இடையே நிலவும் மோசமான உறவுக்கு தீர்வு காண எஸ்.எம்.கிருஷ்ணாவின் சுற்றுப்பயணம் உதவும் என கூறியுள்ளன. அதேவேளையில் உண்மையான பிரச்சனையில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தப்பிக்கும் ஒப்பந்தம் என்று பிரபல பத்திரிகையான டான் கூறுகிறது. கடந்த ஆண்டு துவங்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு எஸ்.எம்.கிருஷ்ணாவின் சுற்றுப்பயணத்தில் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று டான் குற்றம் சாட்டுகிறது. இரு நாட்கள் சுற்றுப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா, வரலாற்றுச் சின்னமான லாகூரில் உள்ள மினாராவுக்கு சென்றார். அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் பாகிஸ்தான் மக்களுக்கு அமைதியும், வளர்ச்சியும் ஏற்பட வாழ்த்துவதாக எஸ்.எம்.கிருஷ்ணா எழுதினார். பாகிஸ்தானுடன் மிகச்சிறந்த உறவைப் பேண இந்தியா உறுதிப் பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக