செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அமெரிக்காவின் ஊடக அரசியலும் அப்பாவி முஸ்லீம்களும்


தற்போது உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சமூகம் இணையதளத்தில் வெளியான ஒரு திரைப்படத்திற்கு எதிராகக் கொதித்தெழுந்திருக்கிறது. இஸ்லாமியர்கள் போற்றும் முகமது நபிகளை இத்திரைப்படம் இழிவாகச் சித்தரித்திருப்பதற்கு எதிராகத்தான் இப்போராட்டம். அத்திரைப்படத்தின் பெயர் Innocence of Muslims (அப்பாவி முஸ்லீம்கள்). இத்திரைப்படம் பற்றிய விமர்சனத்தை எழுதிவிட்டு, இப்போராட்டத்தில் வெளிப்படும் ஆவேசத்தை சுட்டிக்காட்டுவதுடன் நின்றுவிடுகின்றன சில ஊடகங்கள். இதை வெறும் கிறித்துவம் - இஸ்லாம் என்ற சமயங்கள் சார்ந்த மோதலுக்கான பிரச்சனையாகக் காட்ட முயல்கின்றன சில ஊடகங்கள். இன்னும் சில பார்ப்பனிய ஊடகங்கள் போராட்டத்தின் தன்மையை முன்வைத்து இஸ்லாமியர்களின் ‘சகிப்புத் தன்மை’யைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. இத்தகையச் சூழலில் இப்பிரச்சனைக்குப் பின்புலமாக உள்ள அமெரிக்க அரசியலைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். தற்போது பரபரப்பிற்கு உள்ளாகியிருக்கும் இத்திரைப்படம் YouTube இணையத்தில் வெளியானது. இது வெறும் 13 நிமிட முன்னோட்டத் (Trailer) திரைப்படம் மட்டுமே. இந்த 13 நிமிடத் திரைப்படம் மூட்டிய நெருப்புதான் இப்போது உலக அளவில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதன் மூலத் திரைப்படம் இரண்டு மணிநேரங்களுக்கு உரியது. இந்த முழுத் திரைப்படமும் ஒரே ஒரு நாள் மட்டும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டின் ஒரு வாடகைத் திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு முறை மட்டுமே திரையிடப்பட்ட இப்படத்தைப் பார்த்தவர்கள் பத்துப்பேருக்கும் குறைவானவர்களே! மேலும், அப்போது விளம்பரத்திற்காக இத்திரைப்படத்திற்குத் தரப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா? Innocent Bin Laden (அப்பாவி பின்லேடன்). அப்படியானால், இதுதான் இத்திரைப்படத்தின் உண்மையான பெயரா என்றால், அதுவும் இல்லை. உண்மையில், இத்திரைப்படத்திற்கு தொடக்கத்தில் சூட்டப்பட்ட பெயர் Desert Warrior (பாலைவனப் போராளி). தற்போது பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் இந்த 13 நிமிட வீடியோ திரைப்படத்திற்கு முன்பாகவே, கடந்த சூலை 1ஆம் நாள் இதற்கான விளம்பரத் துண்டுப்படங்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த விளம்பரத்தில் இப்படத்திற்கான பெயர் என்ன தெரியுமா? முகமதுவின் உண்மையான வாழ்க்கை (The Real Life of Muhammad). படத்தின் தலைப்பிலேயே இத்தனைக் குளறுபடிகளா, எதுதான் உண்மையான தலைப்பு என்று யோசிக்கிறார்களா? சரிதான். பாலைவனப் போராளி - அப்பாவி பின்லேடன் - அப்பாவி முஸ்லீம்கள் - முகமதுவின் உண்மையான வாழ்க்கை - என்று தலைப்பு மட்டுமே பல அவதாரங்கள் எடுத்திருக்கிறன. தலையைச் சுற்றவைக்கும் தலைப்பு அரசியல் இது! ஆம், ஒரு நயவஞ்சகத்தின் ஆரம்பம் இது. மூலப் படமான ‘பாலைவனப் போராளி’யில் கதை என்ன தெரியுமா? விண்வெளிக் கோள் ஒன்று பூமிக்கு இறங்கி வருகிறது. இதற்கு எதிராக பாலைவனத்து ஆதிவாசி மக்கள் போராடுகிறார்கள். ஆக, அறிவியல் கற்பனையின் அடிப்படையில் அமைந்த ஒரு படம் இது எனலாம். சரி, இதில் முகமது நபிகள் எப்படி வந்தார்? இதுதான் கதை அரசியல்! இந்த மூலப் படத்தில் மதத்தைப் பற்றியோ, குறிப்பாக, இஸ்லாத்திற்கு எதிரான குறிப்போ, முகமது நபிகளுக்கு எதிரான வசனங்களோ எதுவும் இல்லையாம். அப்படி எதுவும் இருப்பதாக அதில் நடித்த நடிகர்களே அறியவில்லை. படத்தின் இயக்குநர் ஆலன் ராபர்ட்ஸ் இதற்கு முன்பு மென்மையான ஆபாசப் படங்கள் தயாரித்தவராம். இப்படிப்பட்ட ‘தகுதிமிக்க’ இவருக்கே இந்த வசனங்கள் எப்படிச் சேர்க்கப்பட்டன என்பது தெரியாதாம். பின் எப்படி நிகழ்ந்தது? படத்தின் கதையைவிட படம் எடுக்கப்பட்ட கதை மிகவும் திகிலாக இருக்கிறது. இஸ்லாத்துக்கு எதிரான சிந்தனைகளும் முகமது நபிகளை இழிவுபடுத்தும் வசனங்களும் திரைப்படத்திற்கான பிந்தைய தயாரிப்புப் பணிகளில் (Post production) ‘டப்பிங்’ முறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதாவது, நடிகர் ஒரு வசனத்திற்கு வாயசைத்துக் காட்சியைப் பதிவு செய்ய, டப்பிங் கலைஞர் வேறெரு வசனத்தைப் பேசிப் பதிவு செய்திருக்கிறார். மிகப் பெரிய சதித்திட்டம் முறைப்படி அரங்கேறியிருக்கிறது. ஆக, அறிவியல் கற்பனைக் கதையில் மத அரசியல்! கொஞ்சம் அசந்தால், பாட்டி வடை சுட்ட கதையில்கூட மத அரசியலைத் திணித்துவிடுவார்கள் போலிருக்கிறது! இவ்வாறு டப்பிங் முறையில் தயாரிக்கப்பட்ட 13 நிமிட முன்னோட்டத் திரைப்படத்தில்தான் இஸ்லாத்திற்கு எதிரான பல கூறுகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். இந்த முன்னோட்டத்தைத்தான் யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்தப் பதிவிறக்கம்தான் உலகமயமாகி தற்போது பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இப்பிரச்சனை வெடித்தபிறகு, இப்படத்தை இயக்கிய ஆலன் ராபர்ட்ஸ் என்பவரும், நடித்த பிற நடிகர்களும் தாங்கள் ஏதோ சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, படத்தின் இயக்குநரையே வேறு யாரோ இயக்கியிருக்கிறார்கள். ஏதோ விட்டாலாச்சாரியார் படம் பார்த்த மாதிரியாக அல்லவா இருக்கிறது! நடித்தவர்களுக்கு தங்கள் கதாப்பாத்திரத்தின் தன்மை என்னவென்பது தெரியாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், தான் ஒரு சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டதாக இயக்குநர் குறிப்பிடுவதையும் மிகப் பெரிய அறநெறி மீறலாகவே கருதவேண்டும். அப்படியானால், அந்த சூத்திரதாரி யார்? இக்கேள்விக்கான பதிலில்தான் அமெரிக்காவின் அரசியல் அடங்கியிருக்கிறது. இப்படத்தைத் தயாரித்தவர் சாம் பகைல். இவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகைல் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் செய்துவந்த ஓர் இஸ்ரேலியர். இந்தப் படத்திற்கான தயாரிப்புச் செலவு 5 மில்லியன் டாலர்கள். இந்தத் தொகையை 100க்கும் மேற்பட்ட யூதர்களிடமிருந்து வசூலித்திருக்கிறார். இவர்கள் எல்லாம் இஸ்ரேலின் ஆதிக்கத்தை வலியுறுத்தும், இஸ்லாத்தை எதிர்க்கும் ‘சீயோன்’ அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்தத் தகவலை எரியும் பிரச்சனையோடு தொடர்புபடுத்தினால், அமெரிக்க - இஸ்ரேல் - பாலஸ்தீனம் - முஸ்லீம் என்ற அரசியல் பரிமாணம் நம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. வெறும் பத்துப் பேருக்கும் குறைவானவர்கள் திரையரங்கில் பார்த்தத் திரைப்படத்தை, இணையத்தில் வெளியிட்டுப் பரபரப்பாக்கி வசூல் வேட்டை செய்துள்ள இவர்களின் வியாபாரத் தந்திரத்தையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. இப்படங்களை அரசு தணிக்கை செய்யவில்லையா என்ற கேள்வி எழலாம். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இத்தகையத் திரைப்படங்கள் அமெரிக்காவில் நம் நாட்டைப் போன்று தணிக்கை செய்யப்படுவது கிடையாது. அமெரிக்காவில் தணிக்கை செய்யும் பொறுப்பை ஒரு தனியார் அமைப்பு செய்து வருகிறது. இவர்களது வேலை என்னவென்றால், எந்தத் திரைப்படத்தை எந்த வயதினர் பார்க்கலாம் என்பதை வரையறுத்துச் சான்றிதழ் வழங்குவது மட்டுமே. அது நல்ல படமா, கெட்ட படமா என்று தீர்மானிக்கும் வேலை எல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இதனால்தான், பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் இணையத்தை இப்பிரச்சனையில் தங்களால் கட்டுப்பட்டுத்த இயலாது என்று கையை விரிக்கிறது அமெரிக்கா. இந்தத் திரைப்படத்தை இஸ்லாத்திற்கு எதிரான கருத்தியல் மோதல் என்று வெறுமனே எடுத்துக்கொள்ள முடியாது. முகமது நபிகளை போலியான சமயவாதியாகவும், முட்டாளாகவும், காமுகனாவும் சித்தரித்திருக்கிறார்கள். கழுதையைப் பார்த்து ‘முதல் முஸ்லிம் விலங்கு’ என்கிறார்கள். என்னதான் இஸ்லாத்தின் கருத்தியலை கருத்துரிமையோடு விமர்சிக்கிறோம் என்று சமாதானம் சொன்னாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்மம், காழ்ப்புணர்ச்சி, பகைமை, வக்கிரம் ஆகியவையே இத்தகையக் காட்சிகளில் மேலோங்கி இருக்கின்றன. முகமது நபிகளை ஒரு சித்திரமாகவோ, நிழல்படமாகவோ, கற்பனை ஓவியமாகக்கூடப் பார்க்க விரும்பாது, அவரை மனதில் ஏற்றி வைத்திருக்கும் இஸ்லாமியச் சமூகத்திற்கு இத்திரைப்படம் மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். சமயம் குறித்த நேர்மறையான விவாதத்திற்குள் அல்லது கலந்துரையாடலுக்குள் இறங்காமல், சமயரீதியான உளவியலைக் காயப்படுத்தி, உணர்வுத் தளத்தைச் சீண்டிப்பார்த்துக் குளிர்காயும் அமெரிக்காவின் வக்கிர அரசியல் இதில் இழையோடுகிறது. இவ்வளவு பெரிய ஏகாதிபத்தியப் பின்புலத்தைக் கொண்ட இப்பிரச்சனையை, ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரம் என்ற கோணத்திலும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அமெரிக்காவின் ஊடக அதிகாரம் என்பது குறிப்பிட்ட இஸ்ரேல் சமூகத்தைச் சார்ந்தவர்களிடமே அதிகமாக உள்ளது என்று பல புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இஸ்ரேல் - அமெரிக்க உறவு அரசியலைத் தவிர்த்துவிட்டு, இந்தக் கருத்துச் சுதந்திரத்தைப் பேச முடியுமா? மேலும், ஊடகங்களில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தொடர்ச்சியாக ஒரு சில சமூகங்கள் மட்டுமே தாக்குதல்களுக்கு உள்ளாகி அவமானப்படுத்தப்படுவது எப்படி ? கருத்துச் சுதந்திரத்திற்கு முன்பாக, ஊடக வலிமை, ஊடக அதிகாரம் என்பன யார் கையில் இருக்கின்றன என்பதே இன்றைய கேள்வி. அமெரிக்காவுக்கு இணையாக ஊடகங்களை, குறிப்பாக, சமூக இணையதளங்களை ஆக்கிரமிக்கும் அதிகாரம் இஸ்லாமிய நாடுகளுக்கு ஒப்பீட்டளவில் இல்லை எனலாம். அந்த வகையில், அத்ததைய அதிகாரமும் வலிமையும் குறைவாகக்கொண்ட மக்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது என்பது நிராயுதபாணி மீது நடத்தும் தாக்குதல்தானே ! இதில் ஊடகம் ஏற்படுத்தும் தாக்கம்தான் நாம் அதிகம் கவனத்தில் கொள்ளத்தக்கது. திரைப்படம் என்பது திரையரங்கில் மட்டுமே பார்க்கக்கூடிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இன்றைக்கு இணையத்தில் யூடியூப்பின் பயன்பாடு மிகப்பெரும் வீச்சைக் கொண்டது. இதனால்தான், இஸ்லாம் மீதான கட்டுடைப்பை இப்படம் முன்வைக்கிறது என்பதைவிட, நொடியில் ஒரு பரப்புரை நடந்துவிடுகிறது என்பதே இப்பிரச்சனையின் மையம். இஸ்லாமியர்களின் காயப்பட்ட உணர்வு என்பது ஒருபுறமிருக்க, இஸ்லாமியர் அல்லாத மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம், இஸ்லாம் பற்றி நடந்த பரப்புரைக்குப் பதில் என்ன என்பதே இப்பிரச்சனையின் வேகத்தை அதிகரித்திருக்கிறது. இத்திரைப்படத்தை இணையத்தில் பார்த்தவர்கள் அத்தனை பேரும் இந்த அமெரிக்க ஊடக அரசியலைப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஊடக அதிகாரத்தின், வலிமையின் மையப் புள்ளி இந்தப் பரப்புரையில்தான் அடங்கியிருக்கிறது. மேலும், இத்திரைப்படத்தைப் பார்த்தவர்கள் இணையத்தில் முகமது நபிகள் குறித்த விவாத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த விவாதங்கள் முகமது நபி குறித்த கட்டுடைப்புக்கு வழிவகுக்கின்றன. இதுவும் இந்தப் பரப்புரையின் வெற்றிதான். இன்னொரு வகையில் பார்த்தால், மேற்கு உலகு நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பகைமைப் போட்டியில், இஸ்லாமிய நாடுகள் இப்பிரச்சனையில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதனால்தான், இப்பிரச்சனையில் போராடுபவர்களின் பார்வை யூடியூப்பிலும் கூகுளிலும் பதிந்திருக்கிறது. ஒரு சில நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்திருந்தாலும், இந்த இணையதளங்கள் இப்படத்தை நீக்க மறுத்துவிட்டன. அந்த வகையில் ஊடகத்தின் வலிமை மீண்டும் ஒருமுறை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஆதிக்க ஊடகங்கள் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் - இஸ்லாமியப் பயங்கரவாதம். ஊடகங்களின் பயன்பாட்டில் இருந்த சொற்கள் இன்றைக்கு சமூகத்தின் பொதுச் சிந்தனையில் விதைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்தியலை பொதுச் சிந்தனையில் உள்வாங்கிக் கொண்டவர்களுக்கு, இத்திரைப்படம் ஒரு வலுவூட்டலாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. தனக்கான ஓர் எதிரியைக் கட்டமைத்து தன் வல்லாதிக்கத்தை நிலைநாட்டுவது ஏகாதிபத்திய மனோபாவம். அந்த வகையில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த இஸ்லாமிய எதிர்ப்பின் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை அமெரிக்கப் படைவீரர்கள் கொளுத்திய செய்தியை இந்த மனோபாவத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். ஹாலிவுட் திரைப்படங்களில் இஸ்லாத்தின் மீதான இத்தகையத் தாக்குதல் ஒன்றும் புதிதல்ல. அவர்களது திரைப்படங்களில் பல ஆண்டுகளாகவே எதிர்மறையானச் சித்தரிப்புகளுக்கு ஆளானவர்களின் பட்டியலில் கறுப்பு இன மக்களும் கம்யூனிசவாதிகளும் முஸ்லீம்களும் அடங்குவர். அதன் ஒரு மிகையான வெளிப்பாடுதான் இத்திரைப்படம். இன்னும் சொல்லப் போனால், இது இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஊடகப் போர் என்றே சொல்ல வேண்டும். இவை எல்லாவற்றையும்விட, இன்று அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்சனைகளைத் திசை திருப்பி விட்டிருக்கிறது இந்தப் பிரச்சனை. thanks : keetru

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக