வியாழன், 11 அக்டோபர், 2012

குஜராத் காங்., தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அறிவிப்புகள்


ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் நேற்று வெளியிட்ட, தேர்தல் அறிக்கையில், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரைக் கவரும், பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும், குஜராத் மாநிலத்திற்கு, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர், 13 மற்றும் 17ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் வேலைகளில், கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி, நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பரபரப்பை மேலும் பன்மடங்காக்கியுள்ளது. ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாநில காங்கிரஸ் தலைவர், அர்ஜுன் மோத்வாடியா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், சக்திசிங் கோஹில் ஆகியோர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் உள்ள, முக்கிய அம்சங்களாவன: சிறுபான்மையினர் நலத்துறை அமைக்கப்படும்; புதிய, மாநில சிறுபான்மையினர் கமிஷன் ஏற்படுத்தப்படும்; புதிய, ஹஜ் இல்லம் கட்டப்படும். மேலும், சிறுபான்மையினருக்கு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள, 15 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு, இலவச வீட்டு மனை வழங்கப்படும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான, காலியாக உள்ள அரசு பணியிடங்கள், விரைந்து நிரப்பப்படும்; நாடோடி பழங்குடியினருக்கு, மேம்பாட்டு கழகம் துவக்கப்படும். இதுபோன்ற, பல அறிவிப்புகள், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக