திங்கள், 22 அக்டோபர், 2012

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்


தங்களின் நம்பிக்கை துரோகிகளாகக் கருதியோரை, எப்படியெல்லாம் கொடூரமாக சித்ரவதை செய்து, விடுதலைப் புலிகள் கொன்றனர் என்பதை, புலிகளின் அமைப்பிலேயே உறுப்பினராக இருந்த, முன்னாள் பெண் விடுதலைப் புலி நிரோமி என்பவர், தோலுரித்துக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில், 1987ம் ஆண்டு, நிரோமி டிசோசா என்ற பெண் சேர்ந்தார். விரைவிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, நடந்த சம்பவங்களைத் தொகுத்து, "தமிழ் டைகர்ஸ்' (தமிழ் பெண் புலி) என்ற பெயரில், புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், நிரோமி எழுதியுள்ளதாவது:
சித்ரவதை: இந்திய அமைதிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, சண்டை நடந்த போது, இந்தியப் படைக்கு உளவு கூறியதாக, வெள்ளை என்ற வீரரை சித்ரவதை செய்த விடுதலைப் புலிகள், கழுத்தளவுக்கு மண்ணுக்குள் அவரை புதைத்து வைத்து, "சயனைடு' விழுங்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, ஜெஸ்டின் என்ற விடுதலைப் புலி வந்து, வெள்ளையின் தலையை, கோடாரியால் வெட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த பிற விடுதலைப் புலிகள் அனைவரும் சேர்ந்து, சத்தமாக சிரித்தனர். ஒரு கரப்பான் பூச்சியை எப்படி கொல்வார்களோ, அதேபோல் வெள்ளையைக் கொன்றனர். வன்னி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட, மாத்தைய்யா, 18 வயதே நிரம்பிய சாந்தன் என்ற விடுதலைப் புலியை, சக பெண் விடுதலைப் புலியை காதலித்தார் என்பதற்காக, நெற்றியில் சுட்டுக் கொன்றார். சாந்தனின் உடலை, இருவர், காலைப் பிடித்து இழுத்து வந்தபோது, வழி நெடுகிலும் ரத்தம் வழிந்தோடியது.
சுட்டுக்கொலை: இதேபோல, தொடர்ந்து பல சித்ரவதை சம்பவங்களைப் பார்த்த பின், இது போன்ற வன்முறையால் தனி நாடு பெற முடியாது என, முடிவு செய்து, 1988ல், விடுதலைப் புலி கள் அமைப்பில் இருந்து வெளியேறினேன். கொள்ளை: நான், விடுதலைப் புலிகள் அமைப்பில் சேருவதற்கு முன்கூட, எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களை விடுதலைப் புலிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். "டெலோ' அமைப்பைச் சேர்ந்தவர்களை, மரத்தில் தூக்கிலிட்டனர்; உயிருடன் தீ வைத்து கொளுத்தினர். "ஈ.பி.ஆர்.எல்.எப்., அமைப்பைச் சேர்ந்தவர்களையும் படுகொலை செய்தனர். இந்தியப் படையினரிடம் இருந்து தப்பி ஓடும்போது, கடைகளுக்குள் நுழைந்து, கோழி இறைச்சி, உடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். பெண் விடுதலைப் புலிகளாக இருப்பவர்கள், அலங்காரப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சில பெண்கள், கடைகளில் இருந்து முக அலங்கார களிம்புகளையும், நக பாலீசுகளையும் திருடினர். இவ்வாறு, அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக