செவ்வாய், 23 அக்டோபர், 2012

சவூதி அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் பொறியாளர் இந்தியாவிடம் ஒப்படைப்பு


புதுடெல்லி:சவூதி அரேபியாவின் ஜுபைலில் வைத்து கடந்த மே மாதம் சவூதி அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளம் முஸ்லிம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று காலை டெல்லி விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஃபஸீஹை டெல்லி போலீஸ் கைதுச் செய்தது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு, 2010-இல் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகிய வழக்குகளில் ஃபஸீஹிற்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் லஷ்கர்-இ- தய்யிபா இயக்கத்தின் உறுப்பினர் என்றும் போலீஸ் கூறுகிறது.துவக்கத்தில் ஃபஸீஹ் இந்திய முஜாஹிதீன் உறுப்பினர் என்று போலீஸ் கூறியது குறிப்பிடத்தக்கது. ஃபஸீஹ் சவூதியில் வைத்து கைதுச்செய்யப்பட்டு ரகசிய இடத்தில் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.தன்னை தடுத்து வைத்துவிட்டு ஃபஸீஹை இந்தியா மற்றும் சவூதி அதிகாரிகள் பிடித்துச் சென்றதாக அவரது மனைவி நிகாத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஃபஸீஹ் எங்கிருக்கிறார்? என்று உச்சநீதிமன்றம் சி.பி.ஐ மற்றும் மத்திய அரசிடம் கேள்வியை தொடுத்தது. ஆனால், மத்திய அரசு முறையான பதிலை அளிக்காமல் மழுப்பி வந்தது.இந்நிலையில் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை விடுத்தை தொடர்ந்து, ஃபஸீஹ் சவூதி அரேபியா அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்தது. இண்டர்போலும் ஃபஸீஹிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை வெளியிட்டிருந்தது. கூடுதல் ஆதாரங்களை ஃபஸீஹை இந்தியாவிடம் ஒப்படைக்க சவூதி அரேபியா அதிகாரிகள் கேட்டதாகவும் செய்தி வெளியனது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கு பிறகு ஃபஸீஹ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெங்களூர், டெல்லி குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் என்று கூறி கர்நாடகா போலீஸ் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளையில் ஃபஸீஹை இந்தியாவிடம் ஒப்படைத்த சவூதி அரேபியாவின் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கைது செய்யப்பட்ட 13 இந்திய முஜாஹிதீன் உறுப்பினர்களுக்கு ஃபஸீஹ் உதவினார் என்று ஆர்.கே.சிங் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக