சனி, 15 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 9


ஜின்னா அரசியலில் நுழையும் போது ஒரு முஸ்லிமாக நுழைந்தார் என்பதை விட ஒரு நாட்டு பற்றுள்ளவராக தான் நுழைந்தார் என்று சொல்லவேண்டும். இதனை வரலாற்று ஆசிரியர் சேர்வாய் இப்படி குறிப்பிடுகிறார் " ஜின்னா 1906 ஆம் ஆண்டு காங்கிரசில் இணையும் போது ஒரு தேசியவாத முஸ்லிமாக தான் இருந்தார் ". அதனால் தான் இந்து முஸ்லிம் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு முன் நின்றார். இதன் மூலம் காங்கிரசில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த நேரத்தில் ஜின்னா காங்கிரசிலும், முஸ்லிம் லீகிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஆதிக்கம் செலுத்தினார். இந்தியாவுக்கு ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி தருவதிலும் , அதனை காங்கிரஸ் , முஸ்லிம் லீக் மாநாடுகளில் ஒப்புதல் வாங்கி தருவதிலும் ஜின்னா முக்கிய பங்கு வகித்தார்." என்று விடுதலை போராட்ட வீரரும், வரலாற்றாசிரியருமான கே.எம்.முன்ஷி குறிப்பிடுகிறார். அந்த அளவுக்கு ஜின்னா பிரிவினைவாதியாக இல்லாமல் தேசியவாதியாகத்தான் இருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் ஒருதலை பட்சமான நடவடிக்கைகளும், கருத்துகளும் முஸ்லிம்கள் மனதில் சந்தேகறேகையை உண்டாக்கியது. அதற்கேற்றார் போல் 1937 ல் நடைபெற்ற தேர்தல் முஸ்லிம் லீக்கிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் ஜவஹர்லால் நேரு கூட முஸ்லிம் லீக்கை புறக்கணித்தார். இந்தியாவில் முஸ்லிம் லீக் என்ற கட்சியே இல்லை , காங்கிரஸ் கட்சி மட்டும் தான் இருப்பது போல் பேசினார். இது முஸ்லிம்கள் மனதில் ஒருவித அச்சத்தை உண்டாக்கி பிரிவினைக்கான விதையை தூவியது. ஒரு பக்கம் இந்துத்துவம் பேசக்கூடியவர்கள் நாட்டை தூய்மையாக்க வேண்டும் என்று முஸ்லிம்களை பிரித்து பிரிவினைவாதம் பேசினார்கள், மறுபக்கம் காங்கிரசும் அதன் செயல்பாடுகளை ஒரு சார்பாக அமைத்தது முஸ்லிம்களின் அச்சத்தை அதிகமாகியது. இந்த அச்சம் நியாம் தான் என்பதை பிரிட்டிஸ் பிரதமர் கிளமன்ட் அட்லி ஒத்துகொண்டார். அதே போல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த வைஸ்ராய் வேவல் அவர்களும் இதனை சரிதான் என நினைத்தார். இங்குள்ள காங்கிரசாரும் தனி நாடு உருவானால் இந்தியாவின் ஏகபோக ஆட்சியை அனுபவிக்கலாம் , ஆட்சியில் சம பங்கு என்ற நிலை இனி இல்லை என்று நினைத்து பிரிவினையை ஆதரித்தார்கள். பாகிஸ்தான் என்ற தனிராஜியம் உதயமாகும் நிலை உருவானது. கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். அடுத்த தொடருடன் முடிவடையும். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக