வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இந்தியா ஃபலஸ்தீனுக்கு ஆதரவளிக்கவேண்டும் – காலித் மிஷ்அல்!


8 Sep 2012 தோஹா:ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திலும், அணிசேரா கொள்கையிலும் மகத்தான பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியா, இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் காலித் மிஷ்அல் கோரிக்கை விடுத்துள்ளார். ஈதுல் ஃபித்ர்(ஈகைத்திருநாள்) பெருநாளில் கத்தர் தலைநகர் தோஹாவுக்கு வருகைத் தந்த காலித் மிஷ்அல் தேஜஸ் பத்திரிகையின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்தினார். அப்பொழுது அவர் கூறியது: “இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டீஷ் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஃபலஸ்தீன் மக்கள் மீதான அநீதியின் வரலாறு துவங்கியது. பிரிட்டனின் ஆதரவுடன் நடந்த இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, அழகான சொந்த மண்ணில் கண்ணியத்துடன் உழைத்து வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தின் கனவுகளை தகர்த்து எறிந்தது. பிராந்தியத்தில் தங்களின் ஆக்கிரமிப்பை உறுதிச்செய்ய இஸ்ரேல் போர்களை தொடுத்தது. தரை, கடல், வான் வழிகள் மூலமாக அவர்கள் ஃபலஸ்தீன் மக்களை கொன்றொழிப்பதை தொடர்கின்றனர். ஃபலஸ்தீன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். காஸ்ஸாவின் நிலைமை இன்னமும் மோசம். இஸ்ரேலின் தடையின் காரணமாக இன்னொரு சிறைச்சாலையாக காஸ்ஸா மாறியுள்ளது. ஆனால், இவைகளின் மூலம் ஃபலஸ்தீன் மக்களின் உறுதியை அவர்களால் சீர்குலைக்க முடியவில்லை. ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை அவர்கள் போராடிக் கொண்டே இருப்பார்கள். இறைவனின் உதவியுடன் நாங்கள் வெற்றிப் பெறுவோம். நீதிக்கான இப்போராட்டத்தில் அரபு, முஸ்லிம் நாடுகள் மட்டுமல்ல இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளின் ஆதரவும் தேவை. நாகரீகங்களின் தொட்டிலான எகிப்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நிச்சயமாக அரபுலகிற்கு பலனளிக்கும். அதேவேளையில் கடந்த காலங்களில் ஃபலஸ்தீன் உள்ளிட்டஎதிர்ப்பு போராட்டங்களை ஆதரித்த சிரியா, சுதந்திரம் கோரி வீதிகளில் இறங்கி போராடும் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை வருத்தத்திற்கு உரியதாகும். இவ்விவகாரத்தில் ஹமாஸ், சிரியா மக்களூக்கு ஆதரவு அளித்துள்ளது. அரை நூற்றாண்டுகளாக தொடரும் போராட்டத்திற்கு பிறகு இஸ்ரேலுடனான அணுகுமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த காலித் மிஷ்அல், யதார்த்தங்கள் மாறாது என்று பதிலளித்தார். தத்துவங்களும், விழுமியங்களும், ஆரோக்கியகரமான கொள்கைகளும் ஒரு போதும் மாறாது. அதாவது ஃபலஸ்தீன் பூமியின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். புனித மஸ்ஜித் மற்றும் புனித சின்னங்கள் மீதான உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். சியோனிசஆக்கிரமிப்பிற்கு சக்தியின் மொழி மட்டுமே தெரியும். காஸ்ஸா முனையில் இருந்து இஸ்ரேல் வாபஸ் பெற்றதற்கு காரணம் இன்திபாழா (எழுச்சிப் போராட்டம்)உருவாக்கிய நிர்பந்தத்திற்கு அடிபணிந்து மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வாபஸ் பெறக் காரணமும் எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாததே. ஸினாய் பகுதியில் இருந்து 1973-ஆம் ஆண்டு இஸ்ரேல் வாபஸ் பெறக் காரணமும் அப்போரில் ஏற்பட்ட தோல்வியாகும். முஸ்லிம்கள் என்பதுடன், இந்திய சமூகத்தின் பிரிக்க முடியாத பகுதி தாம் என்ற எண்ணம் இந்திய முஸ்லிம்களுக்கு உருவாகவேண்டும். தேசத்தை நேசித்துக் கொண்டே இஸ்லாத்தின் கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொண்டு வாழவேண்டும். ஃபலஸ்தீன் மட்டுமல்ல, அரபுலகம் மற்றும் இதர நாடுகளுடன் கத்தர் நாட்டு ஆட்சியாளர்கள் காட்டும் பச்சாதாபம் பாராட்டத்தக்கது. இவ்வாறு காலித் மிஷ் அல் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக