புதன், 5 செப்டம்பர், 2012

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா:மத்திய அரசு பெரும் கவலை


புதுடில்லி:""பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், சீனா, தன் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது,'' என்று, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறினார். ராஜ்யசபாவில் நேற்று அவர் கூறியதாவது:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணியில், சீனா ஈடுபட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அதனால், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீனா, தன் நடவடிக்கைகளை, நிறுத்திக் கொள்ள வேண்டும் என, இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.இந்தியா - சீனா இடையேயான, சர்வதேச எல்லைக் கோடு விவகாரத்தில், சீனா தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இரு நாடுகள் இடையே, பொதுவான எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இரு தரப்பிலும், எல்லைக் கோடு தொடர்பான அவரவர் கருத்துப்படி, ராணுவ ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தியப் பகுதியில் அத்துமீறும் செயல்களில், சீனா ஈடுபடுவதில்லை. ஜம்மு காஷ்மீர் பகுதியில், 38 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு நிலத்தை, 1962ம் ஆண்டு முதல், சீனா ஆக்கிரமித்து உள்ளது.இந்தியா - சீனா இடையே, 1963ல் ஏற்பட்ட எல்லை ஒப்பந்தப்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள, இந்தியாவுக்கு சொந்தமான, 5,180 சதுர கி.மீ., பரப்பளவு நிலத்தை, சீனாவுக்கு, பாக்., தந்துள்ளது.அருணாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 90 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு நிலத்தை, தனக்குரியது என, சீனா கூறி வருகிறது. இந்தியா - சீனா இடையில், எல்லை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, இரு நாடுகளும் விசேஷ பிரதிநிதிகளை நியமித்து இருக்கின்றன.இவ்வாறு அந்தோணி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக