வியாழன், 25 அக்டோபர், 2012

பக்ரீத் பண்டிகை தலைவர்கள் நல்வாழ்த்து


தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து : சென்னை: பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உள்ளம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும் நன்நாளாகவும், ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்று கூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுவதே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப தன் ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிம் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தினை உலகுக்கு உணர்த்தும் உன்னத நாள் இத்திருநாள் ஆகும். நபிகள் நாயகம் போதித்த அன்பு, அமைதி, மனிதநேயம் தழைத்தோங்க, அனைவரும் அன்னாரின் உன்னதமான வழியினைப் பின்பற்றி பாசமிக்க சகோதர, சகோதரிகளாய் மன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ இந்தத் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி : சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி: ‘‘தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத்தின் மேண்மையைப் பறைசாற்றும் தினமாகும். சமூக அவலங்களான வன்முறை, வறுமை, சுற்றுச்சூழல், சீர்கேடு, லஞ்ச ஊழல் முறைகேடுகள், மக்களின் ஜீவாதார உரிமைகளை ஆதிக்க சக்திகள் தடுத்தல் உள்ளிட்ட உலகளாவிய தீமைகளை, சமூக அவலங்களைக் களைய நாம் தியாகம் செய்யத் தயாராவோம். விட்டுக் கொடுத்தல், தம்மிடம் உரியமை இல்லாதார்க்கு வழங்குதல், உரிமைகளை அறத்தின் வழிநின்று போராடுதல் என்ற அம்சங்களை வீடுதோறும் பரப்பி மானுட சமூகம் மேம்பட அனைவரும் ஒருங்கிணைவோம்’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக