ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

திருக்குர்ஆன் பிரதி எரிப்பு சம்பவம்: பாக். இமாம் கைது! ரிம்ஷாவின் வழக்கில் திருப்புமுனை!


3 Sep 2012 இஸ்லாமாபாத்:புனித திருக்குர்ஆனின் பிரதிகளை எரித்ததாக குற்றம் சாட்டி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த சிறுமி ரிம்ஷா மாஸியின் வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. புனித திருக்குர்ஆன் பிரதிகளை எரித்தார் என குற்றம் சாட்டி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரிம்ஷா கைது செய்யப்பட்டார். பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த வழக்கில் சிறுமி ரிம்ஷாவை பாகிஸ்தான் மெஹ்ராபாத் மஸ்ஜிதில் இமாமாக(தொழுகைக்கு தலைமை ஏற்பவர்) பணியாற்றும் ஹாஃபிஸ் முஹம்மது காலித் ஜதூன் என்பவர் வேண்டுமென்றே வழக்கில் சிக்கவைத்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஹாஃபிஸ் முஹம்மது காலித் ஜதூன் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட காலித் ஜதூன் இரண்டுவார நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். புனித திருக்குர்ஆனின் எரிந்த பக்கங்களை இமாம் கூறியபடி, ஹமத் என்பவர் ரிம்ஷாவின் பையில் வைத்தார் என்று நேரில் பார்த்தவர்கள் கூறியதாக எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மஸ்ஜிதில் தொழச் செல்லும் முஸ்லிம்கள், இமாமின் இச்செயல்கள் குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். ‘எரிந்த திருக்குர்ஆன் பிரதியின் பக்கங்களை இமாம், ஹமதிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் ஹமத், ரிம்ஷாவின் பையில் கொஞ்சம் சாம்பலையும் கலந்து வைத்தார். நாங்கள் அதனை தடுக்க முயன்றபோது அவர் கேட்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிரான உணர்வை தூண்டவே இமாம் இவ்வாறு செய்துள்ளார்” என்று நேரில் பார்த்த முஸ்லிம்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனிடையே, ரிம்ஷாவின் வழக்கில் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரை மாற்ற அனுமதிக்க கோரி சிறுமி ரிம்ஷாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து நீதிபதி முஹம்மது அஸம் கான் விசாரணையை ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக