சனி, 1 செப்டம்பர், 2012

பெங்களூரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள்: உறவினர்கள்!

1 Sep 2012 பெங்களூர்:அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட சமூகத்தில் பிரமுகர்களை கொலைச்செய்ய திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சாட்டி நேற்று முன்தினம் பெங்களூரில் கைது செய்யப்பட்ட டி.ஆர்.டி.ஒ பொறியாளர் உள்பட அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் நிரபராதிகள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். போலீஸ் எவ்வித தகவலும் அளிக்காமல் அவர்களை பிடித்துச் சென்றதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தனது மகன் நிரபராதி என்று கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரான டி.ஆர்.டி.ஒ பொறியாளர் இஜாஸ் முஹம்மது மிர்ஸாவின் தந்தை எ.எம்.மிர்ஸா கூறினார். 3 தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தனது மகனை அழைத்துச் சென்றதாக அவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். “கைது செய்யப்பட்ட செய்தி வெளியான பொழுதுதான் போலீஸ், தனது மகனை பிடித்துச் சென்றது தெரியவந்தது. மகன் நிரபராதி ஆவார். காணாமல் போகும் வரை அவன் என்னுடன் இருந்தான்” என்று மிர்ஸா செய்தியாளர்களிடம் கூறினார். ”ஏதேனும் தீவிரவாத தொடர்பு இருந்திருந்தால், பாதுகாப்புத்துறையுடன் தொடர்புடைய டி.ஆர்.டி.ஒ போன்றதொரு நிறுவனத்தில் அவனுக்கு எவ்வாறு வேலை கிடைத்திருக்க முடியும்? அவனை சிக்க வைத்துள்ளார்கள். குழந்தைப் பருவம் முதலே எங்கள் கண் முன்னால் வளர்ந்தவன். ஒருபோதும் இது போன்றதொரு விஷயங்களைக் குறித்து அவன் பேசி நான் கேட்டதில்லை. அலுவலகத்திற்கு செல்வதும், வீட்டிற்கு திரும்பி வருவதையும் தவிர அவன் வேறு எந்த தொடர்பும் இருந்ததில்லை. போலீசாருக்கு தங்களது திறமையை நிரூபிக்க எவரையாவது கைது செய்யவேண்டும்.”என்று மிர்ஸா மேலும் கூறினார். ”இஜாஸ் முஹம்மது மிர்ஸா மிகவும் நல்ல குணமுடைய இளைஞன். அவனுக்கு தீவிரவாத தொடர்பு இருப்பது குறித்து நம்பமுடியவில்லை” என்று நண்பர்களும், அண்டை-அயலாரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவரான டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையாளர் முதீஉர்ரஹ்மான் சித்தீகி, மாஸ் கம்யூனிகேஸன் படிப்பில் முதுநிலை பட்டதாரி ஆவார். ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமைப் பெற்றவர் இவர். ஐந்து சகோதரர்களில் ஒருவரான சித்தீகி, அவர்களில் மிகவும் மிருதுவான குணமுடையவர் என்று மூத்த சகோதரர் அதாவுர் ரஹ்மான் சித்தீகி கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், ”எனது சகோதரனின் பத்திரிகை பணி அவனது இரத்தத்தில் கலந்தது. செவ்வாய்க்கிழமை இரவு நாங்கள் அவனுடன் தொலைபேசியில் பேசியிருந்தோம். பந்திவாட் பேஸில் உள்ள எங்களுடைய சிறிய வீட்டை புதுப்பிப்பது தொடர்பாக அந்த பேச்சு அமைந்தது. தனக்கு விடுமுறை கிடைக்காது என்றும், வெள்ளிக்கிழமை ஹூப்ளிக்கு வருகிறேன், என்றும் அவன் தெரிவித்தான். ஆனால், புதன்கிழமை மாலையில் இருந்து அவனை நான் தொடர்ந்து தொடர்புகொண்ட போதிலும் இயலவில்லை. ஊடகங்கள் கூறுவது போன்ற பணிகளை அவன் செய்தான் என நம்பமுடியவில்லை. இதில் ஏதோ சந்தேகம் நிலவுகிறது. இந்த சதியில் சிக்கிய அவனை காப்பாற்ற ஊடகங்களின் உதவியை தேடுவோம்.” என்று அதாவுற்றஹ்மான் தெரிவித்தார். எம்.டி காலனியில் உள்ள வீட்டில் இருந்து மெஹ்பூப் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தை காப்பாற்ற கம்பி வளைக்கும் வேலையில் தனது மகன் ஈடுபட்டதாக அவரது தந்தை ஸைபுத்தீன் பாகல்கோட் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். புதன்கிழமை தாயும், தந்தையும் வீட்டில் இல்லாத வேளையில் மெஹ்பூபை போலீஸ் பிடித்துச் சென்றுள்ளது. பயப்பட வேண்டாம். விசாரணை நடத்திவிட்டு விட்டுவிடுவோம் என்று கூறி போலீஸ் மெஹ்பூபை அழைத்துச் சென்றதாக அவரது சகோதரி ஸாஹிதா பேகம் தெரிவிக்கிறார். ஃபாரஸ்ட் அஸிஸ்டண்ட் கன்ஸர்வேட்டரான எஸ்.ஆர்.எஸ் ஷோலாபூருக்கு பெங்களூரில் மருத்துவம் பயிலும் மகன் ஸஃபர் கைது செய்யப்பட்டது குறித்து இப்பொழுதும் நம்பமுடியவில்லை. ஹூப்ளியில் நியூபதாமா நகரில் முதல்வர் ஜெகதீஷ் டைட்லரின் வீட்டில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஷோலாப்பூரி வீடு அமைந்துள்ளது. ஹுப்ளியைச் சார்ந்த எம்.பி.ஏ பயிலும் ஸர்ஃப்ராஜ் கைது செய்யப்பட்டது குறித்து அவரது சகோதரர் வாஹிது ஹுஸைனுக்கு போலீசாரிடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், தனது சகோதரன் தவறாக எதுவும் செய்யமாட்டான் என்று வாஹிது ஹுஸைன் நம்புகிறார். தர்வாடில் என்.டி.டி.எஃப் படிப்பை பயிலும் இம்ரான் என்ற உபைதுல்லாஹ் பஹாதூரி கைது செய்யப்பட்டது ஏன்? என்று அவரது தந்தை ஸஃபர் பஹாதூரிக்கு புரியவில்லை. இம்ரான் இரண்டு ஆண்டுகள் வளைகுடாவில் பணியாற்றிய பிறகு ஆறு மாதம் முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். கட்டுமானத்துறையில் பணியாற்றும் ஸாதிக் லஷ்கர் உறுப்பினர் என கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில், இக்கைது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், பெங்களூர் போலீசார் தாம் இவ்வழக்கை கையாளுவதாகவும் ஹூப்ளி போலீஸ் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக