சனி, 27 அக்டோபர், 2012

கசாபுக்கான ரூ .28 கோடி செலவுக்கு பொறுப்பு ஏற்பது யார்?


மும்பை: மும்பை தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப், கடந்த 2008 முதல் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறான். சிறைக்குள்ளேயே கசாப் உயிருக்கு குறி வைக்கப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து, துணை ராணுவப்படையை பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசை மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இந்தோ , திபேத் எல்லை பாதுகாப்பு படை கமாண்டோக்கள் 250 பேர் சிறைக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும், கசாப் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து, அதே சிறையில் இயங்கி வரும் சிறப்பு நீதிமன்றம் வரை 20 அடி நீளத்துக்கு குண்டு துளைக்காத சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. சிறைக்கு பாதுகாப்பு அளித்து வரும் கமாண்டோ படையினரு க்கு மாதம் ரூ .77 லட்சம் செலவாகிறது. இதுவரை மொத்தம் ரூ .28 கோடி செலவாகி இருக்கிறது. இந்த தொகையை யார் செலுத்துவது என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாட்டையே குறிவைத்து நடத்தப்பட்டது என்பதால் இந்த தொகையை மத்திய அரசுதான் ஏற்க வேண்டும் என்பது மாநில அரசின் வாதம். மத்திய உள்துறை அமைச்சகம் இதை ஏற்கவில்லை. கசாபின் பாதுகாப்புக்கு செலவிட வேண்டியது மகாராஷ்டிரா அரசின் கடமை என்கிறது மத்திய அரசு. எனவே, மகாராஷ்டிராவுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இதை கழித்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக