வெள்ளி, 28 செப்டம்பர், 2012

முஸ்லிம் என்பதால் பதவி உயர்வை தடுக்கிறார்கள் – சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்!


மும்பை:முஸ்லிம் என்ற காரணத்தால் தான் நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். த ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அஜ்மல்கான் கூறியது: “நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நீதிபதி பதவிக்கு நான் தகுதியானவர் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. அதற்கு அனுமதி ஆவணமும் எனக்கு வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் பதவி உயர்வு தடைப்பட்டுப் போனது. மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத்துறையின் குற்றச்சாட்டு எனது பதவி உயர்வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
நண்பர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள் ஆகியோரிடம் என்னைக் குறித்து விசாரித்துள்ளனர். தேசத்துடன் எனக்கு எவ்வளவு தூரம் பற்று இருக்கிறது என்பதை ஆராயவே இந்த விசாரணை. இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனைக்கு ஆளானோம். ரமலான் மாதத்தில் ஊரில் உள்ள மதரஸா மற்றும் மஸ்ஜிதுக்கு நன்கொடை அளித்ததை குறித்தும் ஐ.பி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 1983-89 காலக்கட்டத்தில் மதுரை அரசு சட்டக்கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் படிப்பில் சேர்ந்த 140 நபர்களில் நானும் ஒருவன். பின்னர் தேர்வில் வெற்றிப் பெற்று முதல்10 இடங்களை பிடித்தவர்களில் நானும் இடம் பெற்றேன். ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலான எனது வழக்கறிஞர் பணியில் சமூக பாரபட்சத்தின் வேலிகளை தாண்டுவதில் நான் தோல்வியை தழுவினேன். ஒரு பொது விசாரணை நடத்தப்பட்டால், எனது பெயர் கான் என்றும், நான் தீவிரவாதி அல்ல என்றும் இந்த தேசத்திற்கு என்னால் உணர்த்த முடியும்.” என்று அஜ்மல் கான் கூறுகிறார். நிரபராதிகளான முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள் என்றும், மதத்தை பார்த்து யாரையும் சிறையில் அடைக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது. பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் ‘மைநேம் ஈஸ் கான்! ஐ அம் நாட் எ டெரரிஸ்ட்’ என்ற திரைப்படத்தின் உரையாடலை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக