திங்கள், 10 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 6


தற்கால இந்த்துவ சிந்தனை கொண்ட எழுத்தாளர்களே இந்திய தேசப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் காரணம் இல்லை என்று ஒத்துகொள்கிறார்கள். உண்மையை பொய்யின் மீது வீசுகிறோம். பொய் சுக்குநூறாக சிதறுகிறது. பொய் அழிந்தே தீரும் என்று இறைவன் திருக்குரானிலே கூறுவது போல நயவஞ்சகர்களும் , சுயநலவாதிகளும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் உண்மை வெளி வந்துவிடும் என்பதற்கு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை ஓர் உதாரணம். யாரெல்லாம் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுடைய அணியிலிருந்தே முஸ்லிம்கள் பிரிவினைக்கு காரணம் இல்லை என்ற உண்மை வெளிப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். சின் ஆங்கில வெளியீடான ஆர்கனைசர் என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிய மல்கானி என்கிற இந்துத்துவ சிந்தனை கொண்ட எழுத்தாளர் 1988 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தேசப் பிரிவினையை பற்றி எழுதும்போது " தேசப்பிரிவினைக்கு முஸ்லிம்களோ , இந்துக்களோ காரணமில்லை. இதற்கு காரணம் ஆங்கிலேயர்கள் தான். அவர்கள்தான் பிரிவினை வேலையை திட்டமிட்டு, வளர்த்து , இறுதியில் செயல் படுத்தி விட்டார்கள். " என்று குறிப்பிடுகிறார். அதாவது நானும் இல்லை , நீயும் இல்லை மூன்றாவது ஆள் ஆங்கிலேயன் என்று கூறி உண்மையையும் சொல்ல வேண்டும் அதே நேரம் தனது சகாக்களிடமும் மாட்டி கொள்ளக் கூடாது அதனால் ஆங்கிலேயர் மேல் பழி , இனி அவன் வரவா போகிறான். இவர் மட்டும் இப்படி முஸ்லிம்கள் இல்லை என்று சொல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பா.ஜ.க. வால் துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தபபட்டவரும், டார்ஜிலிங் எம்.பி. யுமான ஜஸ்வந்த் சிங் ( ராஜஸ்தானை சேர்ந்த இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். 1960 ஆம் ஆண்டு ராணுவத்தில் பணியாற்றியவர் ) தான் ஆய்வு செய்து " ஜின்னா - இந்தியா - பிரிவினை - சுதந்திரம் " என்ற நூலை 2007 ஆகஸ்ட் 17 ல் வெளியிட்டார். இந்த நூலில் " இந்தியா வின் பிரிவினைக்கும், பாகிஸ்தான் உருவாக்கத்திற்கும் ஜின்னா காரணம் இல்லை, நேரு தான் இந்த தேசப் பிரிவினைக்கு பெரிதும் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜின்னா இந்தியாவில் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடு பட்டவர் என்று புகழ்ந்துள்ளார். இந்த கருத்தை தெரிவித்ததற்காக பல முனைகளில் இருந்து விமர்சனங்களால் துளைத் தெடுக்கப்பட்டார். இறுதியில் ஜஸ்வந்த் சிங் பா.ஜ.க. விலிருந்தே விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. விலகவும் செய்தார். பா.ஜ.க வில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பல வருடங்கள் இருந்த கட்சியையே விமர்சித்தார். இப்போது மீண்டும் அதே கட்சியில் இணைந்து விட்டார் என்பது வேறு விஷயம். இவர்கள் எல்லாம் இப்போது இப்படி சொல்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை, ஏனென்றால் இவர்களுடைய முன்னோர்களே இந்த கருத்தில் தான் இருந்தார்கள். இந்து மகா சபையின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான பாய் பரமானந்தர் 1905 ஆம் ஆண்டே இந்த கருத்தை கொண்டிருந்தார். அவர் வெளியிட்ட கருத்தை பாருங்கள் ." இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியை சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தான் முதலியவற்றோடு இணைத்து ஒரு முஸ்லிம் நாடு உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கு வந்துவிட வேண்டும். இங்குள்ள முஸ்லிம்கள் அங்கு செல்ல வேண்டும். " இதனை வரலாற்று ஆய்வாளரான பேராசிரியர் மார்க்ஸ் தன்னுடைய இந்துத்துவம் ஓர் பன்முக ஆய்வு என்ற நூலில் குறிப்பிடுகிறார். பாய் பரமானந்தர் கொண்டிருந்த அதே கருத்தான முஸ்லிம்களுக்கு தனி நாடு பிரித்து கொடுத்திட வேண்டும், இந்து ராஷ்டிரம் உருவாக்கப் படவேண்டும் என்ற கருத்தை 1917 முதலே வி.டி சவர்க்கார் கொண்டிருந்தார் என்று வரலாற்றாசிரியர் ஆர்.என்.அகர்வால் தி நேஷனல் மொவ்மென்ட் ( தேசிய இயக்கம்) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வரலாற்றாசிரியர் எச்.எம்.சேர்வாய் அவர்களும் ஜின்னா 1906 ஆம் ஆண்டு தான் அரசியலில் நுழைந்தார் என்று குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கு முன்பே பிரிவினைவாதம் பேசப்பட்டு விட்டது என்பதை நாம் வரலாற்று ஆதாரங்கள் அடிப்படையில் அறிந்தோம். அப்படி என்றால் இத்தனை காலம் முஸ்லிம்கள் இந்த குற்ற சாட்டை சுமந்து கூனி குறுகினார்களே அதற்கு என்ன பரிகாரம் பண்ணுவீர்கள். இந்த பிரிவினையை வைத்து எத்தனை கலவரங்கள் ? எத்தனை உயிர் பலிகள் ? இந்த மோசமான நிலைமைகள் இனியாவது மாற வேண்டும். தேசப்பிரிவினை பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த தொடரில் காண்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக