செவ்வாய், 4 செப்டம்பர், 2012

பஹ்ரைன்:சமூக ஆர்வலர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை சிவிலியன் நீதிமன்றம் உறுதிச்செய்தது!


மனாமா:பஹ்ரைன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டதாக குற்றம் சாட்டி தொடர்பப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுவை சிவிலியன் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் 20 சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்களுக்கு விதிக்கபட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதிச் செய்தது.
கடந்த ஆண்டு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை அடக்கி ஒடுக்கிய பிறகு குற்றம் சாட்டப்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு ஆயுள்தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை வழங்கி சிறப்பு ராணுவ தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. பிரபல சமூக ஆர்வலர் அப்துல் ஹாதிஅல் குவாஜா, ஷியா தலைவர்களான ஹஸன் முஸைமா ஆகியோரும் தண்டனை வழங்கப்பட்டவர்களில் அடங்குவர். ஏழு பேரின் விசாரணை அவர்கள் முன்னிலையில் நடத்தப்படவில்லை. மன்னர் ஹமதுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர்களை விடுவிக்கவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள சூழலில் சிவிலியன் நீதிமன்றம் ராணுவ தீர்ப்பாயம் அளித்த தண்டனையை உறுதிச் செய்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தம் கோரியும், பெரும்பான்மை ஷியாக்களுக்கு எதிரான பாரபட்சத்தை அரசு நிறுத்தக் கோரியும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பஹ்ரைனில் போராட்டம் துவங்கியது. இதில் போலீஸ் காரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் மேல்முறையீட்டை பரிசீலித்த உயர் நீதிமன்றம், ராணுவ தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ரத்துச் செய்து சிவிலியன் நீதிமன்றம் மறு விசாரணை நடத்த உத்தரவிட்டது. சிவிலியன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுச் செய்வோம் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக